search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு பேரிடர் நிவாரணம் வழங்கக்கோரி பிரதமர் இல்லம் முன்பு 24-ந்தேதி போராட்டம்: இடது ஜனநாயக முன்னணி அறிவிப்பு
    X

    வயநாடு பேரிடர் நிவாரணம் வழங்கக்கோரி பிரதமர் இல்லம் முன்பு 24-ந்தேதி போராட்டம்: இடது ஜனநாயக முன்னணி அறிவிப்பு

    • வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு (2024) ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள் தங்களின் வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்தனர். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு மக்களுக்கான மறுவாழ்வு பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்றும், அதனை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேரள அரசு வலியுறுத்தியது.

    ஆனால் கேரள அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் பேரிடர் நிவாரணத்துக்கு ரூ.2ஆயிரம் கோடி வழங்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில ஆளும் அரசான இடது ஜனநாயக முன்னணியின் வயநாடு மாவட்ட குழு அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் (25-ந்தேதி) காலை 10 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்படும் என்றும், முன்னதாக கேரள இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறும் எனவும் கூறியிருக்கின்றனர்.

    இந்த போராட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னார்வலர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள், பிற மாநில எம்.பி.க்கள், தேசிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×