search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெண்கள் பிரச்சினைகளை தீர்க்கும் காசி விசுவநாதர் ஆலயம்
    X

    பெண்கள் பிரச்சினைகளை தீர்க்கும் காசி விசுவநாதர் ஆலயம்

    • ஆலயத்தில் உள்ள நவகன்னியர்கள் பெண்களின் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிமை பொருந்தியவர்களாக உள்ளனர்.
    • ராமர் கும்பகோணத்துக்கு வந்து இந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவநாதரை வழிபட்டு ராவணனை கொல்லும் மன வலிமையை பெற்றார்.

    பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். சில பெண்களுக்கு சிறிய வயதில் இருந்தே உரிய கவனிப்பு இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் கைகூடுவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.

    சில பெண்களுக்கு புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் தீர்க்க முடியாத உடல்நல பிரச்சினைகள் இருக்கலாம். சில பெண்கள் உரிய வயது வந்த பிறகும் ருதுவாகாத நிலைமை இருக்கும்.

    சில பெண்களுக்கு பெற்றோர் அல்லது கணவரால் எப்போதும் அமைதியற்ற நிலை காணப்படும். இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு எத்தனையோ ஆலயங்களை பிரார்த்தனைக்காகவும், பரிகாரத்துக்காகவும் பலரும் சொல்லி இருப்பார்கள்.

    ஆனால் கும்பகோணத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் பற்றி பெரும்பாலானவர்கள் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஆலயத்தில் உள்ள நவகன்னியர்கள் பெண்களின் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிமை பொருந்தியவர்களாக உள்ளனர். இந்த நவகன்னியர்களை வழிபட்டால் பெண்களின் பிரச்சினைகள் தீர்வதாக பலரும் அனுபவத்தில் சொல்லி உள்ளனர்.

    எனவே கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும் போது காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கும் செல்லுங்கள். இந்த ஆலயம் கும்பகோணம் மகாமகம் குளக்கரை ஓரத்திலேயே அமைந்து இருக்கிறது. ஆகையால் எளிதில் செல்ல முடியும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இந்த ஆலயம் திறந்து இருக்கும்.

    இந்த தலத்தின் விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. வேப்ப மரத்தின் கீழ்தான் சிவபெருமான் வீற்றிருக்கிறார். பொதுவாக வேப்பமரத்தின் கீழ் பெரும்பாலும் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகள்தான் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த தலத்தில் சிவலிங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தலத்தில் உள்ள நவகன்னியர்கள் என்பவர்கள் 9 நதிகளை குறிப்பதாகும். 9 நதிகளும் கும்பகோணத்துக்கு வந்து தங்கள் பாவங்களை தீர்த்துக் கொண்டதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அப்படி நவ நதிகளும் இந்த தலத்தில்தான் வீற்றிருக்கின்றனர்.

    மகாமகம் குளத்தில் நீராடி தங்களது பாவங்களை தீர்த்துக் கொண்ட 9 நதிகளும் மீண்டும் சிவபெருமானை நோக்கி வணங்கினர். அவர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்து அருள்பாலித்தார். அப்போது தங்களோடு ஈசனும் இந்த தலத்தில் அமர வேண்டும் என்று நவநதிகளும் கோரிக்கை விடுத்தன.

    அதை ஏற்று ஈசன் காசி விசுவநாதராக அங்கேயே அமர்ந்தார். அவருடன் விசாலாட்சியும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். கருவறையின் வலது புறம் பிரகாரத்தில் விசாலாட்சி அம்பாள் தனி சன்னதி உள்ளது.


    இவர்களின் அருள் பெற்ற 9 நதிகளும் கும்பகோணத்துக்கு வந்ததன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    கங்கை, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 நதிகளில் பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச் சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன.

    இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் கும்பகோணம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக வீரபத்திரனை அனுப்பி வைத்தார். அவர் மகாமக குளக்கரையில் வீற்றிருக்கிறார்.

    ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த கோவிலில் சுவாமி கோரைப் பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக் றான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச் சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திர ருக்கு 'கங்கை வீரன்', 'கங்கை வீரேஸ்வரர்' என்ற பெயர்களும் உண்டு.

    நவநதிகளில் பிரதானமானது கங்கை. கங்கையின் தலைமையில் இங்கு வந்து பாவம் போக்கிக் கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது. கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தியும், பிரகாரத்தில் ராஜராஜேஸ்வரியும் இருக்கின்றனர். சிவராத்திரி அன்று இரவில் ஐந்து கால பூஜை நடக்கிறது.

    சோழனின் அரசவையில் கவிச் சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர். வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு மடத்தில் சில காலம் தங்கி சேவை செய்து வந்தார். வீரபத்திரரைக் குறித்து 'தக்கயாகப் பரணி' என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார். ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் 'பரணி' எனப்படும். தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், 'தக்கயாகப் பரணி' எனப்பட்டது.

    ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்திராடத்தில் இவருக்கு குரு பூஜை நடக்கிறது.

    மேற்கு நோக்கி அமைந்த இந்த தலத்தின் அருகில் நவ கன்னியருக்கு அருள் செய்த சிவன், காசி விசுவநாதராக அருளுகிறார். இங்கு நவ கன்னியரும் சிலை வடிவில் இருக்கின்றனர். மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவாார்.

    அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். மூர்க்க நாயனார், இங்குள்ள மடத்தில் சிலகாலம் தங்கி இருந்து சேவை செய்தார். இவரது சிலை முன் மண்டபத்தில் உள்ளது. கார்த்திகை, மூலம் நட்சத்திரத்தில் இவரது குருபூஜை நடக்கிறது.

    ராமபிரான் சீதையை பிரிந்து தவித்த போது இலங்கை சென்று ராவணனை கொல்வதை தவிரவேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக ராமன் இலங்கைக்கு புறப்பட்டார். ஆனால் ராவணனை எப்படி கொல்வது என்று ராமபிரான் தவித்தார். கொலை செய்வது என்பது தனது இயல்பான குணத்துக்கு மாறான ஒன்றாக இருந்ததால் அவர் மிகவும் குழப்பம் அடைந்தார்.

    இதற்கு விடை காண அகத்திய முனிவரை சந்தித்து யோசனை கேட்டார். அப்போது அகத்திய முனிவர், "கும்பகோணத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்துக்கு சென்று காசி விசுவநாதரை வழிபட்டால் பலன் கிடைக்கும்" என்று கூறினார். இதையடுத்து ராமர் கும்பகோணத்துக்கு வந்து இந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவநாதரை வழிபட்டு ராவணனை கொல்லும் மன வலிமையை பெற்றார்.


    இந்த தலத்தில் சண்டி கேஸ்வரருக்கு எதிரே துர்க்கை அமைந்திருப்பது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. சப்தமாதர்கள் பைரவர், சூரியன், சந்திரன், லிங்கோத்ப வர், ஆஞ்சநேயர், மகாசூர மர்த்தினி, தட்சிணா மூர்த்தி ஆகியோரும் இத்தலத்தில் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் உள்ளனர்.

    இத்தலத்துக்கு வரும் பெண்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்கு நவ கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். நவ கன்னியர்களை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜித்து வந்தால் பெண்களுக்கு உரிய காலத்தில் உரிய நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

    நவ கன்னியரை மனமுருகி வழிபடும் பெண்களுக்கு சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும் பெண்கள் இத்தலத்தில் உரிய வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    மேலும் இந்த தலம் மேற்கு நோக்கிய தலம் என்பதால் கூடுதல் சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது. மூலவர் லிங்கம் சுயம்பு லிங்கமாகும். இது மிகப்பெரியதாக உள்ளது. அந்த சுயம்புலிங்க பாணத்திலேயே கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புகள் அமைய பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.

    கும்பகோணத்தில் சோலையப்பன் தெருவில் காசி விசுவநாதர் ஆலயம் என்ற பெயரில் சிவாலயம் இருக்கிறது. ஆனால் புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த காசி விசுவநாதர் ஆலயம் கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நகருக்குள் இருக்கும் ஆலயங்களை வழி பட்டுக் கொண்டு வரும் போது இந்த தலத்துக்கு மிக எளிதாக செல்ல முடியும். பஸ் நிலையத்தில் இருந்து இந்த கோவில் வழியே பஸ்கள் செல்கின்றன.

    அடுத்த வாரம் திருமண தடைகளை நீக்கும் திருமணஞ்சேரி தலம் பற்றி பார்க்கலாம். திருமணத்தை உடனடியாக கைக்கூட செய்யும் மிக சிறப்பான தலமான திருமணஞ்சேரியில் எப்படி வழிபட செய்ய வேண்டும் என்ற தகவலை அதில் காணலாம்.

    Next Story
    ×