என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு!
- மருத்துவ உலகில் ஏ.ஐ. மிக அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.
- எந்த ஏ.ஐ. செயல்பாட்டிற்கும் அளவு, வரைமுறை இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு என்பது எந்திரங்களால் மனித உதவியுடன் செய்யக்கூடிய நுண்ணறிவு ஆகும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எந்திரங்கள் மூலம் கற்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும், செயல்களை திட்டமிடவும், சிந்திக்கவும் முடியும் என்கின்றனர்.
மனித நுண்ணறிவினை எந்திரங்களால் உருவகப்படுத்துவது தான் செயற்கை நுண்ணறிவு.
தொழில் நுட்பத் துறையில் ஏ.ஐ. எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவால் மிக உயர்ந்த வளர்ச்சியினை கண்டுள்ளது மனித சமுதாயம். இன்னும் கொஞ்ச காலத்தில் ஏ.ஐ. மனித வாழ்க்கையினையே மாற்றிவிடலாம். பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொழில் நுட்பம் விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு புரட்சி. செயற்கை நுண்ணறிவு இன்று நுழையாத இடமில்லை எனலாம். மனிதன் மூளை ஓடும் ஓட்டத்திற்கு அவனுக்கு நேரத்தினையும் உழைப்பினையும் மிச்சப்படுத்திக் கொடுக்கின்றது இந்த தொழில் நுட்பம்.
விவசாயத் துறையில்-நோய், சத்து குறைபாடு, தட்ப வெப்ப நிலை, தண்ணீர் தேவை, மண்வளம் என எதனையும் ஏ.ஐ. மூலம் அறிய முடியும்.
இன்றைய கால கட்டத்தில் வங்கிகளின் உள் மனதினை (சைபர் கிரைம்) பயன்படுத்தி மக்களை ஏமாற்றி எடுக்கும் மோசடிகளைக் கூட இந்த ஏ.ஐ. மூலம் வங்கிகள் கண்காணிக்க முடியும்.
மருத்துவ உலகில் ஏ.ஐ. மிக அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. நாம் உணராமலேயே எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் என நாம் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். புற்றுநோய், எலும்பு முறிவு இவைகளின் நுண்ணறிவினைக் கொண்டுதான் நோய்களை கண்டறிவது எளிதாகிறது.
பயாப்சி முறையில் கண்டறிவதும் இவ்வாறுதான். இனிவரும் காலங்களில் ஒரு நோய்க்கு ஒரே விதமான மருந்து என்பது கூட மாறி ஒவ்வொரு தனி மனிதனின் பாதிப்பு, உடல் தேவைக்கேற்ற அளவில் கூட மருந்துகள் வழங்கப்படும். இது ஒருவரின் உடல்நல முன்னேற்றத்திற்கு எளிதாக இருக்கும்.
மேலும் ஏ.ஐ. மூலம் ஒருவருக்கு குறிப்பிடப்பட்ட நோய்கள், பாதிப்புகள் ஏற்படுவதனைக் கூட கண்டறிய முடியும்.
உடலில் நச்சு (செப்சிஸ்) ஆபத்து நெருங்கும் நிலை இவைகளை ஏ.ஐ. மூலம் முன்னதாகவே அறிய முடியும்.
* ரோபோட் செயல் திறனே ஏ.ஐ. தானே
* இன்று நுணுக்கமான அறுவைச் சிகிச்சைகளைக் கூட இதன் திறன் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
* ஒருவரின் முழு ரெகார்டுகளை சேமித்து நிர்வகித்து வைக்க முடியும்.
இன்று எப்படி கணினி இல்லாமல் மனிதனால் வாழ முடியவில்லையோ. அது போல் வருங்காலத்தில் ஏ.ஐ. இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்படும்.
இன்று வெளிநாடுகளில் காரில் அமர்ந்து ஒருவர் தான் செல்ல வேண்டிய இலக்கினை பதிவு செய்து விட்டால் போதும். அவர் எதுவும் செய்யத் தேவையில்லை. அதுவே சாலையில் சிக்னல், வேகம் இவற்றினை கண்காணித்து செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விடும்.
போன்களில் முக அங்கீகாரம், சிரி, விளையாட்டுகள் என இவையெல்லாம் ஏ.ஐ.யின் தனி மனிதனுக்கான சிறு வெளிப்பாடுதான்.
செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜான் மென்கார்தி ஆவார். இவர் அமெரிக்க கணினி விஞ்ஞானி ஆவார்.
ஏ.ஐ. இதனை ஆக்கப்பூர்வமாக பார்க்கும் பொழுது மிக துரிதமாக துல்லியமாக எந்த வேலைகளையும் செய்ய முடியும். மனிதன் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகள் குறையும்.
* பல சேகரிப்புகளை கணித்து துல்லியமான முடிவுகளை சொல்ல முடியும். இது மருத்துவம், பண முதலீடு, வியாபாரம் போன்ற பிரிவுகளில் பேருதவியாக இருக்கும்.
* மருத்துவ துறையில் நோய் கண்டுபிடிப்பு, சிகிச்சை முறை, நோயாளிக்கு செலுத்தப்பட வேண்டிய கவனிப்பு, பராமரிப்பு இவைகளை இது துல்லியமாக சொல்லும்.
* தொழில் இடத்தில் உற்பத்தி கூட, பிரச்சினைகள் தீர வழி வகுக்கும்.
* பேரழிவு காலங்களில் மனிதனுக்கு கடினமான வேலைகளை ஏ.ஐ. கொண்டு செய்ய முடியும்.
ஆனால் ஒவ்வொன்றுக்கும் மறுபக்கம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா? அது போல் ஏ.ஐ.க்கான மறுபக்கத்தினைப் பார்ப்போம்.
* மிகப்பெரிய பிரச்சினையே மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைந்து விடும். விவசாயம் முதல் உயிர் காப்பது வரை பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய பிரச்சினை தான்.
* ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விஷயங்கள், சூத்திரம் இவை இருக்காது.
* பாதுகாப்பு இருக்காது
* பிளாக் பாக்ஸ் எனப்படும் - மனிதனுக்கே சவாலான சில முடிவுகளை ஏ.ஐ. எடுக்கலாம்
* இதனை உபயோகித்து தவறான செய்திகளை உட்புகுத்தலாம்.
* மனிதன் இல்லாமலே ஆபத்தான ஆயுதங்களை இயக்குதல், மனித அழிவு இவற்றினை ஏற்படுத்தலாம்.
* டிரோன்ஸ், ரோபோட் போன்றவை மனித கட்டுப்பாட்டில் இல்லாமல் தானே முடிவுகள் எடுத்து செயல்படலாம். இது பல நாடுகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியலாம். இன்று உலக நாடுகள் ஏ.ஐ.பற்றிய சில கவலைகளைக் கொண்டுள்ளன.
* வேலையில்லா திண்டாட்டம் பற்றியது
* ஏ.ஐ.யினை தவறாக பயன்படுத்தக் கூடிய அபாயம் பற்றியது
* இன்று சீன நாட்டில் யுத்தத்தில் சண்டையிட ரோபோட்களை உருவாக்கி வருகின்றனர். இது மனிதனின் கட்டுப்பாடின்றி தீயனவற்றை தாக்குமாறு அவைகளுக்கு கட்டளையிட்டு உருவாக்கி வருகின்றனர். இதுவே அதே ரோபோட் சுயமாக தன் போக்கில் இயங்கும் ஆபத்தும் ஏற்படலாம்.
* இது போலவே டிரோன்கள் மூலம் அதிக கவனிப்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல், வானில் தானே இயக்குதல் இவற்றினை உருவாக்குவதிலும் அதிக பண முதலீட்டினை செய்து வருகிறது.
* மிலிடரி, முப்படை இவற்றிலும் இவ்வாறே ஏ.ஐ. கொண்டு பல புதிய முயற்சிகளை கையாளுவதற்கு அதிக முதலீடு செய்கின்றனர். எந்த நாடும் இப்படி பல்வேறு பிரிவுகளில் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஏ.ஐ. மூலம் பல செயல்களில் ஈடுபடும் போது முறையற்ற போக்குகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
இரண்டு ரோபோட்கள் அவர்களுக்குள் ஒரு மொழியினை உருவாக்கி பேசியதையும், அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையும் ஒரு செய்தியாக கேள்விப்பட்டேன்.
இவையெல்லாம் ஏ.ஐ. கேட்க நீ யார்? என மனிதனை தூக்கியெறியும் காலமும், அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. என்ற சந்தேகமும் விஞ்ஞானிகளிடம் உள்ளது என்கின்றனர்.
* இப்படிப்பட்ட ஏ.ஐ. எந்திரங்களை உடனே அழிக்கும் கண்ட்ரோல் முறை மனிதனிடம் இருக்க வேண்டும்.
* எந்த ஏ.ஐ. செயல்பாட்டிற்கும் அளவு, வரைமுறை இருக்க வேண்டும்.
* ஏ.ஐ. கற்கும் முறையில் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வர வேண்டும்.
* மனித பாதுகாப்பே முதல் முக்கியம்
* அடிக்கடி ஏ.ஐ. எந்திரங்களை பரிசோதனை செய்ய வேண்டும். தவறும் பொழுதோ (அ) வேண்டுமென்றே தவறு செய்யும் பொழுதோ 'எந்திரன்' படத்தில் நடந்த நிகழ்வுகள் நிஜ வாழ்வில் நிகழலாம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏ.ஐ. என்பது நம் இயற்கையான மூளை திறனிலிருந்து செயற்கையான மூளை திறனை உருவாக்குவதாகும். அப்படி என்றால் மனித மூளையில் இன்னும் எத்தனை திறன்கள் தான் புதைந்து உள்ளன.
* ஆனால் நாம் கண்டுபிடிப்புகளின் பின்னால் ஓடுகின்றோம். நம்மால் நம்மை பற்றி கூட ஒரு சிறப்பினை உருவாக்க முடிவதில்லை.
* வெளியே எங்கெங்கோ மகிழ்ச்சியினை தேடி அலைகின்றோம். நம்முள் நம்மால் தேட முடியவில்லை.
* கண்ட 'ஆப்'களையும் இறக்கி வைத்து அதனுள் மூழ்கி சோர்வடைகின்றோம்.
* டிசைனர் துணிகள் மீது இருக்கும் மோகம் மலையேறும் முயற்சியில் இல்லை.
* குப்பைகளை தலைக்குள் ஏற்றி குவித்து வைக்கின்றோம்.
* நம் உடல் நம் மனம் நம் திறன் என எதற்கும் முக்கியத்துவம் இல்லை.
* குடும்ப உறவுகள்-குறிப்பாக பெற்றோர்களுடன் கூட நேரம் செலவழிப்பது இல்லை.
* அதிக வசதிகளை தேடுகின்றோம். இதுவும் ஒருவகை போதை தான்.
* வாழ்க்கை என்றாலே போராட்டம். நடுவே ஆங்காங்கே ஆனந்தம். அவ்வளவே!.
* ஒருவரது உணர்ச்சிகளை விட உணர்வுகள் மிக வலுவாக இருந்தால் சாதிக்க முடியும்.
* நம்மால் முடியாது என்ற எண்ணமே இருக்கக் கூடாது.
* கர்மாவிற்கு நமது முகவரி மிக சரியாக தெரியும். நாம் அனுப்புவது எதுவோ அதுவே வந்து சேரும்.
* இன்று கூட தாமதம் இல்லை. உடனே எந்த முயற்சியினையும் ஆரம்பிக்கலாமே!
* இயலாமை என்பது மனதில் தான் உள்ளது. உடலில் அல்ல.
* வாழ்க்கை ஒரு சிறிய காலமே. அதனை நம் மூளை கொண்டு அற்புதங்களை செய்யலாமே.