search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
    X

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

    • அவனவன் ஆட்ட அறுக்க எடத்துல சொவரொட்டி கிடைக்காதான்னா ஆலா பறக்குதான்..
    • இதை சாப்பிட்டா நல்ல ரத்தம் ஊறும். அதாவது ரத்தத்துல செவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

    ஏலேய்.. மக்கா.. நம்ம மேல தோட்டத்துல ஆளை வைச்சு பெரியப்பா ஆடு அறுக்காவ..

    ஒன்னோட அம்ம நாலு காலும் கிடாக்கறியும் வேணுமுன்னு சொன்னா. விக்கதுக்கு ஆட்ட அறுக்கல பெரியப்பா.

    நம்ம குடும்பத்துக்கே ரெண்டு கிடாவை அறுத்து போட்டாலும் பத்தாதே. வேற யாராவது வேணுமுன்னு கேட்டா பங்கு போட்டு கொடுத்துடுவாவ ஒன்னோட பெரியப்பா.

    இந்தா இந்த நீச்சத்தண்ணியை பெரியப்பா கிட்ட கொடுத்துட்டு இதே தூக்கு வாளியில எங்க வீட்டுக்கும், ஒங்க வீட்டுக்கும் சேத்து ஆட்டுக்கறிய வாங்கிட்டு வா மக்கா! என்றார் பெரியம்மா.

    தோட்டத்துக்கு சென்றதும் நீச்சத்தண்ணியை மட மடவென குடித்த பெரியப்பா எலும்பில்லாத கறியை அவர்கள் தூக்கு வாளிக்குள் அடைத்தார்.

    பனையோலையை பட்டையாய் பிடித்து அதே போல் எலும்பில்லாத கறியை எனக்கும் மடித்து விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை..

    ஆட்டை அறுக்கும் அண்ணனை பார்த்து .. ஏலேய் ஆறுமுகம்! அந்த சொவரொட்டியை எடுத்து இந்த பட்டையில வைச்சு மடிச்சு இவங்கிட்ட கொடுத்தனுப்பு என்றார்.

    சுவரொட்டின்னா! என்னவா இருக்கும் என பேந்ந பேந்த முழித்த படியே பெரியப்பாவை பார்த்து...

    பெரியப்போ.. அம்ம கறி மட்டும் தான் வாங்கிட்டு வர சொன்னாவ.. சொவரொட்டியெல்லாம் வேணாம் என்றேன்.

    இவன் எங்கே உள்ளவமுல. சரியான கோட்டிக்காரனா தான் இருப்பானோ..

    அவனவன் ஆட்ட அறுக்க எடத்துல சொவரொட்டி கிடைக்காதான்னா ஆலா பறக்குதான்..

    எடுத்துட்டு போய் நல்லா சாப்பிடுவான்னு பாத்தா சொவரொட்டி வேணாமுன்னு சொல்லிட்டு நிக்கான்.

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

    ஏலேய்! ஆறுமுகம் பட்டையில அந்த சொவரொட்டியும் சேத்து வைச்சு முணிஞ்சு இவங்கிட்ட கொடுலேய்! என்றார் பெரியப்பா.

    ஓலை பட்டையில் ஆட்டுக் கறியை பொதிந்து கொண்டிருந்த ஆறுமுகம் அண்ணன் என்னை பார்த்து...

    ஏல தம்பி! சுவரொட்டின்னா ஆட்டோட ஈரல் பக்கத்தில் இருக்கும் ஒரு பகுதி. கிட்டத்தட்ட மண்ணீரல் மாதிரி. இதை சாப்பிட்டா நல்ல ரத்தம் ஊறும். அதாவது ரத்தத்துல செவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

    நீ ஆளு சாட்டவரைக்காய் மாதிரி ஒல்லியா இருக்கால்லா.. அதான் உங்க பெரியப்பா புள்ள சாப்பிடட்டுமுன்னு கொடுத்து விட சொன்னாவ! என்றான் ஆறுமுகம் அண்ணன்.

    பெரியப்பாவின் பாசத்தை நினைத்து மனதுக்குள் ரசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தேன். பட்டென்று சுவரொட்டி தரும் போது பெரியப்பா சொன்ன பழமொழி நினைவில் வந்தது.

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.." ஏன் அவ்வாறு பெரியப்பா சொன்னார்.

    இந்த பழமொழிக்கான நிஜ அர்த்தம் என்ன.. இந்த பழமொழியை சரியாக உச்சரிக்கிறோமா! என்ற பல்வேறு சிந்தனைகள் மனதில்..

    ஒரு நல்ல பொருளை வேண்டாம் என்றாலோ அல்லது அந்த பொருளின் பயனை உணராது சரியாக பயன்படுத்தாமல் இருந்தாலோ இந்த கழுதை பழமொழியை உதாரணமாக சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறேன்.


    கழுதை எந்த கோவிலில் போய் கற்பூர ஆரத்தியை பார்த்தது. கழுதை கற்பூர வாசனையை நுகர வேண்டிய அவசியம் என்ன? என நிறைய கேள்விகளும், பதில்களும் மனதில்.

    நிறைய தேடலுக்கு பின்..

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்.

    நான் தெரிந்த தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! பதிவிற்கு செல்வோம்.

    அந்த காலத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு பழமொழியை கூறினார்கள்.

    அவர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு விஷயங்களை கூறுகின்றன.

    ஒவ்வொரு பழமொழியின் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. நிறைய பழமொழிகளை பேச்சு வழக்கில் சிதைத்து நாமாக ஓரோர் அர்த்தம் கற்பித்து கொள்கிறோம்.

    முந்தைய தலைமுறை வரை நம் முன்னோர்கள் படுத்து உறங்குவதற்கு பாய் எனப்படும் புல்லினால் செய்யப்பட்ட விரிப்பை தான் பயன்படுத்தினார்கள்.

    படுத்துறங்க பயன்படுத்தும் அந்த பாயினை புல் கொண்டு தயாரித்தார்கள்.

    சம்பு என்ற கோரைப்புல் மற்றும் கற்பூர புல் என்று இரண்டு வகை புற்களை பாய் தயாரிக்க பயன்படுத்தினார்கள்.

    அந்த காலத்தில் பாய் தயாரிக்க பயன்படுத்தும் கோரைப் புல்லுக்கு கழு என்ற வேறு பெயர் உண்டு.

    பாய் தயாரிக்க பயன்படுத்தும் கழு என்ற கோரைப் புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசம் வரும்.

    "கழு" என்ற கோரைப் புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும் போது அந்த புல்லில் இருந்து வரும் கற்பூர வாசனை நமது மூக்குக்கு தெரியும்.

    கழு- தைக்க - தெரியும் - கற்பூர வாசனை என்பது என்பது தான் பழமொழியின் நிஜமான அர்த்தமும் உச்சரிப்பும் ஆகும்.

    கழு என்ற கோரைப் புற்களை கொண்டு தைத்த பாயில் படுக்கும் போது அந்த பாயில் இருந்து வரும் கற்பூர வாசத்திற்கு தேள், பூரான் மற்றும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் பாயில் படுத்திருப்பவர்களை நெருங்காது.

    அதனால் தான் அந்த காலத்தில் கோரைப் புற்களில் செய்த பாயை தூங்குவதற்காக நமது முன்னோர்கள் பயன் படுத்தினார்கள்.

    இந்த செய்தியை தெரிவிக்கவே பெரியவர்கள் "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்" என்று சொன்னார்கள்.

    பேச்சு திரிபில் இந்த வார்த்தை நாளடைவில் மாறி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று ஆகிவிட்டது.

    மற்ற படி கழுதைக்கும், கற்பூர வாசத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே நிஜம்.

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    Next Story
    ×