என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மக்களை முன் நிறுத்தி பாடிய மகா கவிஞன்!
- ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தானே சிறந்து விளங்க வேண்டும்; அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயம் தலைநிமிரும்.
- பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி - ஒவ்வோர் இளைஞன், இளைஞிக்கும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிற எளிய வழிமுறைகளின் கையேடு.
ஒரு கேள்வியுடன் தொடங்கலாம். பாரதியாரும் அதைத்தான் விரும்புவார்.
ஒரு 'படைப்பாளி' எப்படி இருக்க வேண்டும்..? 'கவிஞன்' அல்லது 'கலைஞன்' என்றால், அவரிடம் இருக்க வேண்டிய முக்கியமான தகுதி என்ன..?
ஒன்றே ஒன்றுதான் - தன்னை 'மறந்து' பிறரை நேசிக்க வேண்டும். தனக்கு அப்பால் உள்ள உலகத்தில் வாழ வேண்டும்.
அப்போதுதான், 'இந்த உலகம்' ஏற்படுத்திய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சுயமாக, பொதுவாகச் சிந்திக்க முடியும்; செயல்பட முடியும். இத்தகைய ஒருவரின் படைப்பு, மனித குலம் முழுமைக்கும் சொந்தம் ஆகிறது.
உதாரணத்துக்கு, உலகத்துக்கு தமிழ் தந்த கொடை - திருக்குறள். தன்னையும் தன் குடும்பத்தையும் தன்னை சுற்றி இருப்போரையும் தாண்டி உலகம் முழுமைக்குமாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிந்தித்தார். அதனால் விளைந்தது - உலகப் பொதுமறை.
இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் இருக்க வேண்டும். இதற்கான ஒரு சிறந்த, நல்ல உதாரணம் - மகாகவி பாரதியார்.
அவர் காலத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டம், தீவிரம் பெற்றது. அதை ஒட்டியே, இந்திய மக்களின் குரலாய் இந்திய சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்தார் பாரதி. ஆனால் உண்மையில் பாரதி என்கிற கவிஞனின் ஆழ்மனம், இந்த அரசியல் விடுதலைக்கு அப்பால், சமூகம் பற்றி சிந்தித்தது.
சமூகக் கொடுமைகளுக்கு, சமூகத் தீமைகளுக்கு, சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தார் பாரதியார்.
"சாதிகள் இல்லையடி பாப்பா",
"சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்புதனில் செழித்திடும் மையம்";
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்; பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்".
மக்களுக்கு நல்லறிவு, யாரும் தந்து வர வேண்டும் என்பது இல்லை. ஆனால் அவ்வப்போது சரியான கருத்துகளை, சரியான விகிதத்தில் அவர்களுக்குத் தந்தாக வேண்டும். இந்தப் பணியை ஒரு படைப்பாளி தான் செய்ய முடியும்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம்".
உறுதியான மனம், கலக்கம் இல்லாத சிந்தனை - இருந்து விட்டால் போதும்; ஒரு மனிதனால் வாழ்க்கையில் வெற்றி கண்டு விட முடியும். இதை உணர்ந்தே மகாகவி பாரதி சொல்கிறார்:
"திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்."
அநேகமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் - "தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி..' நேரத்தை வீணடித்து, சோம்பேறிகளாய் வாழும் வேடிக்கை மனிதர்களில் ஒருவராய்த் தானும் இருக்கக் கூடாது; யாரும் இருத்தல் கூடாது என்பதில் பாரதி தெளிவாக இருந்தார்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் வெறுமனே வயிற்றுப் பிழைப்புக்கே போராடுவது...?
இதை இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் சகித்துக்கொண்டு இருக்கப் போகிறோம்..? எங்கே யார் உணவு கொடுத்தாலும், கும்பலாய் ஓடிச்சென்று வாங்கும் நிலைமை இன்னும் நீடிக்கலாமா..? நெஞ்சம் வெடித்துச் சீறுகிறான் பாரதி -
"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்; வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்...?"
இந்தியாவின் முன்னேறிய மாநிலம் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். இது உண்மைதான். ஆனாலும், இன்னமும் இலவச உணவு என்றால் மக்கள் விழுந்தடித்து ஓடுகிறார்களே... இது சரியா..? இந்த நிலை நீங்க என்ன செய்ய வேண்டும்..?
"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே... இயந்திரங்கள் வகுத்திடுவீரே..." என்று வகைவகையாய்ப் பல தொழில்களை வரிசைப்படுத்தி, 'இதில் ஏதாவது செய்யுங்கள்..' 'உங்கள் வளர்ச்சி உங்கள் உழைப்பால் இருக்கட்டும்' என்று ஓர் அற்புதமான செய்தி சொல்கிறார் பாரதியார்.
ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தானே சிறந்து விளங்க வேண்டும்; அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயம் தலைநிமிரும். இதுவே பாரதியின் வழிமுறையாக இருந்தது.
குறிப்பாக இளைஞர்கள்...
பாரதியின் ஒவ்வொரு வரியும் செயல் புரியத் தூண்டுகிறது; இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது:
"அச்சம் தவிர்",
"குன்றென நிமிர்ந்து நில்",
"பணத்தினைப் பெருக்கு",
"பொருள் தனைப் போற்று"
"வையத் தலைமை கொள்"...
கவனித்தீர்களா...?
பொதுவாக எல்லாரும் 'பணத்தின் மீது ஆசை வைக்காதே' என்றுதானே சொல்வார்கள்..? ஆனால், மகாகவி பாரதி தான் முதன்முறையாக, "பணத்தினைப் பெருக்கு", "பொருள்தனைப் போற்று என்று முழங்கினான். நமது நாட்டுக்கு நமது மக்களுக்கு, 'பொருள்' மீது நாட்டம் வர வேண்டும்; அப்போதுதான் மென்மேலும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெருகும். இதன் மூலம் தான் ஒட்டுமொத்த சமுதாயம் வளர்ச்சி பெற முடியும். இதுதான் உண்மையில் ஆக்கபூர்வ சிந்தனையின் உச்சம்.
பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி - ஒவ்வோர் இளைஞன், இளைஞிக்கும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிற எளிய வழிமுறைகளின் கையேடு.
கவலைகளுக்கு இடம் தராதீர்கள்; சோர்வு வேண்டாம்; அச்சம் - கூடவே கூடாது; துன்பம் - நம்மை முடக்கி விடக்கூடாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியையும் ஒவ்வொரு நொடியையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, ஒவ்வொரு மனிதனும் தலை நிமிர்ந்து நன்னெறியில் வாழ மகாகவி பாரதி - ஓர் உந்துசக்தியாகத் திகழ்கிறான்.
உண்மைதான். நாட்டு விடுதலை, நாட்டுப்பற்று, தமிழ் மீது தீராக் காதல், தமிழ் உணர்வு... எல்லாம் பாரதியின் பாடல்களில் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சி, பாரதியின் குரல் எங்கே ஓங்கி ஒலிக்கிறது...?
ஒவ்வொரு தனி மனிதனும் நிமிர்ந்து நிற்க வேண்டும்; சிறந்து வாழ வேண்டும்.
இதுதான் மகாகவி பாரதியின் ஆகச் சிறந்த செய்தி.
மனதில் நிறுத்துவோம் - நாம் ஒவ்வொரு வரும் இந்த சமுதாயத்தின், இந்த உலகத்தின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கம்.
இந்த சமுதாயத்தை நம்பி நான் இருக்கிறேன் என்பது எந்த அளவுக்குச் சரியோ, இந்தச் சமுதாயம் என்னை நம்பி இருக்கிறது என்பதும் அதே அளவுக்குச் சரியே.
தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக உழைக்கும் மனத் தெளிவு பெறுவதே - மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கு நாம் செலுத்தும் சரியான மரியாதையாக இருக்கும்.
நினைவில் கொள்வோம் -
நமது செயல் திறத்தாலே இந்த வையகம் உயர்ந்திட வேண்டும்!