search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரீல்ஸ் எடுத்த வாலிபர் கார் மோதி பலி- நண்பர் ஓட்டிவந்த வாகனம் மோதி பலியான பரிதாபம்
    X

    ரீல்ஸ் எடுத்தபோது கார் மோதி பலியான வாலிபர் ஆல்வின்.

    'ரீல்ஸ்' எடுத்த வாலிபர் கார் மோதி பலி- நண்பர் ஓட்டிவந்த வாகனம் மோதி பலியான பரிதாபம்

    • புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி “ரீல்ஸ்” எடுத்தனர்.
    • வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    செல்போனகளின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள்.

    அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு ஈடுபடும்போது சிலர் விபத்தில் சிக்கி பலியாகும் பரிதாப சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

    அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவரின் மகன் ஆல்வின் (வயது20). ஐக்கிய அரபு எமிரேடசில் பணிபுரிந்து வந்த ஆல்வின் கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார்.

    ஊரில் இருந்து வந்த நாள் முதல் தினமும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்தார். நேற்றும் நண்பர்களுடன் சுற்றினார். அப்போது அவர்கள் செல்போனில் "ரீல்ஸ்" எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றனர்.

    புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி "ரீல்ஸ்" எடுத்தனர். வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார். அப்போது அவரது நண்பர் ஓட்டிவந்த ஒரு கார், ஆல்வினின் மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது.

    இதில் அவர் படுகாயமடைந்தார். யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவத்தால் ஆல்வினின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆல்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்தது குறித்து ஆல்வினின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வாரத்தில் ஆல்வின் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது. "ரீல்ஸ்" வீடியோ எடுத்த போது நண்பனின் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×