என் மலர்
இந்தியா
வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகி-மகன் விஷம் குடித்து தற்கொலை
- சிகிச்சை பலனின்றி தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
- மனநலம் பாதித்த மகனுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விஜயன் வயநாடு மாவட்டத்தில் கட்சி ரீதியாக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(வயது74). வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தார். விஜயனுக்கு விஜேஷ், ஜிஜேஷ்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஜிஜேஷ் மனநலம் பாதித்தவர் ஆவார்.
விஜயனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனநலம் பாதித்து படுத்தபடுக்கையாக இருந்து வந்த தனது இரண்டாவது மகனான ஜிஜேஷை அவரே கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும்mஅவரது மகன் ஜிஜேஷ் ஆகிய இருவரும் தங்களின் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தனர்.
அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீடடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயனின் மகன் ஜிஜேஷ் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இதனால் மகன் ஜிஜேசுக்கு விஷம் கொடுத்து விட்டு, விஜயனும் விஷம் குடித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக விஜயன் இந்த முடிவை எடுத்தார்? என்பது உறுதியாக தெரியவில்லை. விஜயன் தனது மனநலம் பாதித்த மகனை மிகவும் கஷ்டப்பட்டே கவனித்தே வந்திருக்கிறார். மேலும் பணப்பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
நிதி நெருக்கடி காரணமாக விஜயன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களது தற்கொலைக்கு அதுதான் காரணமா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனநலம் பாதித்த மகனுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விஜயன் வயநாடு மாவட்டத்தில் கட்சி ரீதியாக நன்கு அறியப்பட்டவர் ஆவார். அவர் சுல்தான்பத்தேரி கிராம பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இந்தநிலையில் அவர் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.