என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்: உயிருக்கு வந்த ஆபத்து...!

- சிரமத்தை பார்க்காமல் அதிகாலையில் ஷூட்டிங் முடிந்தாலும் மீண்டும் காலையில் ஷூட்டிங்கை தொடங்கி விடலாம் என்று கூறியிருந்தேன்.
- தினமும் காலையில் புறப்படும் போதே ஆபத்தை நினைத்து பயந்தால் அன்றாட வாழ்க்கையே அமைதியற்றதாகி விடும்.
அதிகாலை 6 மணி....
ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் அறை...
"மீனா... எழுந்திரு... நேரமாச்சு..." என்ற அம்மாவின் குரல் காதில் விழுந்தது.
ம்ம்... என்றபடி மெத்தையில் புரண்டேன். கண்ணை திறக்க முடியவில்லை. தூக்கம் சொக்கியது. அடித்து போட்டது போல் உடம்பெல்லாம் வலித்தது.
வலிக்காதா பின்னே...? ஷூட்டிங் முடிந்து அதிகாலை 2 மணிக்குதான் வந்து படுத்தேன். அடுத்த 4 மணி நேரத்துக்குள் மீண்டும் எழுப்பினால் எப்படி இருக்கும்.
செங்கல்வா பூதண்டா (சிவந்த பூக்கள்) என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.
ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதை முடித்து விட்டு மாலையில் விமானத்தை பிடித்து சென்னை வந்து இரவில் ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டியிருந்தது.
அதனால்தான் சிரமத்தை பார்க்காமல் அதிகாலையில் ஷூட்டிங் முடிந்தாலும் மீண்டும் காலையில் ஷூட்டிங்கை தொடங்கி விடலாம் என்று கூறியிருந்தேன்.
காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்று முடிவு செய்து இருந்தோம். ஆறு மணிக்கே எழுந்து ரெடியாகி, மேக்-அப் போட தொடங்கினால்தான் சரியான நேரத்துக்கு செல்ல முடியும்.
அதனால்தான் 6 மணிக்கு எழுப்பினார்கள். சிரமப்பட்டு எழுந்து தயாராகிவிட்டேன். மேக்-அப் போட்டுக் கொண்டதும் உற்சாகம் பிறந்த விடும்.
அன்றும் அப்படித்தான்... உற்சாகத்துடன் ஷூட்டிங் கிளம்பினேன். ஆனால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கப் போகிறோம் என்றெல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை.
தினமும் காலையில் புறப்படும் போதே ஆபத்தை நினைத்து பயந்தால் அன்றாட வாழ்க்கையே அமைதியற்றதாகி விடும். வாழ்க்கையில் எது நடந்தாலும் சந்தித்துதானே ஆக வேண்டும்?
ஐதராபாத் நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஷூட்டிங் நடைபெறும் ஏரி இருந்தது. காரை விட்டு இறங்கி ஏரியை பார்த்தேன். வாவ்... கடல் போல் பரந்து விரிந்து கிடந்தது. சுற்றிலும் அடர்ந்த காடுகள்... மலைகள்... பார்ப்பதற்கு இயற்கை சூழ்ந்த அந்த பகுதி பிரமிப்பாக இருந்தது.
ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதி. எனவேதான் அந்த இடத்தை தேர்வு செய்து இருந்தார்கள்.
ஏரியின் மறுகரைக்கு சென்றால் நீர் வீழ்ச்சியும், வனவிலங்குகள் தண்ணீர் அருந்தும் பகுதியும் இருப்பதாக கூறினார்கள்.
அந்த ஏரியில் நானும் ஹீரோவும் மட்டும் தனியாக மிதக்கும் ஒரு மிதவையில் நின்றபடி ஆடி-பாடி நடிக்க வேணடும்.
ஹீரோ அஜய். அவருக்கு அதுதான் முதல் படம். ஆனால் எனக்கு 3-வது படம். எனவே வயதில் சின்னவளாக இருந்தாலும் நாம்தான் சீனியர் என்ற உணர்வு மனதில் இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.
நிஜமாகவும் அவர் புதுமுகம் என்பதால் கேமிரா முன்பு எப்படி நிற்பது? எப்படி நடப்பது? எப்படி திரும்புவது? என்பதையெல்லாம் சொல்லி கொடுப்பேன்.
படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தயாரானது. ஏரிக்கரையில் டிராலியை தயார் செய்து, காமிரா ஆங்கிளையும் ஒளிப்பதிவாளர் சரியான கோணத்தில் வைத்தார்.
நாங்கள் ஏரியில் செல்வதற்காக மிதவை தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது இரண்டு டிரம்மை போட்டு அதன்மீது ஒரு சிறு மரபலகையை கட்டி மிதக்க விட்டிருந்தார்கள். பக்கவாட்டில் பிடித்துக் கொள்ள கைப்பிடிகள் எதுவும் கிடையாது. அதே போல் மிதந்து செல்வதற்கு துடுப்போ, மோட்டாரோ எதுவும் கிடையாது. தண்ணீர் அசைவிலும், நாங்கள் ஆடும் போது ஏற்படும் அசைவிலும் மிதவை மிதந்து செல்லும் அவ்வளவுதான்.
மிதவையை இழுத்து பிடித்து கொள்வதற்காக நீளமான கயிறு கட்டியிருந்தார்கள். அந்த கயிறை பிடித்தபடி ஒருவர் கரையில் அமர்ந்து இருந்தார்.
இந்த காலத்தை போல் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாததால் தகவல்கள் சொல்வதற்காக கரையில் மெகாபோனுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
நாங்கள் ஏரியில் நிற்கும் போது எங்களிடம் சொல்ல வேண்டியதை அந்த மெகா போனில் அறிவித்து கொண்டிருப்பார்கள்.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளும் தயாரானதும் டைரக்டர் எங்களை அந்த மிதவை மீது ஏற்றி விட்டார்.
மிதவை நகர தொடங்கிய போது பாடலுக்கு ஏற்றவாறு நாங்கள் ஆட தொடங்கியதும் மிதவையும் கவிழ்த்தி விடுவது போல் ஆடியதும் பயமாக இருந்தது. ஆனால் அந்த பய உணர்ச்சி முகத்தில் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் காட்சி சரியாக அமையாது.
எனவே பயத்தை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு நடித்தேன்.
இன்னொரு புறம் தூக்கம் இல்லாததால் மிகவும் களைப்பாக இருந்தது. அதோடு காலை 6 மணிக்கே கிளம்பியதால் வெறும் ஜூஸ் மட்டுமே குடித்திருந்தேன். எதுவும் சாப்பிடாததால் வயிற்று பசியும் வாட்டி எடுத்தது. அதையும் தாங்க வேண்டியிருந்தது.
காலை 11.30 மணியளவில் முதல் டேக் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு அடுத்த காட்சிக்கு கயிறு தெரியக்கூடாது. எங்களை சுற்றிலும் ஏரி தண்ணீர் மட்டும் பிரமாண்டமாக தெரிய வேண்டும் என்று டைரக்டர் சொன்னதால் மிதவையில் கட்டியிருந்த கயிறை அகற்றி விட்டார்கள்.
நூலறுந்த பட்டம் காற்றடிக்கும் திசையில் எங்கெங்கோ பறந்து கொண்டிருப்பது போல் எங்கள் மிதவையும் மிதந்து சென்று கொண்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஏரியில் வெகு தூரம் சென்றுவிட்டோம். கரையில் நின்ற படப்பிடிப்பு குழுவினர் எங்களுக்கு மிகச் சிறிதாக தெரிந்தார்கள். அப்படியானால் ரொம்ப தூரத்துக்கு வந்துவிட்டோம் என்பதை புரிந்து கொண்டோம்.
சுற்றும், முற்றும் பார்த்தோம். எங்களையும் அறியாமல் ஒருவிதமான பயம் மனதை சூழ்ந்தது. நாங்கள் எவ்வளவோ கத்தியும் கரையில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.
நான் அன்று ஆரஞ்சு நிற சேலை கட்டியிருந்தேன். அந்த சேலை தலைப்பை அங்கும் இங்கும் அசைத்து யாராவது பார்த்து காப்பாற்ற மாட்டார்களா? என்று நினைத்தோம்.
யாரையும் காணவில்லை. வேறு வழியில்லை என்று நானும் ஹீரோவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம்.....
எப்படி உயிர் தப்பினோம் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)