search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓபிசி இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்
    X

    ஓபிசி இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

    • தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
    • இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 42% இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும். பிரதமரின் சந்திப்பதற்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை உதவி செய்ய வேண்டும்

    இந்த மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசவுள்ளேன்.

    சாதிவாரி மக்கள்தொகை குறித்த தகவல்கள் இல்லாததால், இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது, இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை உறுதி செய்வது தெலுங்கானா சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாகும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×