search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: சிரித்துக் கொண்டே கோபப்படுவது எப்படி
    X

    மலரும் நினைவுகள் மீனா: சிரித்துக் கொண்டே கோபப்படுவது எப்படி

    • சார்.. நான் பாவம் சார்.. என்னை விட்டுடுங்க என்றேன்.
    • காமெடி பண்ணுவதில் இவர்களெல்லாம் கில்லாடிகள் என்றால் சின்னி ஜெயந்த் சார் காமெடியுடன் மிமிக்ரியும் பண்ணி கலக்குவார்.

    சத்யராஜ் சார் பெண் வேடத்தில் நம் முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்?

    உண்மையிலேயே என் முன் அப்படி ஒரு கெட்-அப்பில் அவர் வந்து நின்றார். 'மாமன் மகள்' படத்துக்கு தான் அந்த வேடம்.

    ஆள் வாட்ட சாட்டமாக ஆண்களுக்கே உண்டான கம்பீரத்துடன் இருந்தாலும் பெண் வேடத்திலும் நன்றாகத்தான் இருந்தார். 'சார்... சூப்பரா இருக்கீங்க சார்' என்றேன்.

    நான் அப்படி சொன்னதும் 'அட போம்மா நீ. பொம்பள வேடத்தில் நீங்கள்லாம் எப்படித்தான் நடிக்கிறீங்களோ? கண் இமையில் வைத்திருக்கும் 'ஐ லேஷ்' கண்ணை திறக்கவே முடியலை என்றார்.

    நான் அவரது கண்ணை பார்த்தேன். அதை தவறாக வைத்து இருந்தார்கள். 'சார், ஐலேஷை தவறாக வைத்திருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்கு சிரமமாக தெரிகிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... என்றபடி எனது மேக்அப் மேனை அழைத்து அதை சரியாக வைக்கும் படி கூறினேன். அவர் வந்து அந்த ஐலேஷை சரியாக வைத்ததும் அவருக்கு கண் சிரமம் சரியாகி விட்டது.

    உடனே அதானே பார்த்தேன். என்றபடி ஷூட்டிங்கில் சந்தோசமாக கலந்து கொண்டார். ஒரு காட்சியில் அவர் நடந்து வருவதை காலில் இருந்தே குளோசப்பாக காட்டுவார்கள். என்னை பார்த்ததும் யாரும்மா நீ. நீதான் பிரியாங்கிற பொண்ணா... என்று கேட்டுக் கொண்டே வருவார். டயலாக் பேசியபடி வந்த அவரை பார்த்ததுமே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

    அந்த காட்சியில் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அந்த படத்தில் மணிவண்ணன் சார், கவுண்டமணி சார் ஆகியோரும் உண்டு. இந்த கூட்டணி சேர்ந்தால் கலகலப்பு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

    படப்பிடிப்பு தளத்தில் சாதாரண லைட் பாய் முதல், ஹீரோ, ஹீரோயின் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரை பார்த்தாலும் மணிவண்ணன் சார் கலாய்க்காமல் விடமாட்டார். சிரித்து சிரித்தே வயிறு வலிக்கும்.

    மணிவண்ணன் சாரிடம் 'என்ன சார் இப்படி எல்லோரையும் வாருகிறீர்கள். நான் ஷாட்டுக்கு சென்ற பிறகு என்னையும் இப்படித்தானே வாருவீங்க' என்றேன்.

    அதை கேட்டதும், அப்படி யார் சொன்னது? நீ இருக்கும் போதே உனக்கும் அந்த கதிதான் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான பாணியில் சிரித்தார்.

    அவர் அப்படி சொன்னதும் 'சார்.. நான் பாவம் சார்.. என்னை விட்டுடுங்க என்றேன்.

    உடனே அவரும் பதிலுக்கு 'இந்தாப்பா மீனா பாவமாம்... ஒண்ணும் சொல்லாதீங்கப்பா' என்று சொல்லி சிரிக்க வைத்துவிட்டார். காமெடி பண்ணி கிட்டே சீரியசாக நடிப்பது கஷ்டம்.


    அந்த படத்தின் படப் பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது ஒரு ஆங்கில வார இதழில் சிகை அலங்கார மாடல் ஒன்றை பார்த்தேன். நாமும் அதே போல் பண்ணினால் என்ன என்று நினைத்தேன். எனது சிகை அலங்கார நிபுணரை அழைத்து அந்த புகைப் படத்தை காட்டி இதே போல் டிரை பண்ணுங்கள் என்றேன்.

    அதை பார்த்ததும் அவரும் பண்ணிடலாம்மா. ஈசிதான் என்றார். இரவில் மேக் அப்பை கலைத்த பிறகு அவர் அலங்காரத்தை தொடங்கினார். தலையில் குட்டி குட்டியாக முடியை சுருட்டி சுருட்டி பின்னி ஜடை போட்டார். நள்ளிரவு வரை இந்த வேலை நடந்தது. தலையில் நிறைய ஹேர் பின்களும் வைத்திருந்ததால் படுத்து தூங்கவே கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இது புது ஸ்டைலாக இருக்குமே என்ற ஆசையோடு சிரமத்தை தாங்கிக் கொண்டு தூங்கினேன்.

    காலையில் எழுந்து தலையை கலைத்து மேக்-அப் போட தயாரான போது தலை முடியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரொம்ப ஏமாற்றமாகி விட்டது.

    சிகை அலங்கார நிபுணரும் ஜெல் போட்டிருக்கலாம். அப்படி செய்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்தார். நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 'என் தலையை வைத்து அவர் புதிய மாடலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார் என்று.' இந்த படத்தில் ஆச்சியும் உண்டு. மொத்தமும் ஜாலிப் பேர் வழிகள். படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே இருந்தது.

    சத்யராஜ் சார் பெண் வேடத்தில் வந்து ஏமாற்றும் காட்சி... அதை தொடர்ந்து அவர்தான் நான் காதலிக்கும் காதலா் என்பதை கண்டுபிடிக்கும் காட்சி கலகலப்பானது.

    ஆனால் ஒரே நேரத்தில் காமெடி உணர்வு, கோபம் ஆகிய உணர்வுகளை முகத்தில் கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். பெண் வேடத்தில் வரும் சத்யராஜ் சாரோடு நான் நடித்த ஒவ்வொரு காட்சியும் அப்படித்தான் அமைந்தது. அதையும் சவாலாக ஏற்று நடித்தேன்.

    ஷூட்டிங் முடிந்ததும் அந்த காட்சிகளை சொல்லி விழுந்து விழுந்து சிரிப்போம். காமெடி பண்ணுவதில் இவர்களெல்லாம் கில்லாடிகள் என்றால் சின்னி ஜெயந்த் சார் காமெடியுடன் மிமிக்ரியும் பண்ணி கலக்குவார்.

    படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தால் போதும் ஒரு பக்கம் காமெடி இன்னொரு பக்கம் மிமிக்ரி என்று களை கட்டும். அந்த ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாதது. அடுத்த மறக்க முடியாத மற்றொரு நிகழ்வுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    Next Story
    ×