search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 3 மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
    X

    ஆந்திராவில் 3 மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

    • நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் சந்த நாவலூர், பரிடாலவாரி பள்ளம், பூகட்ல பள்ளி ஆகிய ஊர்களில் மதியம் 2.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம், பாபட்லா, பல்நாடு ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று மதியம் 2.15 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

    முதலில் பிரகாசம் மாவட்டத்தில் பொதிலிபட்டிணம், மாதவாரிப் பளையம், கணிகிரி பட்டணம், அனுமந்து பாடு, மர்ரிவாடி மண்டலம், துக்கி ரெட்டிபாளையம், கோண்டா சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. கட்டில், பீரோ, நாற்காலி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் சந்த நாவலூர், பரிடாலவாரி பள்ளம், பூகட்ல பள்ளி ஆகிய ஊர்களில் மதியம் 2.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் பல் நாடு மாவட்டத்தில் சாவல்ல புரம், பிச்சிகுலுபாளையம் ஆகிய இடங்களில் 2.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த நிலநடுக்கத்தில் வீட்டு சுவர்கள், மேற்கூரைகளில் விரிசல் விழுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என ஐதராபாத்தில் உள்ள பூகம்ப அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என தெரிவித்தனர்.

    ஆந்திராவில் ஏற்கனவே சித்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது 3 மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×