என் மலர்
இந்தியா
நாளை அறிமுகம் செய்ய இருந்த `ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' திடீர் ஒத்தி வைப்பு?
- நாளைக்கான நிகழ்ச்சி நிரலிலும் இந்த 2 மசோதாக்கள் இல்லை.
- சபா நாயகர் அனுமதியுடன் கடைசி நிமிடத்தில் மாற்றி அமைக்கவும் முடியும்.
புதுடெல்லி:
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கு வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது. மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப் பட்டது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம். அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய மந்திரி சபை ஏற்றுக்கொண்டது.
அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு கடந்த 12-ந்தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அரசிய லமைப்பு சட்ட திருத்த மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, 2024 ஆகிய இரண்டையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாராளுமன்றம் மக்களவையில் நாளை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பட்டியலிடப்பட்டு இருந்தது.
3 சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபாவில் நாளை தாக்கல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பட்டியலிடப்பட்ட மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதியை அவையில் முதலில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பின்னர் இந்த வார இறுதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற செயலகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப் பட்டியலில் நாளைக்கான நிகழ்ச்சி நிரலிலும் இந்த 2 மசோதாக்கள் இல்லை. அதேநேரத்தில் சபா நாயகர் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலை கடைசி நிமிடத்தில் மாற்றி அமைக்கவும் முடியும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 20-ந்தேதியுடன் முடிகிறது.