என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
குழந்தையின்மை சிகிச்சையில் வாடகைத்தாய் முறை
- வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான்.
- வாடகைத்தாய் முறையில் என்னென்ன சட்ட திட்டங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் முறை என்றால் என்ன?
வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும். இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும். ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாட கைத்தாய் என்பதாகும்.
இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன். வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.
எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான். அந்த தம்பதியின் முட்டை யையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.
இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்ப டையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள வாடகைத்தாய் சட்டம்:
இதையடுத்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாடகைத்தாய் முறையானது தற்போது சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி வாடகைத்தாய் முறைகளுக்கு பலவிதமான சட்ட திட்டங்களும், வழிமுறை களும், வரையறைகளும் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு வரை இந்த வாடகைத்தாய் என்பது ஒரு வணிக ரீதியிலான வாட கைத்தாய் முறையாகவே இருந்தது. 2022-ம் ஆண்டு அமல்படுத்தபட்ட சட்டத்தின் படி வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்று பார்த்தால், தங்கள் குழந்தை வளருவதற்காக, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும். இதன் மூலம் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள், பணம் மற்றும் பொருளுக்காக மட்டும் வாடகைத்தாயாக இருந்தனர்.
அவர்களை வாடகைத்தாயாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. வாட கைத்தாய் முறைக்கு உட்படுத்தப்படக்கூடிய பெண்கள் பலர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
எனவே அதுபோன்ற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாடகைத்தாய் முறையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
வாடகைத்தாய் முறை பற்றிய தவறான கருத்து:
எனவே இந்த சட்டத்தின்படி தற்போதைய வாடகைத்தாய் முறையை எப்படி செய்யலாம் என்பதை குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்கள் உள்ளிட்ட அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு பல வருடங்களாக நாங்கள் ஐ.வி.எப். செய்து கொண்டிருக்கிறோம். நாங்களும் இதற்கு முன்பு வாடகைத்தாய் முறையை செய்திருக்கிறோம். ஆனால் நிறைய பேர் வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறு எளிதாக வந்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்று நினைக்கிறார்கள். இது தவறானதாகும்.
வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான். ஏனென்றால் இதற்கு இன்னொரு சிகிச்சை முறை கருப்பை மாற்று சிகிச்சையாகும். இந்த கருப்பை மாற்று சிகிச்சையை கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் சுவீடனில் டாக்டர் மட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் என்பவர் முதல் முறையாக செய்து குழந்தை பேறு பெறப்பட்டது.
கருப்பை மாற்று சிகிச்சையில் அதிக பாதிப்பு, செலவு:
இந்த கருப்பை மாற்று சிகிச்சை இன்றும் உலகத்தில் பல நாடுகளில் செய்தாலும் கூட இதில் கருப்பை தானம் செய்பவர், தானம் பெறுபவர் மற்றும் குழந்தை பேறு பெறுதல் ஆகியவற்றில் ஆபத்தும் உள்ளது. மேலும் இதனுடைய வெற்றி விகிதம் என்பது ரொம்ப வும் குறைவாக இருக்கிறது. இதற்கான செலவுகளும், பாதிப்பு காரணிகளும் அதிகமாக இருப்பதால் இந்த முறை இன்றும் ஒரு தோல்வியடைந்த முறையாகத்தான் கருதப்படுகிறது.
மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளான இருதயம், கல்லீரல், சிறுநீரகம் மாற்று சிகிச்சை போல கருப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் கருப்பையில் ஒரு குழந்தை வளர வேண்டும், அந்த குழந்தை வளரும்போது, மாற்றப்பட்ட கருப்பையானது குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த கருப்பை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த சிகிச்சையானது மிகவும் குறைவான அளவிலான வெற்றியையே தரக்கூடியது.
ஆனால் வாடகைத்தாய் முறை என்பது குழந்தையின்மை சிகிச்சையில் மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது, குழந்தைக்கு கண்டிப்பாக பாதுகாப்பானது. அதே நேரத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெற்று கொடுக்க உட்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்தித்ததே இந்த சட்டம் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்த வகையில் வாடகைத்தாய் முறையில் என்னென்ன சட்ட திட்டங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள், யாரை வாடகைத்தாயாக தேர்வு செய்ய வேண்டும்? அவர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.