என் மலர்
இந்தியா

கோப்புப் படம்
பாம்புகள், முதலைகள், கொலைப் பட்டினி.. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கூறும் பேராபத்து பயணம்

- ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன்.
- இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் நேற்று முன் தினமும் அமெரிக்கப் போர் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.
இரண்டாவதாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 116 பேரில் 38 வயதான மன்தீப் சிங் ஒருவர். அவர் தனது ஆபத்தான அமெரிக்க டாங்கி ரூட் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் இப்படி விவரிக்கிறார்.
"நான் என் ஏஜென்ட்டுடன் பேசியபோது, ஒரு மாதத்திற்குள் என்னை சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வேன் என்று அவர் கூறினார். ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன். கடந்த ஆகஸ்ட் மாதம் அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் தொடங்கியது.
டெல்லியில் இருந்து, நான் மும்பைக்கும், பின்னர் நைரோபிக்கும், பின்னர் வேறு நாடு வழியாக ஆம்ஸ்டர்டாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து, எங்களை சுரினாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நான் அங்கு சென்றதும், துணை ஏஜென்ட்கள் ரூ.20 லட்சத்தைக் கேட்டனர். அதை எனது குடும்பம் இந்தியாவில் உள்ள ஏஜென்டிடம் செலுத்தியது.
அதன்பின் சுரினாமிலிருந்து, என்னைப் போன்ற பலருடன் நெரிசலான ஒரு வாகனத்தில் ஏறினோம். நாங்கள் கயானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்து பல நாட்கள் இடைவிடாத பயணம். நாங்கள் கயானாவையும், பின்னர் பொலிவியாவையும் கடந்து ஈக்வடாரை அடைந்தோம்.
பின்னர் எங்கள் குழுவினரை ஏஜென்ட்கள் கடுமையான பனாமா காடுகளைக் கடக்கச் செய்தனர்.
இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.
13 நாட்களுக்கு, 12 கால்வாய்களை உள்ளடக்கிய கடினமும் ஆபத்தும் நிறைந்த பாதையில் நாங்கள் சென்றோம். முதலைகள், பாம்புகள் என அனைத்தையும் நாங்கள் கடந்து சென்றோம்.
பாம்பு உள்ளிட்ட ஆபத்தான ஊர்வன ஜந்துக்களை சமாளிக்க குச்சிகள் வழங்கப்பட்டன. சரியான உணவு என்பது குறித்து சிந்திக்கவே முடியாது. அரை வேக்காட்டில் வேகவைத்த 'ரொட்டிகள்' மற்றும் சில நேரங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டோம். நாங்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயணம் செய்தோம்.
பனாமாவைக் கடந்த பிறகு, எங்கள் குழு கோஸ்டாரிகாவில் உள்ளூர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, பின்னர் ஹோண்டுராஸுக்கு எங்கள் பயணத்தைத் தொடங்கியது. அங்கு எங்களுக்கு சாப்பிட கொஞ்சம் அரிசி சாப்பாடு கிடைத்தது.
ஆனால் அதன்பின் நிகரகுவா வழியாக கடக்கும்போது எங்களுக்கு எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. இருப்பினும், குவாத்தமாலாவில், தயிர் சாதம் சாப்பிடும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் டிஜுவானாவை அடைந்தபோது, சீக்கியனான என் தாடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்டது.
ஜனவரி 27 ஆம் தேதி காலை, அமெரிக்காவிற்குள் பதுங்கிச் செல்லும் எல்லை வழியாக கடந்து சென்றபோது அமெரிக்க எல்லைக் காவல்துறையினரால் நாங்கள் கைது செய்யப்பட்டோம்.
நாங்கள் நாடு கடத்தப்படுவோம் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறினர். நாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டோம். அதன் பின் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.