என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினம்
- இந்தியாவில் 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரை பறிக்கும் நோய்களில், புற்றுநோய் 9-வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நமது உடல் உறுப்பில் சிலவகை செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் பண்பு கொண்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகள் பெரியவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.
பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டாலும், லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒன்று முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை தடுத்து, ஹீமோகுளோபின் அளவை பெருமளவில் குறைத்து, உடல் நிலையை சீர்குலைக்கிறது.
இது தவிர மத்திய நரம்பு மண்டலத்தில் கட்டிகள், நியூரோபிளாஸ்டோமா போன்ற பல்வேறு புற்றுநோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் என்பதே பயமுறுத்தும் காரணியாக இருப்பின், அதுவே குழந்தைகளுக்கு ஏற்படும்போது இரட்டிப்பான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைக ளின் உயிரை பறிக்கும் நோய்களில், புற்றுநோய் 9-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனமானது புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல் இல்லாத வயதிலேயே, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் புற்றுநோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ந் தேதி (இன்று) சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.