search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: குட்டி பொண்ணே வா வா வோ...
    X

    மீனா மலரும் நினைவுகள்: குட்டி பொண்ணே வா வா வோ...

    • தெலுங்கு, தமிழில் படுபிசியாக இருந்தேன். ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
    • மற்ற மொழிகளைவிட மலையாளத்தில் நடிப்பது வித்தியாசமானது.

    நான் எங்கு ஷூட்டிங் சென்றாலும் ஒரு தயாரிப்பாளர் பின் தொடர்ந்தார்.

    அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் என்னை விடுவதாக தெரியவில்லை.

    பிளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்க! என்பார்.

    ஒரு வழியாக போயிட்டு வாங்க என்று கும்பிடு போட்டு அனுப்புவேன்.

    அடுத்த சில நாட்கள் கழித்து வேறு எங்காவது ஷூட்டிங் நடக்கும். அங்கும் வந்து நிற்பார். திருப்பதி, சென்னை என்று எங்கு ஷூட்டிங் நடந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டே இருந்தார்.

    அய்யய்யோ விடமாட்டார் போலிருக்கே... என்று ஒரு கட்டத்தில் 'சார்... எனக்கு நேரமே இல்லை. பிளீஸ்... வேறு யாரையாவது பாருங்களேன்' என்றால், இல்லை மேடம். உங்களைத்தான் எதிர்பார்க்கிறேன். பதினைந்து நாள் மட்டும் தாருங்கள் போதும் என்று பிடிவாதமாக இருந்தார்.

    அந்த காலகட்டத்தில் தெலுங்கு, தமிழில் படுபிசியாக இருந்தேன். ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த மலையாள பட தயாரிப்பாளர் தெலுங்கில் நான் நடித்து சூப்பர் ஹிட்டான 'சீதாராமையாவின் பேத்தி' என்ற படத்தை பார்த்து இருக்கிறார்.

    அந்த படத்தை மலையாளத்தில் தயாரிக்க அவருக்கு ஆசை. மலையாளத்திலும் நானே நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    அதற்காகத்தான் அத்தனை நாட்களாக போராடி கொண்டிருந்தார். மலையாளத்தில் முதல் படம். தெலுங்கில் எனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படத்தின் கதாபாத்திரத்திலேயே நடிக்க போகிறோம் என்ப தால் எனக்கும் உள்ளூர ஆசை இருந்தது.

    ஆனால் கால்ஷீட் கொடுப்பதில் தான் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக பதினைந்து நாள் தானே கேட்கிறார்கள் என்று ஒத்துக் கொண்டேன். நான் ஒத்துக் கொண்டதால் தயாரிப்பாளருக்கு ஏக சந்தோசம்.

    ஆனால் ஒரு கண்டிஷன் பதினைந்து நாட்களும் தொடர்ந்து நடிக்க முடியாமல் போகலாம். தேவைப் பட்டால் இடை இடையே ஒன்றிரண்டு நாட்கள் வேறு ஷூட்டிங்கும் செல்வேன் என்றேன்.

    அதற்கும், பரவாயில்லை மேடம் உங்கள் சவுகரியம்தான் என்று சம்மதித்து சென்றார்.

    மலையாளத்தில் 'சாந்தவனம்' என்ற பெயரில் தயாரானது. ஆலுவா அரண்மனையில் ஷூட்டிங்.

    ஆலுவா, சென்னை, திருப்பதி, ஐதராபாத் என்று பறந்து கொண்டிருந்தேன். இதில் என்னைவிட கஷ்டப்பட்டது எனது உதவியாளர்கள்தான். அவர்கள்தான் பாவம்.

    ஒவ்வொரு இடத்திலும் ஷூட்டிங் முடிந்ததும் உடனே எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு அடுத்த ஊருக்கு ரெயிலில் செல்ல வேண்டும். ஓய்வே இருக்காது. பல நாட்கள் அவர்கள் வீட்டுக்குகூட சென்றதில்லை.

    மலையாளத்தில் நடிகர் சுரேஷ்கோபி அப்பா வேடத்தில் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு நான் ஜோடியாகவே நடித்து இருக்கிறேன் என்பது வேறு கதை. கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? இதுதான் சினிமா.

    மலையாளத்துக்கு சென்றதும் கொஞ்சம் பயம் இருந்தது. தெரியாத மொழி. எப்படி நடிக்கப் போகிறோம் என்ற தயக்கம் வேறு.

    ஏன் மொழி தெரியாத தெலுங்கில் சாதிக்கவில்லையா? அதேபோல் தான். மலையாளத்திலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைத்தேன். நடித்தேன்.

    மற்ற மொழிகளைவிட மலையாளத்தில் நடிப்பது வித்தியாசமானது. பிரமாண்டம் என்பது இருக்காது. ஏன், மேக்-அப்பே பெரிய அளவில் இருக்காது. டான்ஸ் இல்லை.

    ஒரு டான்ஸ்கூட இல்லையா? படம் எப்படி வெற்றி பெறும்? என்று சந்தேகப்பட்டேன். இசைக்கு ஏற்ப கொஞ்சம் அங்கும், இங்கும் திரும்பி உடலை அசைத்தாலே... வேண்டாம் மேடம் என்றார்கள்.

    டைரக்டர் சிபிமலையில் காட்சிகள் பற்றி விளக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். மோகன் சித்தாரா இசை அமைத்து இருந்தார்.

    "உன்னி வாவா வோ, பொன்னுண்ணி வாவாவோ (கண்ணா வாவாவோ... என் தங்ககண்ணா வாவாவோ...)"

    தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா குழந்தையை கொஞ்சி பாடும் தாலாட்டு பாடல். இந்த பாடல் மலையாள தேசமெல்லாம் வாசம் வீசியது. கூடவே மீனாவையும் அழைத்து சென்றது.

    படத்தில் நெடுமுடி வேணுவின் பேத்தியாக நடிப்பேன். சுரேஷ்கோபி பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து அமெரிக்காவில் வசிப்பார். அவர்க ளுக்கு குழந்தையாக இருக்கும் நான் வளர்ந்து தாத்தா-பாட்டி மேல் காட்டும் பாசமும், அவர்கள் என்மீது காட்டும் பாசமும் தான் கதைக்களம். எத்தனையோ குடும்பங்களில் இந்த மாதிரி பிரிவுகளும், பாசத்துக்கான ஏக்கமும் இருப்பதால் கதை குடும்பங்களின் மனதை தொட்டது.

    ஆனால் படப்பிடிப்பின்போது டான்ஸ் எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாக காட்சிகள் படமாக்கப்பட்டது. ரொம்ப இயல்பாகவே நான் நடித்தேன். எனக்கு எதுவும் புரியவில்லை. இது என்ன ரசனை? மக்கள் ரசிப்பார்களா? என்று யோசித்தப்படியே இருந்தேன்.

    படம் முடிந்து குறிப்பிட்ட நாளில் வெளியானது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மலையாளத்தில் நான் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்.

    தெலுங்கில் எந்த அளவு வெற்றி பெற்றதோ அதேபோல்தான் மலையாளத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    அதன்பிறகு மலையாள பட உலகிலும் மீனாவின் கொடி பறந்தது.

    மலையாள படங்களை பொறுத்தவரை ஆஹா... ஓஹோ... என்ற சினிமாத்தனம் இருக்காது. நடிப்பு என்பது தற்செயலாக இருக்குமே தவிர மிகைப்படுத்தல் இருக்காது. யதார்த்தமாகவே காட்சி அமைப்புகள் அமைந்து இருக்கும்.

    ஒரே படத்தில் மலையாள பட உலகமும் என்னை வாரி அணைத்துக் கொண்டது.

    குட்டி பொண்ணே வா வா வோ...

    எங்கள் தங்க பொண்ணே வா வா வோ...

    என்று என்னையும் பாடி பரவசப்படுத்தியது போல் அந்த அனுபவம் இருந்தது.

    மற்றுமொரு புதிய அனுபவத்தோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்)

    Next Story
    ×