search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: சினிமா வாய்ப்புகள்.... தொலைந்த ஆசைகள்...
    X

    மீனா மலரும் நினைவுகள்: சினிமா வாய்ப்புகள்.... தொலைந்த ஆசைகள்...

    • மேடையில் எப்படி கவுரவிப்பார்கள்? நாம் மேடைக்கு செல்லும் போது என்ன மாதிரி காஸ்ட்யூமில் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்தேன்.
    • பட்டு புடவையில் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருந்தேன். இதயம் மட்டும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

    மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் சபையில் ஒருவரை அழைத்து நீதான் மகாராணி என்று மகுடம் சூட்டி கவுரவித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட மனநிலையில்தான் நானும் அன்று இருந்தேன்.

    நூறு நாட்களையும் கடந்து தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த 'சாண்டி'யின்(தெலுங்கில் 'சின்னதம்பி') வெற்றி விழா.

    ஐதராபாத்தில் விழா நடைபெற்ற அரங்கம் நிரம்பி வழிந்தது. விழாவின் நாயகி நான் என்பதால் நான் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை.

    ஏற்கனவே சீதாராமையா காரு மனவரலு வெற்றி விழாவில் விருது, மாநில விருது பெற்றிருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தையும் எனக்கு தந்திருந்தது. அதனால் இந்த விருது பெற்றது மிகவும் பெருமையாக இருந்தது.

    விழாவுக்கு ஏற்பாடு செய்து என்னை அழைத்ததுமே விழாவை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் ஓட தொடங்கியது.

    மேடையில் எப்படி கவுரவிப்பார்கள்? நாம் மேடைக்கு செல்லும் போது என்ன மாதிரி காஸ்ட்யூமில் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்தேன்.

    1993-களில் 'டிஸ்யூ பட்டு' என்ற புதிய ரக பட்டு சேலை அறிமுகமாகி இருந்தது. பட்டு என்றாலே காஞ்சிபுரம் என்று மட்டுமே இருந்த நிலையில் இந்த புதிய வரவு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    நானும் அந்த விழாவுக்கு அணிந்து செல்வதற்காக டிஸ்யூ பட்டை தேர்வு செய்தேன். சென்னையில் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்று எனக்கு பிடித்த 'பிங்க்' நிறத்தில் பட்டு வாங்கினேன்.

    பட்டு புடவையில் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருந்தேன். இதயம் மட்டும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

    'அரச்ச சந்தனம்

    மணக்கும் குங்குமம்

    அழகு நெற்றியிலே

    ஒரு அழகு பெட்டகம்

    புதிய புத்தகம்

    சிரிக்கும் பந்தலிலே....

    -அந்த பாடலை நினைத்தேன். ரசித்தேன். மனதுக்குள் இனித்தது.


    விழா பிரமாண்டமாக நடந்தது. சாதனை படைத்த சாண்டி பட வெற்றி விழா விருது வழங்கினார்கள். நான் பெற்ற அந்த விருதுதான் அடுத்தடுத்த எனது சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. ஏனெனில் மீனாவை மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

    என் மீது முழு நம்பிக்கை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷம். மனதார என்னை பாராட்டினார்.

    அதை தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்தன என்பதை விட வந்து குவிந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தெலுங்கில் பிசியாகி விட்டேன்.

    உட்கார கூட நேரமில்லை என்பார்களே அதே போன்ற நிலைதான். எப்போதும் பிசி.... பிசி.... ஓடி ஓடி உழைத்தேன். நடித்தேன். அதற்கு ஏற்ப பேரும் புகழும் கிடைத்தது.

    சில நேரங்களில் சின்ன சின்ன ஆசைகளை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வரும். தீபாவளி என்றாலே எல்லோருக்கும் சந்தோசம் வந்து விடும். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று வீடே அமர்க்களப்படும். புத்தாடை, இனிப்புக்கு எந்த குறையும் இருந்ததில்லை. ஆனால் தீபாவளின்னா எனக்கு ரொம்ப பிடிச்சது பட்டாசுதான். அதுவும் சின்ன சின்ன வெடிகள் பிடிக்காது. அதிரடியான சரவெடிகள்தான் பிடிக்கும். 5000 வாலா, 10 ஆயிரம் வாலாக்கள்தான். எங்கள் தெருவில் ரோட்டில் விரித்து கொளுத்துவேன். டபார்... டபார்... என்று இடைவிடாமல் வெடிப்பதை பார்த்து துள்ளி குதிப்பேன். எனக்கு எந்த பயமும் கிடையாது.

    ஆனால் வீட்டில் இருந்து அம்மாவும், அப்பாவும் தான் பயந்து மீனா கண்ணு... பார்த்து... பத்திரம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என்னுடைய தோழிகளும் வருவார்கள். எனவே ஜாலிதான்.

    இந்த நிலையில் ஒரு தீபாவளிக்கு ராஜமுந்திரி அருகே உள்ள ராஜோலு என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். வீட்டுக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை விட வழக்கம் போல் பட்டாசு கொளுத்த முடியவில்லையே என்றுதான் கவலைப்பட்டேன்.

    என்னோடு இருந்த படக்குழுவினரிடம் எப்படியாவது பட்டாசு வாங்கி வாருங்கள். முக்கியமாக சரவெடி வேண்டும் என்றேன்.

    அது சிறிய ஊர்தான். அவர்களும் ரொம்ப தூரம் அலைந்து தேடியிருக்கிறார்கள். ஆனால் சரவெடி கிடைக்கவில்லை. தூக்கி எறியும் வெடிகளை வாங்கி வந்தார்கள். அப்போது மழை வேறு பெய்து கொண்டி ருந்ததால் குளிர்ந்து நமத்து விட்டது. சரியாக வெடிக்க வில்லை. இதனால் எனக்கு அந்த தீபாவளி புஸ்வானம் போல் ஆகிவிட்டது.

    ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பட்டாசு போட முடியாத சூழ்நிலையும் உருவாகி விட்டது. ஒலி மாசு, காற்று மாசு போன்ற விழிப்புணர்வால் பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தை குறைத்துக் கொண்டேன்.

    அதுவும் இப்போது பள்ளியில் படிக்கும் என் மகளுக்கு என்னை விட கூடுதலான விழிப்புணர்வு. அவள் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    தீபாவளி அன்று வீட்டில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவோம். அதை விதவிதமான வடிவங்களில் வரிசையாக அடுக்கி வைத்து மகிழ்வோம்.

    விரைவில் தீபாவளி கொண்டாடப் போகிறோம். அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    அடுத்த வாரம் இன்னும் பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

    Next Story
    ×