என் மலர்
இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
- கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
- தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.
தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.