என் மலர்
இந்தியா

ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக பணத்தை வீணடிக்கிறது: அஜித்பவார் குற்றச்சாட்டு
- கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
- கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது.
மும்பை :
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை சென்று சேரவில்லை. மராட்டியம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நான் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் கவனித்தேன்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் விவசாய விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை.
எனவே கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நடத்தும் வழக்கமான தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதற்கு பதிலாக புதிய கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, "அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாநில அரசு மாற்றி உள்ளது.
இந்த 2 மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை செயல்படுத்த அரசு தவறிவிட்டது" என்றார்.