என் மலர்
இந்தியா

அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு ரொக்கப்பரிசுடன் விருது- நித்யானந்தா

- லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான்.
- பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பின் கடந்த 13-ந் தேதி குருபூர்ணிமா அன்று சமூக வலைதளங்களில் மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகா கைலாசாவில் இருந்து பரமசிவன் நமக்கு நேரடியாக வழங்கும் சத்சங்க உரை. சமாதி பழகுங்கள். இந்த 4 மாதமும் நிர்வகல்ப சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்.
சமாதி பழகுகின்ற செய்முறை பற்றி பல சத்சங்கங்களை ஏற்கனவே அளித்திருக்கிறேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கைலாசாவின் அதிகாரப்பூர்வ இளணய தள பக்கத்தில் உள்ளது.
இந்த சாதுர்மாசிய விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். எனவே 1 கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்று விக்க வேண்டும்.
இந்து விரோத தீய சக்திகள் என்னை தாக்கி அழிக்க முயன்றபோது, நான் கைலாசாவை உருவாக்கிவிடவில்லை. ஆனால் அப்போது அதற்கான கனவு கண்டு கொண்டிருந்தேன்.
லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான். பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
ஒரு மனிதன் பழிதீர்க்கும் மனோசக்தியை வளர்த்து கொண்டால் போதும். உங்களை புகழ்கிறவர்கள் தான் திருடர்களாக இருப்பார்கள். எனவே உங்களை புகழ்கிறவர்களை உங்கள் அருகில் வைத்து கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்பது தான் குருமார்கள் எனக்கு கொடுத்த வரம்.
பத்தமடை பாய், 6 மண்டி சாக்கு பைகள், நாச்சியார் கோவில் விளக்கு, ஸ்ரீரங்கம் உலக்கை உள்ளிட்ட 10 பொருட்களை தான் நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போதும் பயன்படுத்தி வருகிறேன்.
பசி தாங்கும் உடல் சக்தி, பழி தாங்கும் மனோ சக்தி, பக்தி தாங்கும் உயிர் சக்தி இந்த மூன்றும் தான் எனது குருமார்கள் எனக்கு பயிற்றுவித்தது. அதை கடைபிடித்து வருகிறேன்.
உலகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு கைலாசா சார்பில் வழங்கப்படும்.
இதற்கு எனது சீடர்கள் மட்டுமல்ல தனிப்பட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும்.
தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் பண மதிப்பில் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்துடன் கைலாசாவின் அன்னலட்சுமி விருதும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.