search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகான்களின் வழிகாட்டுதல்!
    X

    மகான்களின் வழிகாட்டுதல்!

    • சில மகான்கள் உலகின் கண்ணுக்கே படாமல் எங்கோ இருந்து உலக மக்களுக்கு நன்மை செய்து வருகின்றனர்.
    • எனக்கு இந்த மகானைத் தெரியும். எந்த மகானைப் பற்றியும் மனம் போன போக்கில் யாரும் நினைக்க முடியாது.

    குருவினைப் பற்றி பேச ஆரம்பித்தோம் அல்லவா! நம் நாட்டில் சத்யமான குருமார்கள் எத்தனையோ பேர் வாழ்ந்து நம் கண்ணுக்குத் தெரியாமல் நமக்கு அருள் புரிந்து வருகிறார்கள். நம் காலத்தில் வாழ்ந்து வருபவர்களிலும் எத்தனையோ மகான்கள், ஞானிகள் உள்ளனர். இது இந்த மண்ணின் பெருமை எனலாம். உலகெங்கிலும் இவ்வாறு நிறைய பேர் உள்ளனர். அந்த குருமார்களையும், அவர்களின் சக்தி அலை நிறைந்த தலங்களையும் சென்று வழிபடலாம்.

    தயவு செய்து போலியானவர்களைப் பற்றி இந்த இடத்தில் பேச வேண்டாம். அவர்களும் வாழ்வில் நல்வழி திரும்ப வேண்டும் என மனதார நினைத்து இனி நம் பயணத்தினை தொடர்வோம்.

    என் வாழ்வில் நான் முதன் முதலில் சந்தித்த ஒரு நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவர்தான். வயதில் சிறுமி என்றாலும் அவரை சந்தித்தபோது அவரது அமைதியான தோற்றத்திலும், மென்மையான புன்னகையாலும் எனது சப்தநாடியும் ஒடுங்கியது. மறுமுறை செல்லும் போது அந்த மென்மையான புன்னகையினையோ, கை அருளும் ஆசீர்வாதமோ கிடைக்கப் பெறாவிடில் நாம் ஏதாவது தப்பு செய்து விட்டோமோ? என்று எண்ணத் தோன்றியது. 'சாமி தயவு செய்து கொஞ்சமா சிரியுங்க' என்று மனம் எல்லா சாமிகளையும் வேண்டிக் கொள்ளும். சிறு வயது என்பதால் மிகவும் தட்டுதடு மாறிய நடைதான் இந்த ஆன்மீக பயணத்தில். ஆனால் இன்றோ ஓரளவு தெளிவு பட்டு மனம் நடக்கின்றது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை, பிடிப்பு, வழி என்பது அவரவர் வாழ்வில் நடந்திருக்கலாம். எனது கணவர் ஸ்ரீபாலுடன் எத்தனையோ முறை- ஏன் மாதாமாதம் சென்று தரிசனம் செய்யும் போது ஒன்றினை நான் உணர்ந்தேன். எதனை நாம் விடாது நினைக்கின்றோமோ, அது நம் வாழ்வில் நடக்கும் என்று உணர்ந்தேன்.

    மகா பெரியவர் என் கணவருடன் சமண மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன பற்றியும், தர்ம தேவி பற்றியும் பேசுவார். என் கணவர் சமண மதத்தவர். அதனை நன்கு தெரிந்தவர். அதே போன்று அனைத்து மத நூல்களினைப் பற்றியும் நன்கு படித்து அறிந்தவர். ஆகவே மகா பெரிய வரிடம் அது வும் அதிகாலை நேரத்தில் இவர்கள் உரையாடுவது காண்பதற்கும், கேட்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும். மகா பெரியவரின் பூர்வாஸ்ர மத்தின் சகோதரரான சிவன் சுவாமிகள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாத சாதாரணத் தோற்றம். யாரும் எளிதில் சென்று அவரிடம் பேச முடியும். அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கித் தர முடியும். இதெல்லாம் எங்கள் மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி தந்தன.

    இவ்விடத்தில் நான் வேறு சில குறிப்புகளையும் கூற வேண்டும். ஸ்ரீபால் சீறாப்புராணம் பற்றி அவரது நெருங்கிய நண்பர் அப்துல்குத்தூசோடு பேசிக் கொண்டு இருப்பார். பைபிள் பற்றி பாதர் வின்சென்ட்டோடு எத்தனையோ கருத்துக்களை, விளக்கங்களை கேட்டறிவார். இந்த சூழ்நிலை காரணமாகவே எங்களுக்கு அதிக ஆன்மீக நாட்டம் ஏற்பட்டது எனலாம்.

    இதே போன்று சமண மதத்தில் எங்களது பெரு மதிப்புக்குரியவர் முனி மகாராஜ் ஆர்ஜ்வ சாகர். கொசு கடித்து உடல் வீங்கினாலும் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருப்பார். உடன் இருப்பவர்கள் அவதிபடுவர். ஏனெனில் கொசு, ஈ, எறும்புகளை நாம் அடித்து அவை உயிரிழக்கக் காரணமாகி விடக்கூடாது என்பது சமண மதத்தின் அடிப்படை கொள்கை. தரையில் படுப்பதும், விளக்கு, பேன் இல்லாமல் இருப்பதும், விரதம் என்ற பெயரில் வருடத்தில் அநேக நாட்கள் பட்டினி இருப்பதும் இங்கு சர்வ சாதாரணமாய் காணும் நிகழ்வு.

    இந்த அளவிற்கு உங்களை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல. இவ்வரிகளின் நோக்கம். இந்த நிலையினை அடைவது என்பது சாதாரண முயற்சி அல்ல. குறைந்தபட்சம் கொலை, கொடுமைகள் இல்லாத சமுதாயமாக வாழ இப்படி எண்ணற்ற மகான்களின் வழிகாட்டுதலில் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதான்.

    ஷீரடி பாபா, ராகவேந்திர சுவாமிகள் என நமக்கா மகான்களுக்கு பஞ்சம்? எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் பார்த்த, பழகிய மகான்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது.

    நாங்கள் அடுத்து அடிக்கடி சென்ற இடம் திருவண்ணாமலை. இங்கு ரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் பிரபலம். கோவில் என்று சென்ற எங்களுக்கு 'பகவான் யோகிராம் சுரத்குமாரை சந்தித்து பேசும், பழகும் வாய்ப்பு கிடைத்தது. தெய்வீக சிரிப்பு. கூர்மையான பார்வை. சிங்கம் போன்ற நடை. தோற்றத்தில்.... கசங்கிய எளிய பழைய ஆடை. இதனை மீறி அவர் மீதிருந்து பரந்து, விரிந்த ஒரு தெய்வீக உணர்வு. அந்த உணர்வே ஒருவரை அமைதிப்படுத்தும். தெளிவு படுத்தும்.

    அடிக்கடி சென்றோம். பல அனுபவங்கள் நிகழ்ந்தன. இம்மாதிரி நிகழ்வுகள் விஞ்ஞா னத்தினை தாண்டிய மெய்ஞானத்தினை வலியுறுத்தின. இப்படி நான் எழுதுவதால் எந்த மகான்களிடமும் சென்றால் நம் மொத்த பிரச்சினைகளும் உடனே தீர்ந்து, சொத்து, சுகம் குவியும் என்ற கற்பனையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. இம் மாதிரி எண்ணங்கள் வளரவும் அவர்கள் விடமாட்டார்கள். இதற்கு ஒரு உதாரணத்தினைப் பார்ப்போம்.

    பகவான் யோகி ராம் சுரத்குமாரைக் காண நாங்கள் செல்லும் நேரங்களில் ஒரு நபர் அடிக்கடி வருவதும், பகவான் அவரோடு சிரித்து சிரித்து பேசுவதனையும் பார்த்தோம். அந்த நபர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று எண்ணுவோம். இவ்வாறு சில முறை தொடர்ந்தது.

    வழக்கம் போல் அவரும் சிரித்தப்படியே பகவானை தரிசிக்க வந்தார். பகவான் அவரைப் பார்த்து உங்கள் பெயர் என்ன? என்றார். இதனைக் கேட்ட அனைவருக்கும் உறைந்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது.

    இது ஒரு படிப்பினை. யாருக்கு? என்றால் அங்கு வந்த அனை வருக்குமேதான். பகவான் நடத்திய நாடகத்தில் அந்த நபருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். எனக்கு இந்த மகானைத் தெரியும். எந்த மகானைப் பற்றியும் மனம் போன போக்கில் யாரும் நினைக்க முடியாது. அவர்களது எளிமை என்பது அவர்கள் நமக்கு காட்டும் கருணை என்பதினை உணர வேண்டும்.

    இப்படி செல்லும்போது குணத்தால், பண்பால் நம்மை நாம்- நம் மனநிலையினை உயர்த்திக் கொள்ள முடியும். இந்த மனநிலையுடன் ஆன்ம நிலை உயர்ந்தால் அன்றி அமைதியும், தியானமும் பழகுவது கடினம். 'கைக்கு கை, காலுக்கு கால்' எடுப்போம் என்று கத்தி எடுத்து பேசும் வீரவசனங்கள் குறைய ஒரு நல்ல குருவின் வழிகாட்டுதல் ஒருவருக்கு அவசிய மாகின்றது.

    சில மகான்கள் உலகின் கண்ணுக்கே படாமல் எங்கோ இருந்து உலக மக்களுக்கு நன்மை செய்து வருகின்றனர்.

    வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகளை படித்து இருக்கின்றீர்களா? இல்லையெனில் இப்பொழுதே அவரைப் பற்றிய புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும்.

    'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று கூறிய இரக்கத்தின், கருணையின் மொத்த வடிவம் அவர். 'கடவுள் ஒருவரே, அவரை மதம், ஜாதி என்ற பெயரில் பிரிக்காதீர்கள். இறைவனை அருட்பெருஞ் ஜோதியாக வணங்கலாம் என்ற வழிபாட்டு முறையினை கற்பித்தவர். 'அருட்பெரும் ஜோதி. அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங் கருணை அருட்பெரும் ஜோதி' என்பதே இவர் தந்த மாபெரும் மந்திரம்.

    'கொல்லாமை'- எந்த உயிரினையும் கொல்லக் கூடாது என்பது இங்கு அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

    'பசிப்பிணி' என்ற ஒன்று சமுதாயத்தில் இருக்கவே கூடாது என்ற அவரின் அறிவுரைக்கேற்ப வடலூரில் அன்னதானம் ஓயாமல் வழங்கப்படுகிறது.

    இங்கு பெரிய சம்பிரதாயங்கள் என்ற பேச்செல்லாம் இல்லை. பிறர் பசி தீர்த்தல், கொல்லாமை, சுய ஒழுக்கங்கள், ஜோதி வடிவில் இறைவனை வழிபடுதல் போன்றவை இந்த காலத்தில் அனைவராலும் அநேகமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வழி முறைகளே இங்கு நடைமுறையில் உள்ளது.

    ஒவ்வொரு குருமார்களைப் பற்றியும் எழுதினால் சுருங்க எழுதினால் கூட ஒரு பெரிய புத்தகம் ஆகி விடும். எல்லோரின் பொதுவான கருத்துகளாக சிலவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

    மனிதனையும் சரி, இறைவனையும் சரி சில விகார பிரிவுகளைக் கொண்டு பார்க்கக் கூடாது. அவற்றினை அழித்து விடுவோம்.

    * பசி என்ற பிணி இருக்க கூடாது.

    * உடல் நோயின்றி இருத்தலும், மனம் கவலை இன்றி இருத்தலும் மிகப்பெரிய வரம்.

    * பணம் ஒருவரது வாழ்வினை நிர்ணயிப்பது இல்லை. அவனது மன நிறைவும், நிம்மதியும் தான் வாழ்வினை நிர்ணயிக்கின்றது.

    * நேற்று, நாளை, இன்று என்று இந்த நிமிடத்தில் எதுவுமே செய்ய முடியாது. எனவே இந்த நொடியில் முழுமையாய் நிறைவாய் வாழ்வோம்.

    ஓஹோ அவர்கள் கூறியுள்ளது போல எதனையும் இதுதான் வேண்டும் என்று சாதாரண வாழ்க்கைப் பொருட்களில் நிர்ணயிக்க வேண்டாம்.

    இந்த வாரம் சொல், மனம் இவற்றில் அன்றாடம் 5 நிமிடம் எதுவும் சிந்திக்காது. முயற்சித்து பார்ப்போமா.

    -தொடரும்

    Next Story
    ×