என் மலர்
இந்தியா
ஜனநாயகம் செயல்பட வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம்: சி20 கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு
- பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன.
- சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
ஜெய்ப்பூர்:
ஜி20 தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி-20 சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் சமூகங்களுக்கான கூட்டம் (சி20 கூட்டம்) இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத், ஜெய்ப்பூர் எம்பி ராம்சரண் போஹ்ரா,
உலகெங்கிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் G20 அதிகாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 31ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இன்றைய கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ஜனநாயகம் செயல்படுவதற்கு வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை என்றார்.
தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் கலந்துரையாடல்களிலும், கூட்டு முயற்சிகளிலும் ஈடுபட உதவுவதாலும், தேசிய இலக்குகளை அடைவதற்கு உதவுவதாலும் இது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம். சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்,
சி20 கூட்டத்தின் நிறைவு நாளில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜி20 இந்தியா ஷெர்பா அமிதாப் காந்த் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.