என் மலர்
இந்தியா
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
- கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள்.
- மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்தேதி தொடங்கி கடந்த 26-ந்தேதி முடிந்தது. மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். மண்டல பூஜை முடிந்து கடந்த 26-ந்தேதி இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை (30-ந்தேதி) கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடையை திறக்கிறார்.
அதன்பிறகு பதினெட்டாம்படி அருகே உள்ள ஆழியில் தீ மூட்டப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு சீசனுக்கான மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை ஐயப்பனுக்கு திருவாபாரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
அததைத்தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் எனவும், 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி காலை பந்தள மன்னர் பிரதிநிதி சாமி தரிசனம் செய்ததும் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பக்தர்களுக்கான அனுமதி மண்டல பூஜை சீசன் காலத்தில் பின்பற்றியதை போன்றே மகரவிளக்கு பூஜை சீசன் காலத்திலும் பின்பற்றப்படுகிறது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தினசரி ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலைக்கு தகுந்தாற்போல் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மண்டல பூஜை காலத்தில் பம்பையில் 7 ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படுகிறது. பத்தினம் திட்டாவில் தேவசம்போர்டு மந்திரி வாசவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.