search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வெள்ளைக் குதிரை எங்கே போனது?
    X

    வெள்ளைக் குதிரை எங்கே போனது?

    • அன்பும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. ஏமாற்றம் மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.
    • ‘வருவதும் போவதும் நம் கையில் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை’ என்று சொல்லிப் புன்னகைத்தார் துறவி.

    'வாழ்க்கை ஒரு நொடியில் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போது உங்களிடம் இருப்பதைக் கொண்டாடுங்கள்'.

    - ஜோடி பிகோல்ட்

    அவர்கள் முதிர்வயது தம்பதியர். என் தந்தையின் ஆத்மார்த்த நண்பர்கள். அவர்களிடம் நேரில் சென்று கொடுக்கும்படி, ஊரிலிருந்து என் தந்தையார் சில நூல்களை எனக்கு அனுப்பியிருந்தார்.

    வார நாட்களில் அவர்களின் வீட்டிற்குச் செல்வதற்கு எனக்கு நேரம் வாய்க்கவில்லை. எனவே, அந்த வாரத்தின் இறுதி நாளில், நூல்களைக் கொடுத்துவரச் சென்றேன். பட்டணத்தின் ஓர் எல்லையில் அவர்களின் வீடு. இதற்குமுன் நான் அங்கு சென்றிருந்ததில்லை. முதல்தடவை என்பதால் சற்று சிரமப்பட்டுக் கண்டுபிடித்து, அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது மதிய வேளையாயிற்று.

    என்னைப் பார்த்ததும் அந்த அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் ஏக மகிழ்ச்சி. என் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வாஞ்சையுடன் வரவேற்றார்கள். அப்பா, அம்மா உட்பட எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் மிகுந்த அன்புடன் விசாரித்த அவர்களின் மெல்லிய மனம் மிக இனிது. அப்பா அனுப்பியிருந்த நூல்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு எழுந்தேன்.

    'அங்கிள், நான் கிளம்புறேன். எனக்கு அவசர வேலைகள் இருக்குது'.

    'அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டுதான் போகணும். இன்னிக்கு எங்க கல்யாண நாள்'.

    'அப்படியா! ரொம்ப சந்தோஷம். விஷ் யு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே. இன்னொரு நாள் நான் வர்றேன். இன்னிக்கு நேரம் இல்லை' என்று நான் சொல்ல, என்னை அழுத்திப் பிடித்து அமர்த்தினார் அங்கிள்.

    'விருந்து தயாராகுது. மகன், மருமக, பேரப்புள்ளைங்க வர்றாங்க. நீங்களும் வந்தது எங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி' என்று வாய்நிறைய புன்சிரிப்புடன் சொன்னார்.

    அவர்களை மீறி என்னால் எழுந்து செல்ல முடியவில்லை.

    'அங்கிள், உங்க மகன் குடும்பம் வெளியூர்ல இருந்து வர்றாங்களா?'

    'இல்ல, இதே ஊர்தான். கொஞ்சம் தூரத்துல இருக்காங்க. ஆனா, வர்றதே இல்ல. ரொம்ப பிசி. வருஷத்துக்கு ஒன்றிரண்டு தடவை வந்தாலே பெருசு. எங்களுக்கும் அலையறது கஷ்டம். ஆனா, மனசு கேட்காமல் எப்பவாது போய்ட்டு வருவோம்' என்றார்.

    எனக்கு ஜூஸ் கொண்டுவந்து கொடுத்து விட்டு, பக்கத்தில் அமர்ந்தார் ஆண்ட்டி.

    'தம்பி, இன்னும் கொஞ்ச நேரத்துல மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, பிஷ் வறுவல், பாயாசம் எல்லாம் ரெடியாயிடும். பையன் குடும்பமும் வந்துடும். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்' என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு விரைந்தார் ஆண்ட்டி.

    'வயசான காலத்துல பேரப்புள்ளைங்களைத் தான் மனசு ரொம்ப தேடுது. அவங்களுக்கும் வந்து போறதுக்கு நேரம் இல்ல. பல மாசம் கழிச்சி இன்னிக்குதான் வர்றாங்க. அதனால் எங்க ரெண்டு பேருக்கும் மனசு ரெக்க கட்டிப் பறக்குது தம்பி' என்று மகிழ்ச்சி ததும்பத் ததும்ப அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவருடைய மொபைல் போன் ஒலித்தது.

    'பையன்தான் கூப்பிடுறான்' என்று சொல்லிக்கொண்டே ஆர்வத்துடன் போனை எடுத்தார்.

    'ராஜா, நாங்க காத்திட்டிருக்கோம். பக்கத்துல வந்துட்டீங்களா?' என்று குதூகலமாய்க் கேட்ட அவரின் முகம் சட்டென்று வாடிச் சுருங்கியது.

    'ஏன்டா ராஜா... உங்களுக்காக அம்மா இன்னிக்கு வகைவகையா விருந்து சமைச்சிருக்கிறா. உங்க எல்லாரையும் பார்க்கிறதுக்கு எங்க மனசு துடிக்குது. வரலேன்னா மனசு ரொம்ப கஷ்டப்படும்' என்று சொல்லும்போது அவரின் குரல் தழுதழுத்தது.

    'சரி ராஜா, உங்களுக்கு வசதிப்படும்போது வாங்க' என்று சொல்லிவிட்டு, மனைவியைப் பார்த்தார். அவர் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

    'மருமகளோட ஆபீஸ் பிரண்ட்ஸ் இன்னிக்கு வீட்டுக்கு வர்றாங்களாம். திடீர் புரோகிராம். அதனால் இங்க வரமுடியலைன்னு சொல்றான்' என்றார். அவரின் குரலில் ஏமாற்றத்தின் வலி தெரிந்தது.

    அன்பும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. ஏமாற்றம் மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.

    நம் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். கைகூடுவதும் உண்டு; கனவாகிப் போவதும் உண்டு. இதுதான் வாழ்வின் எதார்த்தம்.

    பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முதுமை; பேரப்பிள்ளைகளைக் காணத் துடிக்கின்ற பரிதவிப்பு; வர மாட்டார்களா என்கிற ஏக்கம். இன்று பல வீடுகளில் முதியவர்களின் நிலை இதுதான்.

    ஒருவன் எவ்வளவுதான் சம்பாதிக்கட்டும்; எல்லா வசதிகளையும் பெற்றிருக்கட்டும். தன் பெற்றோரின் ஆத்மார்த்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆசை அவனிடம் இல்லையெனில், அவன் நன்றி கெட்டவன் என்பதே உண்மை.

    எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்! எத்தனை எத்தனை ஏமாற்றங்கள்! ஒன்றை விரும்புகின்றோம். அதையே நாடுகின்றோம். எதிர்பார்ப்பு எத்தனையோ கற்பனைகளை நமக்குள் விதைக்கின்றது. கனவு காண்கின்றோம். கைகூடவில்லை எனில் மனம் இளைத்துவிடுகின்றது. எனினும், எதிர்பார்ப்பு இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை.

    விவசாயிகளின் எதிர்பார்ப்பு மண்ணைச் சார்ந்திருக்கின்றது; மழையை நம்பியிருக்கின்றது. அந்த மழையே அவர்களுக்குப் பாதகமாகிவிடுவதும் உண்டு.

    அறுவடைக்குப்பின் விதைக்கான நெல்லைத் தங்கள் கைகளால் போரடிக்கிறார்கள். நன்கு உலர்த்தி, காற்றில் தூற்றுகிறார்கள். விதைகள் மீது பூச்சித் தாக்குதலைத் தடுக்க வேண்டுமே. அதற்காக, நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகளைக் கலந்து வைக்கிறார்கள். விதைப்பதற்குமுன், விதைகளை நீரில் இடுகிறார்கள். மூழ்கும் விதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

    கடின உழைப்பு. இராப்பகலாய்க் கண்விழிப்பு. எனினும், சில சமயங்களில் நீரின்றிப் பயிர்கள் கருகிச் சாகின்றன. சில சமயங்களில், மழை வெள்ளத்தில் மூழ்கி அழிகின்றன.

    முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் மூலம் 14,707 ஏக்கர் நிலங்களில், ஆண்டுதோறும் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகின்றது.

    கடலூர் உட்பட சில பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் முதல்போக சாகுபடிக்கென, வயல்களை உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் உற்சாகமாய் ஈடுபட்டனர்.

    நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. விவசாயிகளின் மனதில் ஆயிரமாயிரம் கனவுகள். ஆனால் கடுமையான இயற்கைப் பேரிடர். அண்மையில் பெய்த பெருமழை வெள்ளத்தில் வயல்வெளிகள் மூழ்கின; நெற்கதிர்கள் சாய்ந்து கீழே சரிந்தன.

    வியர்வை சிந்திய விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் கண்ணீரில் கரைந்தன. சந்தோஷமும் சஞ்சலமும் மாறி மாறி வருவதுதான், எதிர்பார்ப்புகளில் நாம் காண்கின்ற பலன்கள். அவை எல்லாவற்றிலும் இருந்து நாம் புதிய புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

    வெளியூர்ப் பயணங்களில் எப்போதாவது பேருந்து 'பிரேக் டவுன்' ஆகிவிடலாம். குறித்த நேரத்தில் ஊர்போய்ச் சேர முடியாத சூழ்நிலை ஏற்படும். எனினும், அத்தருணங்களில் சக பயணிகளிடம் பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் சில புதிய நண்பர்களையும் நாம் பெறக்கூடும்.

    நல்லது கெட்டது எதுவுமே நாம் எடுத்துக் கொள்கின்ற விதத்தில்தான் இருக்கின்றது. கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் அதுவும் நன்மைக்கே என்று நினைக்கின்ற மனோபாவம் இருந்துவிட்டால், எதையுமே மிகச்சிறந்த அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியும்.

    மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். அதுதான் லட்சியம். அதற்காகவே பிரத்யேகப் பயிற்சிகள். தூங்காமல் கொள்ளாமல் எப்போதும் படிப்பு. எனினும், அவனால் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை. மனம்சோர்ந்து போகின்றான். எதிர்காலமே இல்லை என்பதுபோல் தோன்றுகிறது. அந்த விரக்தியிலேயே தன் எதிர்காலத்தை இருளாக்கிக் கொள்கின்றான்.

    கவிஞர் தியாரூ, 9940056332

    வாழ்க்கை என்பது நம் எதிர்பார்ப்புகளின் வெற்றியில்தான் இருக்கிறது என்னும் தவறான எண்ணத்தை நாம் தவிர்த்துவிட வேண்டும். நம்பிக்கைதான் நம்முடைய பலம். அதுதான் நம் வாழ்வை ஒளிபெறச் செய்யும்.

    ஒரு விஷயம் நாம் எதிர்பார்த்தபடி நடக்காதபோது, அதைவிடச் சிறந்த எதிர்பாரப்புகளை ஏற்படுத்திக்கொண்டு பயணித்தால், வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகும்.

    தனது தோட்டத்தில் பயிர்செய்து ஒரு விவசாயி வாழ்க்கை நடத்தினான். ஒருநாள் அதிகாலையில், பக்கத்துக் காட்டிலிருந்து தப்பி வந்த ஒரு குதிரைக் குட்டி அவன் குடிசைமுன் வந்து நின்று கொண்டிருந்தது. அழகிய வெள்ளை நிறம். அதனைக் கண்ட விவசாயி, மகிழ்ச்சியுடன் அரவணைத்துக் கொண்டான்.

    குதிரை வளர்ந்தது. பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தது. அந்த விவசாயி அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். ஒருநள் திடீரென்று, அந்த வெள்ளைக் குதிரை காணாமற் போய்விட்டது. பதறியடித்தபடி எல்லா இடங்களிலும் தேடினான். குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வரும்வழியில் மரத்தடியில் ஒரு துறவியைக் கண்டான். விஷயத்தை வருத்தத்துடன் சொன்னான்.

    'உன் வாழ்வில் அந்தக் குதிரை உன்னிடம் வருமென்று நீ எதிர்பார்த்ததுண்டா?' - கேட்டார் துறவி.

    'இல்லை' என்றான்.

    'பின்னர் ஏன் வருந்துகின்றாய்? வருவதும் போவதும் நம் கையில் இல்லை' என்று சொல்லிவிட்டு அந்தத் துறவி கடந்து சென்றார்.

    சில மாதங்கள் ஓடின. ஓர் அதிகாலை வேளையில், அந்த வெள்ளைக் குதிரை தன்னுடன் இன்னொரு குதிரையையும் கூட்டிக்கொண்டு, அவன் குடிசைமுன் வந்து நின்றது. விவசாயி பூரித்துப்போனான்.

    இரண்டு குதிரைகளையும் கூட்டிக்கொண்டு, தண்ணீர் காட்ட ஆற்றுக்குச் சென்றான். அந்நேரம், குளித்துக் கரையேறி வந்த அதே துறவியை அங்கு சந்தித்தான்.

    'சாமி, காணாமற்போன என் குதிரை இன்னொரு குதிரையையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது' என்றான்.

    'ஒன்று போய் இரண்டாக வருமென்று நீ எதிர்பார்த்தாயா?' என்று கேட்டார் துறவி.

    'இல்லை' என்றான்.

    'வருவதும் போவதும் நம் கையில் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை' என்று சொல்லிப் புன்னகைத்தார் துறவி.

    நம் மனதின் கவலைகளும் காயங்களும் நம் எதிர்பார்ப்புகளால் ஏற்படுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சியும் முன்னேற்றங்களும், நம் மேல்நோக்குச் சிந்தனைகளால் உருவாகின்றன. இதை உணர்ந்து கொண்டால், வாழ்வே இனிமை! இனிமை!

    Next Story
    ×