என் மலர்
இந்தியா

கவர்னர் விவகாரம்: வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
- பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒரு வருடம் 3 மாதம் கழித்து நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றம் முறையீடு.
கேரள மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த பெஞ்சில் இருந்து நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்விடம் மனுதாக்கல் செய்தது.
இதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா "குறிப்பிடப்பட்ட மனுவை மூவ் செய்யுங்கள். நான் பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கே.கே. வேணுகோபால் "நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் அனுப்புகிறார், குடியரசுத் தலைவர் அதை ஒரு வருடம் 3 மாதங்களுக்கு வைத்திருக்கிறார். இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது மிக மிக அவசரமான விசயம்" எனத் தெரிவித்தார்.
இதே விவகாரத்தில் ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்ச் முன் தமிழக தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், இரண்டு வருடம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.