என் மலர்
இந்தியா

நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவக் கொலை.. மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!

- மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
