என் மலர்
இந்தியா

நடிகை சவுந்தர்யா மரணம் கொலையா ? கணவர் ரகு விளக்கம்

- சவுந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதாக அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்.
- சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா (31 வயது) கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றுக்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்து சௌந்தர்யா புறப்பட்ட தனி விமானம் விழுந்து நொறுங்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதன் பின்னணியில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருப்பதாகவும் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
அவரது புகாரில், தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.
விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை. இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கோரியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு சார் மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.
சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு சார் எனது மனைவி மறைந்த ஸ்ரீமதி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபு சாரை அறிவேன்.
அவருடன் வலுவான நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் மோகன் பாபு சாருடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் பழகி வந்தனர். இதனால் அவரை நான் மதிக்கிறேன்.
அவர் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா உயிரிழப்பதற்கு 1 வருடத்திற்கு முன் 2003 இல் சாப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவை மணந்து கொண்டார். உயிரிழந்த சமயத்தில் சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.