என் மலர்
இந்தியா
பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
- வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.
- பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா காலத்தில் உலகமே பொதுமுடக்கத்தை சந்தித்தது. அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
இதனால் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் மாணவர்களின் கல்விக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை தற்போது மாணவர்கள் படிப்பை விட பொழுது போக்கிற்காக அதிகளவில் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த 8-ந்தேதி புதுடெல்லியில் ரூரல் இந்தியாவில் தொடக்க கல்வி குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கிராமப்புறங்களில் மாணவர்கள் படிப்பிற்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது தொடர்பான இந்த ஆய்வில் மாணவர்களின் பெற்றோர்களிடமும் பதில்கள் கேட்டு பெற்றுள்ளனர்.
21 மாநிலங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் உள்ள 6 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களின் பெற்றோர் 6,229 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 6,135 பேர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை கொண்டிருந்தனர். 56 பேர் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் 36 பேர் பள்ளியை சேராத குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.
இந்த ஆய்வில் இந்தியாவில் கிராமப்புறங்களில் 49.3 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதில் 34 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை படிப்பிற்காக பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 76 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வீடியோ கேம்கள் விளையாட மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதாக கூறி உள்ளனர். 56.6 சதவீதம் பேர் மாணவர்கள் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கும், 47.3 சதவீதம் பேர் அவற்றை பதிவிறக்கம் செய்து இசையை கேட்க பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
34 சதவீதம் பேர் மட்டுமே ஆய்வு பதிவிறக்கங்களுக்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதாகவும், 18 சதவீதம் பேர் மட்டும் டூட்டோரியல்கள் மூலம் ஆன்லைன் கற்றலை அணுகி இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் பெற்றோர்களில் குறைந்தது 78 சதவீதம் பேரும், ஆண் குழந்தைகளின் பெற்றோர்களில் 82 சதவீதம் பேரும் தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கான பயன்பாட்டை அதிகமாக பெற்றுள்ளனர்.
வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் 40 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் கற்றல் பற்றி தாங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதும், 32 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் கல்வி குறித்து உரையாடுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.