என் மலர்
இந்தியா
ராஜஸ்தானில் பயங்கரம்: கடத்தப்பட்ட இளம்பெண் சுட்டுக் கொலை.. கிணற்றில் சடலம் மீட்பு
- காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது.
ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில், 19 வயது பட்டியலின பெண் ஒருவர் ஜூலை 12 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து 4 பேரால் கடத்தப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவரின் உடல் ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டதாக பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளன. இவ்விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.
இவ்விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மேலும் கூறியிருப்பதாவது:
அதிகாலை 3 மணி அளவில் மூன்று நான்கு பேர் வந்து என் மகளின் வாயில் துணியை அடைத்து அவளை தூக்கிச் சென்றனர். நான் அலறி அழுதேன். உடனே காவல் நிலையத்திற்கு சென்றோம். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். வழக்கு பதிவு செய்வதால் எதுவும் நடக்க போவதில்லை என்று கூறி என்னை வெளியேறச் சொன்னார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை போலீசார் வரும் நிலையில், இதுவரை ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
"வழக்கில் எங்களுக்கு சில துப்புகள் கிடைத்துள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவரின் தாயிடம் பேசினோம். அவர் யாரையாவது சந்தேகிக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் இதுவரை எவர் பெயரையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், "கல்லூரிக்கு செல்லும் ஒரு தலித் சிறுமியின் உடலில் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் என் நெஞ்சை உலுக்குகிறது. இந்த விவகாரம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. நிர்வாகம் எல்லா கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், "மிகவும் முக்கியமான இந்த விஷயத்தை ஆழமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.
"பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது. கற்பழிப்பு புகார்கள் குறித்து தடயவியல் நிபுணர்கள் சரிபார்ப்பார்கள். இழப்பீடு மற்றும் பிற கோரிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்ப உறுப்பினர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்", என்று கரௌலி எஸ்.பி. மம்தா குப்தா தெரிவித்தார்.