என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மலரும் நினைவுகள் மீனா: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்...
- எனக்கு ஜோடியாக தாடி வைத்த கெட்-அப்பில் சரத்குமார் சார். எல்லோரும் ஸ்டுடியோவில் ரெடியாக காத்திருந்தோம்.
- ஒன்றரை நாள் ஓய்வு கிடைத்ததால் அந்த ஓய்வு நேரத்தையும் வீணாக்காமல் ஏதாவது இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
கண்ணில் கருப்பு நிறத்தில் பிரேம் போட்ட கண்ணாடி தலையில் கொண்டை போட்டு நிறைய பூ வைத்து அம்மா கெட்-அப்பில் நான் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதுவும் 1994-களில்...?
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றால் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக 1958-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் அல்ல.
1995-ல் சரத்குமார் சாருடன் நான் நடித்து வெளியான நாடோடி மன்னனை பார்க்க வேண்டும்.
அந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிய நாளில் அம்மா கெட்-அப்பில் நான்... எனக்கு ஜோடியாக தாடி வைத்த கெட்-அப்பில் சரத்குமார் சார். எல்லோரும் ஸ்டுடியோவில் ரெடியாக காத்திருந்தோம்.
வி.ஐ.பி. வரப்போகிறார் என்ற பரபரப்பில் ஸ்டுடியோ முழுவதும் எல்லோரும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தார்கள்.
சரியான நேரத்துக்கு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா காரில் வந்து இறங்கினார். வழக்கமான புன்சிரிப்புடன் கைகளை கூப்பி வணங்கிய படியே உள்ளே வந்தவரை பார்த்து அனைவரும் வணக்கம் தெரிவித்தோம். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
கலைக் குடும்பத்தினரை பார்த்ததும் அவரும் உற்சாக மூடுக்கு மாறிவிட்டார். விளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் எங்களோடு அமர்ந்து பேசிவிட்டு சென்றது மறக்க முடியாதது.
ஆம்ஸ்டர்டாம்...!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டின் தலைநகர். உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் நகரம். அந்த நகரத்தில்தான் படப் பிடிப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
எனது முதல் ஐரோப்பிய நாட்டு பயணம் அது. எனவே எப்போது புறப்படுவோம் என்ற குஷி மூடிலேயே இருந்தேன். அந்த நாளும் வந்தது. முதல் ஐரோப்பிய நாட்டு பயணம். அந்த நாடு எப்படி இருக்கும்? என்ற கற்பனை கனவுகளுடனேயே அந்த நாட்டை சென்றடைந்தேன்.
நாங்கள் சென்றது வசந்த காலம். மார்ச் முதல் மே வரையிலான இந்த காலத்தில் தான் பிரசித்தி பெற்ற துலிப் மலர்கள் அங்கு மலரும். ஆம்ஸ்டர் டாம் துலிப் மலர் தோட்டங்களுக்கு பிரபலம்.
பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் இந்த பூந்தோட்டங்களின் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது.
அந்த மலர் தோட்டத்தில் தான் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். நாங்கள் சென்றது குளிர் காலம் முடியும் நேரம். எனவே துலிப் மலர்களும் பூத்து ஓயும் காலத்தை நெருங்கி இருந்தது.
4 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஷூட்டிங் தொடங்கியது. காலை யிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுவிட் டோம். ரொம்ப நேரம் ஷூட்டிங் நடந்தது போல் இருந்தது.
இன்னும் மாலை நேரம் வரவில்லையா... என்று மனம் எண்ணியது.
கடிகாரத்தை பார்த்தேன் இரவு 9 மணி ஆகியிருந்தது. ஆனாலும் சூரியன் மறைய வில்லை. பகல் பொழுதாகவே தெரிந்தது. நான் எதுவும் புரியாமல் டைரக்டரிடம் சென்று கேட்டேன். அப்போதுதான் சொன்னார் கள். அங்கு பகல் பொழுது அதிகமாம். இருட்டுவதற்கு இரவு 9 மணிக்கு மேல் ஆகும் என்றார்கள்.
இரவு வரை ஷூட்டிங் நடக்கும். இப்படியே நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து படப்பிடிப்பு... இதனால் 4 நாட்கள் நடத்த வேண்டிய ஷூட்டிங்கை 2½ நாட்களில் முடிந்துவிட்டது.
ஒன்றரை நாள் ஓய்வு கிடைத்ததால் அந்த ஓய்வு நேரத்தையும் வீணாக்காமல் ஏதாவது இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து பக்கத்தில் ஒரு சுற்றுலா தலம் இருப்பதாக கூறினார்கள். பக்கத்தில் என்று தானே சொல்கிறார்கள். நடந்து போவோம் என்று முடிவு செய்து நடந்தோம். நாங்கள் சென்ற ரோடு மேடு, பள்ளம் நிறைந்து இருந்தது. கருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த சாலையின் அமைப்பே அப்படித்தான் என்றார்கள்.
நான் 'மாடர்ன்' உடையில் 'ஹை' ஹீல்ஸ் செருப்பும் அணிந்து நடந்ததால் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. சரத் சார் படுவேகமாக நடந்து கொண்டிருந்தார்.
கல் பதித்த ரோட்டில் ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடக்கவே சிரமமாக இருந்தது. கால் கடுமையாக வலித்தது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு 'சரத் சாரிடம்... இன்னும் எவ்வ ளவு தூரம் சார்' என்றேன்.
இன்னும் கொஞ்ச தூரம்தான்மா... வா... என்று சொல்லி சொல்லியே இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போம்.
ஒரு இடத்தில் சென்றதும் அங்கிருந்த செக்போஸ்டில் எங்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டார்கள். நாங்கள் பாஸ்போர்ட் உள்பட எல்லாவற்றையும் ஓட்டல் அறையில் வைத்துவிட்டு சென்றிருந்தோம். எனவே எங்களிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை.
மீண்டும் ஓட்டலுக்கு நடந்து சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வரலாமா என்று யோசித்தோம். ஆனால் அவ்வளவு தூரம் மீண்டும் நடக்க முடியாது என்று அந்த இடத்தை பார்ப்பதையே கைவிட்டு விட்டு ஓட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.
கால்டாக்சிக்காக காத்து நின்றோம். நாங்கள் நிற்பதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற கார் ஒன்று எங்கள் அருகில் வந்து நின்றது. அது பென்ஸ் சொகுசு கார். டிரைவர் எங்களிடம் விசாரித்தார்.
நாங்கள் கால் டாக்சிக்காக காத்து நிற்கிறோம் என்றதும் இதுவும் கால் டாக்சிதான் வாங்க' போகலாம் என்றார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கால் டாக்சியாக பென்ஸ் காரா...?
அந்த காலகட்டத்தில் நம் நாட்டில் பென்ஸ் காரே குறைவாகத்தான் புழக்கத்தில் இருந்தது. அதுவும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. அதனால் தான் வாடகை காராக பென்ஸ் கார் பயன்படுத்துவதை பார்த்து ஆச்சரியப்பட்டோம்.
பின்னர் அந்த காரில் ஏறி ஓட்டலுக்கு திரும்பினோம். அப்புறம் என்ன...? பேக்-அப்தான். மறக்க முடியாத ஆம்ஸ்டர்டாம் நினைவுகளுடன் எங்களையும் சேர்த்து சுமந்தபடி ஆகாயத்தில் பறந்தது விமானம்.
அடுத்ததாக ராமேஸ்வரம் கடலில் தத்தளித்து கரை சேர்ந்த திரிலிங்கான அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
(தொடரும்...)