search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்- ரங்கசாமி உத்தரவு
    X

    புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்- ரங்கசாமி உத்தரவு

    • வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம்.
    • வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் 6-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பூஜ்ய நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகை களில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.

    பல மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய் மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர், தமிழ் பயன்படுத்த வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கான அளவு 5:3:2 என இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கடைகளில் வைக்கப்படும் பெயர் பலகையில், தமிழ் மொழி பெரிய அளவிலும், ஆங்கிலம் மொழி சிறிய அளவிலும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதியை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. இந்த விதியை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் கவிஞர்கள் மற்றும் பெரும்புலவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருகிறது. பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும்.

    வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×