என் மலர்
இந்தியா

உத்தரகாண்ட் நிதியமைச்சர் திடீர் ராஜினாமா.. சர்ச்சைக்கு பின் அழுதுகொண்டே பேட்டி!

- உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
- எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Dehradun | Uttarakhand Parliamentary Affairs and Finance Minister Premchand Aggarwal gets emotional as he announces his resignation from his post. He says, "I always want my state to develop and keep moving forward. Whatever my contribution will be required, I will do… pic.twitter.com/7t0s79FlPh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 16, 2025
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.
தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.