என் மலர்
இந்தியா
நான் இந்தி கற்றுக்கொண்டது இப்படித்தான்.. பாட்காஸ்டில் சிறு வயது ஞாபகங்களை பகிர்ந்த மோடி
- கெட்ட எண்ணத்துடன் எந்த ஒரு தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எனது வாழ்வின் தாரக மந்திரம்.
- நானும் இந்தி மொழிப் பேசுபவன் கிடையாது... நமக்கு தெரிந்த இந்தியை வைத்து இப்படியே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றுவிடுவோம்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் "WTF is with Nikhil Kamath" என்ற போட்காஸ்ட் உரையாடலில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.
இந்த 2 மணி நேர வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. தான் கடவுள் இல்லை மனிதன்தான், தவறுகள் நடப்பது சகஜம், தானும் தவறு செய்திருக்கலாம் என்று மோடி டிரெய்லரில் தெரிவித்தார்.
சிறு வயதில் ரெயில் நிலையத்தில் டீ விற்றது, குஜராத் முதல்வராக இருந்த காலம், சித்தாந்தம் மற்றும் இலட்சியத்தின் முக்கியத்துவம், அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பு, வெளிநாட்டு அரசியல் விவகாரங்கள் என பலவற்றை குறித்து மோடி மனம் திறந்துள்ளார்.
தனது குழந்தை பருவ நண்பர்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மோடி கூறினார். எனது சிறுவயதிலேயே நான் எனது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, இதனால் எனது பள்ளி நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை.
நான் முதல் முறையாக குஜராத் முதல்வர் ஆனபோது, எனது பள்ளி நண்பர்களை முதல்வர் இல்லத்துக்கு அழைக்க விருபினேன், 35 நண்பர்களும் வந்திருந்தனர், ஆனால் அவர்களுக்குள் நட்பு இல்லை, என்னை அவர்கள் முதல்வராக மட்டுமே பார்த்தனர் என்று மோடி தெரிவித்தார்.
கெட்ட எண்ணத்துடன் எந்த ஒரு தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எனது வாழ்வின் தாரக மந்திரம். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், ஆனால் கெட்ட எண்ணத்துடன் செயல்படக்கூடாது என்று மோடி கூறினார். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அவர்கள் தனிப்பட்ட லட்சியத்துடன் அல்லாமல், மக்கள் பணி செய்ய வர வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் எனக்காக எதையும் செய்யமாட்டேன், ஆனால் நானும் ஒரு மனிதனே, கடவுள் அல்ல, தவறுகளை தவிர்க்க முடியாது என்றார்.
நிகழ்ச்சியை தொகுத்த காமத், எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியாது. என் இந்தியில் குறை இருந்தால் மன்னியுங்கள் என்று கூற அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்ன மோடி, நானும் இந்தி மொழிப் பேசுபவன் கிடையாது... நமக்கு தெரிந்த இந்தியை வைத்து இப்படியே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றுவிடுவோம் என்றார்.
இதற்கு முன்பு நிகில் காமத் பாட்காஸ்டில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.அஷ்வின், 'இந்தி நாட்டின் தேசிய மொழி அல்ல, அது ஒரு அலுவல் மொழி மட்டுமே' எனப் பேசியது வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தி கற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள ரயில் நிலையத்தில் டீ விற்கும் போது இந்தி கற்றுக்கொண்டதாக மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் இருந்து பல பால் பண்ணையாளர்கள் வணிகத்திற்காக இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.அவர்களில் 30-40 பேர் நான் டீ விற்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் எப்போதும் இருப்பார்கள். அவர்களுடன் பேசி, படிப்படியாக நான் இந்தி கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.