search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி
    X

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி

    • உலகில் உள்ள ஒவ்வொன்றையும் தான் படைப்பதால் தனக்குத் தான் அதிக பெருமை உண்டு என்று பிரம்மன் கூறினார்.
    • சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டிருக்கிறாள்.

    கோவில்கள் நிறைந்த கும்பகோணம் பகுதியில் எல்லாவித பிரார்த்தனைக்கும், எல்லாவித பரிகாரங்களுக்கும் ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கும் ஆலயம் இருக்கிறது. கும்பகோணம் அருகே பூந்தோட்டம் கூத்தனூரில் சரஸ்வதி ஆலயம் அமைந்திருக்கிறது.

    இந்தியாவிலேயே சரஸ்வதிக்கென்று ஆலயம் இருப்பது கூத்தனூரில் மட்டும்தான். இந்த ஆலயம் உருவான பின்னணியில் புராண வரலாறு ஒன்று கூறப்படுகிறது.

    ஒரு சமயம் பிரம்மனுக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றையும் தான் படைப்பதால் தனக்குத் தான் அதிக பெருமை உண்டு என்று பிரம்மன் கூறினார். ஆனால் அதை சரஸ்வதி ஏற்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஞானம் தரும் கல்வியை கொடுப்பதால் கல்விக்கு அரசியான தனக்குத்தான் அதிக பெருமை என்று சரஸ்வதி வாதிட்டார்.

    அவர்களின் இந்த விவாதம் பெரிய சர்ச்சையாக மாறியது. ஒருவரை ஒருவர் சாபம் இட்டனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. ஒரே தம்பதிக்கு அவர்கள் அண்ணன், தங்கையாக பிறந்தனர்.

    பிரம்மனுக்கு பகுகாந்தன் என்று பெயரிடப்பட்டது. சரஸ்வதிக்கு சோபனை என்று பெயரிட்டனர். அவர்கள் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டினார்கள். அவர்களுக்கு பெற்றோர் வரன் தேடினார்கள். அந்த சமயத்தில்தான் அவர்கள் இருவருக்கும் தங்களது முந்தைய நிலை நினைவுக்கு வந்தது.

    கணவன்- மனைவியாக இருக்கும் தாங்கள் வேறு ஒரு திருமணத்தை எப்படி செய்துகொள்ள முடியும் என்று தவித்தனர். இதையடுத்து இரு வரும் சிவபெருமானை மனதுக்குள் நினைத்து, உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் முன்பு சிவபெருமான் தோன்றி என்ன பிரச்சினை? என்று கேட்டார்.

    அதற்கு பிரம்மனும், சரஸ்வதியும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தால் பூலோகத்தில் பிறந்த சம்பவத்தை தெரிவித்து, இனி திருமணம் செய்வது இயலாத காரியம். எனவே தங்களுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே சிவபெருமான் அதற்கு ஒரு தீர்வை கூறினார்.

    சரஸ்வதியை மட்டும் பூலோகத்தில் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க அறிவுறுத்தினார். உண்மையான பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வாரி வழங்க வேண்டும் என்றும் அருள் பாலித்தார். அதை பிரம்மாவும், சரஸ்வதியும் ஏற்றுக்கொண்டனர்.

    அதன்படி பிரம்மா சாபத்தில் இருந்து விடுதலை பெற்று படைப்பு தொழிலை தொடர சென்றார். சரஸ்வதி மட்டும் பூலோகத்திலேயே தங்கிவிட்டார். அவருக்காக அமைந்ததுதான் கூத்தனூர் ஆலயம். அங்கு சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டிருக்கிறாள்.

    இதன் காரணமாக அவள் அமர்ந்த இடம் அந்த காலத்தில் அம்பாள் புரி என்று அழைக்கப்பட்டது. ஹரி நாகேஸ்வரம் என்ற பெயரிலும் சிறிது காலம் அந்த ஆலய பகுதி அழைக்கப்பட்டது.

    தற்போதைய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. பூந்தோட்டம் பகுதியில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்த பூந்தோட்டம் பகுதியில்தான் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    இரண்டாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் புலவர் ஒட்டக்கூத்தர் அங்கு வாழ்ந்து வந்தார். பெரும்புலவராக திகழ்ந்த அவர் வரகவி பாடும் திறமை வேண்டி சரஸ்வதியை வழிபட முடிவு செய்தார். இதனால் அவர் பூந்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சரஸ்வதி ஆலயத்துக்கு வந்து வழிபடத் தொடங்கினார்.

    தினமும் காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வந்து சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்து மனமுருக வழிபடுவதை அவர் வழக்கத்தில் வைத்துக் கொண்டார். அவருடைய பூஜையால் சரஸ்வதி மனம் மகிழ்ந்தார். ஒட்டக்கூத்தருக்கு கல்வி செல்வத்தை வழங்க தீர்மானித்தார்.

    அதன்படி ஒட்டக்கூத்தருக்கு தன் வாய் தாம்பூலத்தை வழங்கினார். இதன் மூலம் ஒட்டக் கூத்தருக்கு வரகவி பாடும் திறமை கிடைத்தது. அவர் 3 சோழ மன்னர்களின் அரசவை புலவராக இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

    அவரது கவிபாடும் திறமையை போற்றும் வகையில் அவருக்கு பூந்தோட்டம் பகுதியை கொண்ட இடத்தை சோழ மன்னர் தானமாக வழங்கினார். இதன் காரணமாக சரஸ்வதி ஆலயம் இருந்த இடம் 'கூத்தன் ஊர்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் பேச்சு வழக்கில் அது கூத்தனூர் என்று மாறியது.

    மன்னர்கள் ஆதரவு இருந்ததால் அங்கு சரஸ்வதிக்கு புலவர் ஒட்டக்கூத்தர் தனி ஆலயம் அமைத்ததாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. இந்த ஆலயமே தமிழகத்தில் சரஸ் வதிக்கு இருக்கும் ஒரே ஆலயமாக திகழ்கிறது.

    ஒரு தடவை புலவர் ஒட்டக்கூத்தரை சிலர் கொலை செய்ய முடிவு செய்து விரட்டினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய ஒட்டக்கூத்தர் சரஸ்வதி ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டார். அப்போது அவரை சூழந்துகொண்ட அந்த கும்பல் பரணி நூல் பாடினால் விட்டு விடுவதாக சொன் னார்கள். அதன் பேரில் ஒட்டக்கூத்தர் பரணி நூல் பாடியதாகவும், அதற்கு சரஸ்வதி தேவியே துணை புரிந்ததாகவும் வரலாறு உள்ளது. அந்த பரணி பாடல் வரிகளில் வாணித் தாயே என்று சரஸ்வதியை ஒட்டக்கூத்தர் புகழ்ந்திருப்பதை காணலாம்.

    இத்தகைய சிறப்புடைய சரஸ்வதி ஆலயத்தை தவற விடலாமா? எனவே கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஆலயத்துக்கும் தவறாமல் சென்று வர வேண்டும்.

    கூத்தனூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பல தடவை சென்று வழிபட்டு உள்ளார். சரஸ்வதி ஆலயம் முன்பு நீண்ட தியானத்தில் இருப்பதை பாரதியார் வழக்கத்தில் வைத்தி ருந்தார். அதன் காரணமாக அவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக மாற முடிந்தது என்று சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் ஒரே ஒரு பிரகாரத்தை கொண்டது. அந்த ஒரே பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர், பால தண்டாயுதபாணி உள்ளனர். கருவறை யில் மூலவராக சரஸ்வதி தேவி சிலை உள்ளது. கருவறை முன்பு அன்ன வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கருவறைக்குள் சரஸ்வதி தேவி வெண்மை நிற ஆடை அணிந்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார். வலது கீழ் கையில் சின் முத்திரை செய்தபடி காட்சி தருகிறார். இடது கையில் புத்தகம், வலது மேல் கையில் அட்சர மாலை, இடது மேல் கையில் அமிர்த கலசம் தாங்கி இருக்கிறார். ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி தேவியின் இரு விழிகளும் கருணை பொழியும் வகையில் உள்ளன. இதனால்தான் இந்த தலத்தை ஞான பீடம் என்று சான்றோர்கள் போற்றுகின்றனர்.

    சரஸ்வதி இந்த தலத்தில் தவக் கோலத்தில் இருக்கிறார். நவகிரகங்களில் புதன் கல்விக்குரியதாக கருதப்படுகிறது. எனவே கூத்தனூர் தலத்தில் புதன்கிழமை சரஸ்வதியை வழிபடுவது மிகவும் நல்லது. விஜயதசமி தினத்தன்று ஏராளமானோர் இங்கு வழிபட்டுதான் தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் புலவர் ஒட்டக்கூத்தருக்கும் சிலை இருக்கிறது. அந்த சிலை முன்பு பலகையில் பரப்பி இருக்கும் நெல்லில் குழந்தைகள் மோதிர விரலால் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி கல்வியை தொடங்குவது வழக்கம். அதன்பிறகு அந்த நெல்லில் அ, ஆ எழுதி படிப்பை தொடங்கி வைப்பார்கள். இந்த வழிபாடு காரணமாக குழந்தைகள் கல்வியில் சிறப்பான இடத்தை பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    கூத்தனூரில் சரஸ்வதியை உரிய ஐதீகங்களுடன் வழிபட வேண்டும். யார் ஒருவர் சரஸ்வதி அருளை பெறுகிறார்களோ அவர்களுக்கு காவியங்கள் படைக்கும் அளவுக்கு திறமை உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த தலத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. மேலும் அம்பாளுக்கு உரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் சென்றால் சரஸ்வதியை சிறப்பு அலங்கார கோலத்தில் காணலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பின் போது லட்சார்ச்சனை நடத்தப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. இந்த ஆலயம் அருகே புகழ்பெற்ற மாப்பிள்ளை சாமி கோவில் இருக்கி றது. அங்கு வழிபட்டால் திருமண தடைகள் விலகும் என்பது ஐதீகமாகும். அந்த ஆலயத்தின் கருவறையில் கல்யாண பந்தல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூத்தனூரை தட்சிண திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள். இந்த ஊரில் சிவன் கோவிலில் துர்க்கையும், பெருமாள் கோவிலில் மகாலட்சுமியும், தனி கோவிலில் சரஸ்வதியும் அருள் பாலிக்கின்றனர். இதனால் ஒரே ஊரில் முப்பெரும் தேவியையும் தரிசிக்க முடியும் என்ற சிறப்பை கூத்தனூர் பெற்றுள்ளது.

    ஆகையால் கும்பகோணம் யாத்திரையில் கூத்தனூர் ஆலய தரிசனத்தை தவற விட்டு விடாதீர்கள். கும்பகோணம் செல்பவர்கள் பெரும்பாலும் திருநள்ளார் செல்வதுண்டு. அல்லது திருநள்ளார் வழித் தடத்தில் உள்ள ஆலயங்களுக்கு செல்வதுண்டு.

    ராகு, கேது தோஷங்கள் நீக்கும் திருபாம்புரம் அந்த வழித்தடத்தில் தான் உள்ளது. எனவே கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழித்தடத்தில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்க செல்லும் போது கூத்தனூருக்கும் அவசியம் செல்லுங்கள். பூந்தோட்டத்தில் இறங்கி கூத்தனூர் செல்லலாம். வாகனங்களில் செல்பவர்கள் மிக எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்து நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் மிக எளிதாக வெற்றிகளை பெறுதற்கு கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் ஆலயம் உள்ளது. அங்கு எப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×