என் மலர்
இந்தியா
வருமான வரி விலக்கை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியது ஏன்?- நிர்மலா சீதாராமன்
- நாட்டின் சமச்சீரான வருவாய்க்கு வழி வகுத்துள்ளோம்.
- வரி விலக்கானது அனைவருக்குமான கட்டணத்தை குறைக்கிறது.
புதுடெல்லி:
கடந்த பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்லிமெண்டில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் முக்கிய அம்சமாக இதுவரை ரூ.7 லட்சம் வரை இருந்த வருமானவரி விலக்கை ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். இது மத்திய தர வர்க்கத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது வரிவிலக்கு தொடர்பாக நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
ஏன் ரூ.7 லட்சம் வரை இருந்த வருமானவரி விலக்கை ரூ.12 லட்சமாக உயர்த்தியிருக்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குவோரும் பயனடையவே இந்த வருமான வரி விலக்கை உயர்த்தியுள்ளோம். இதை நாங்கள் 2 வழிகளில் சாதித்துள்ளோம். முதலில் வரி விதிப்பில் உள்ள அடுக்குகளை குறைத்து நாட்டின் சமச்சீரான வருவாய்க்கு வழி வகுத்துள்ளோம்.
2-வதாக வரிவிதிப்பில் உள்ள அடுக்குகளை விரிவுபடுத்தி நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சுமையை குறைத்து எல்லோரையும் உள்ளடக்கிய நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளோம்.
நேர்மையாக வரி செலுத்துவோரில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஏதாவது சலுகை அளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.
இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசினேன். உடனே அவர் ஒப்புக்கொண்டார். வரிச்சலுகை அளிக்கலாம் என்ற தன் ஆலோசனையை வழங்கினார்.
அது எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிவிக்கும்படி என்னை பணித்தார்.
அதன்படி நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டு, பல ஆலோசனைகள் பெறப்பட்டு, ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்ற யோசனையை பிரதமரிடம் தெரிவித்தேன். உடனே அவர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் வகையில், அவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில், இந்த வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழு காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைகள் தான்.
இதை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமலில் இருந்த வரி விதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரின் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் அதிகமாக உள்ளது. அதன் மீதான வரி அப்போது ரூ.1 லட்சம், இப்போது பூஜ்ஜியம் ஆகியிருக்கிறது.
மேலும் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் 2014 வரை ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டும், இப்போது அது பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் அவரின் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விலக்கானது அனைவருக்குமான கட்டணத்தை குறைக்கிறது. அதாவது ரூ.24 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒருவர், 2014-ல் ரூ.5.6 லட்சம் வரி செலுத்தினார். இப்போது அது ரூ.3 லட்சமாக குறைகிறது. இதனால் அவர் ரூ.2.6 லட்சம் சேமிப்பவராக மாறி உள்ளார்.
இதனால் ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் மட்டும் பயனடையவில்லை வரி விலக்கின் காரணமாக அதிகமாக சம்பாதிப்பவர்கள் கூட பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.