என் மலர்
இந்தியா
வந்தே பாரத், சதாப்தி ரெயில்களின் வேகம் விரைவில் அதிகரிப்பு- தென்மேற்கு ரெயில்வே தகவல்
- தற்போது வந்தே பாரத் ரெயில் பெங்களூரு-சென்னை இடையே 4 மணி நேரம் 20 நிமிடம் பயண நேரமாகும்.
- இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு- தமிழகத்தின் தலைநகர் சென்னை இடையே தினமும் 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது மைசூரு-பெங்களூரு வந்தேபாரத் ரெயில், சதாப்தி ரெயில் ஆகும்.
இந்த நிலையில் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும் சதாப்தி ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அதாவது, பெங்களூரு சிட்டி (கிராந்தி வீராசங்கொள்ளி ராயண்ணா) ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரெயில் ஜோலார்பேட்டையை காலை 9.28 மணிக்கு சென்றடைந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ரெயில் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது வந்தே பாரத் ரெயில் பெங்களூரு-சென்னை இடையே 4 மணி நேரம் 20 நிமிடம் பயண நேரமாகும். அதுபோல் சதாப்தி ரெயில் பயண நேரம் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் பட்சத்தில் வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் குறையும் என்றும், விரைவில் இந்த ரெயில்களின் வேகம் அதிகரித்து இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.