என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
இந்திரனும், வெள்ளை யானையும் சாப நிவர்த்தி பெற்ற திருத்தலம்!
- துர்வாச முனிவரின் சாபம் கேட்டு இந்திரன் நடுநடுங்கி போனான்.
- ‘சரஹணபவ’ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
அத்திரி முனிவருக்கும் அனுசுயாவிற்கும் பிறந்தவர் துர்வாச முனிவர். இவர் ருத்திரனின் மறு அவதாரமோ என்று எண்ணும் அளவுக்கு முன்கோபம் உடையவர். மற்ற முனிவர்களைப் போல அல்லாமல் அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர். இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார். காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலாவிற்கு தனது காதலனை மறக்க சபித்தவர் இவர்.
துர்வாசருக்கும் அம்பரீசனுக்கும் இடையே எழுந்த மோதல் கிருஷ்ணரின் சரிதையான பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்வாசர் சாபம் மட்டுமே இடுபவர் அல்லர். தன்னை நன்றாக கவனித்துக் கொள்பவர்களுக்கு வரங்களும் கொடுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக பாண்டுவின் மனைவி குந்திக்கு எந்த தேவரையும் நினைத்த மாத்திரத்தில் கூப்பிட அவர் அருளிய வரத்தை சொல்லலாம். இந்த வரத்தின் மூலமே கர்ணன், தருமன், பீமன், அர்ச்சுனன் மற்றும் மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் பிறக்க ஏதுவாயிற்று.
இத்தகைய சிறப்புடைய துர்வாச முனிவர் காசி மாநகரில் தன் பெயரால் லிங்கத்திரு மேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். அன்றும் அவ்வாறே துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வழிபட்டார். அவரது பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றைக் கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்தப் பிரசாதத்தை எடுத்து துர்வாச முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார்.
பின்னர் அதனை தேவர்களின் தலைவனான இந்திரனுக்குப் பரிசளிக்க எண்ணி தேவலோகம் விரைந்தார். துர்வாச முனிவர், சீற்றத்துக்குப் பெயர் பெற்றவர். அதீத சினத்தால் யார், எது என்றெல்லாம் பாராமல் சபித்து விடுவார்.
தேவேந்திரன், தனது வாகனமான ஐராவதத்தின் மீதேறி உலா வந்து கொண்டிருந்தான். தன் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் பெற்றும் இந்திரனின் அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. வெண்மை நிறத்தில் இருந்த ஐராவதத் திற்குத் தன்னைக் குறித்தும், தனது நிறம் மற்றும் இந்திரனுக்கு வாகனமாக இருப்பது குறித்தும் மிகுந்த பெருமை இருந்தது. அது மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் தனது தலைவனைச் சுமந்து கொண்டு வந்தது.
இந்திரன் எதிரே வந்து கொண்டிருந்த துர்வாச முனிவர், அவன் நீடூழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் கமண்டலத்தில் இருந்த, சிவபெருமான் தனக்காக அளித்த பொற்றாமரையை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
இந்திரன் சற்றும் பணிவின்றி, அந்தத் தாமரையின் மதிப்பை அறியாது மிகவும் அலட்சியமாக அதனை வாங்கி, அதைத் தன் யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். வெள்ளை யானையோ, அதன் புனிதம் அறியாது அந்தப் பொற்றாமரை மலரைத் தன் தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்தது.
அதைக் கண்ட துர்வாச முனிவருக்கு மிகுந்த கோபம் உண்டானது. விழிகள் சிவந்த அவர், "இந்திரா, சிவபெருமானின் பிரசாதத்தை நீ அலட்சியம் செய்து விட்டாய்! அதன் மதிப்புத் தெரியாமல் இந்த யானையிடம் கொடுத்தாய். அதுவோ அந்த மலரின்புனிதம் அறியாமல் தன் காலில் போட்டு மிதித்து விட்டது. அதனால், தேவேந்திரனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கரப்படை உன் தலையைக் கொய்து விடும்" என்று சாபமிட்டார்.
பின் வெள்ளை யானையான ஐராவதத்தை நோக்கி, "இந்திரன் உன் மீது வைத்த, இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரை, அதன் பெருமை அறியாமல் உன் கால்களால் நசுக்கினாய். அதனால், உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கும், இன்று முதல் நீ கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறுவாய். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் நூறாண்டு காலம் திரிவாய்" என்று சாபமிட்டார்.
துர்வாச முனிவரின் சாபம் கேட்டு இந்திரன் நடுநடுங்கி போனான். முனிவரின் கால்களில் விழுந்து கதறினான். தன் தவறுகளையும், யானையின் தவறையும் மன்னிக்கும்படி வேண்டினான். தேவர்கள் அனைவரும் துர்வாச முனிவரைப் பணிந்து வணங்கினர்.
துர்வாசர் அதுகண்டு சற்றே தன் கோபத்தை குறைத்தார். இந்திரனை நோக்கி, "இந்திரா நான் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. என்றாலும், பாண்டிய மன்னனின் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்" என்று ஆறுதல் கூறினார். பின் "ஆணவச்செருக்கினை உடைய வெள்ளை யானை, காட்டு யானையாகி நூறாண்டு கழிந்தபின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும்" என்று கூறினார்.
ஐராவதம் வெள்ளை யானை தன் ஆணவச் செயலுக்காகக் கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து, காட்டு யானையாக மாறியது. காடுகளுக்குள் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. பல வனங்களில் அலைந்து திரிந்தது. இப்படியே நூறாண்டுகள் கடந்தன.
துர்வாச முனிவர் மனமிரங்கி, இந்திரனைப் பார்த்து, கேடு வரும் போது கெடுமதியும் வரும் என்பார்கள், அது போல் நேர்ந்தது. வேலன் வளரும் திருச்செந்தூர் சென்று சண்முகன் பாதத்தை அன்புடன் வணங்குவாயாக. அவரைப் பணிந்து அருந்தவம் புரிவாயானால் சில நாட்கள் சென்றபின் தேவர்கள் அமுதம் வேண்டி கடலைக் கடைவார்கள். அப்போது உதிக்கும் அமுதத்துடன் லட்சுமி தோன்றுவாள். அந்த லட்சுமி உன்னைக் கண்டால் முருகன் கிருபையால் இச்சாபம் நீங்கும். பிறகு பொன்னுலகம் சென்றடையவாய்" என்று கூறிச் சென்று விட்டார்.
அதன்படி இந்திரன் திருச்செந்தூரை வந்தடைந்தான்.
கந்தனைப் பணிந்து அங்கு அரிய தவமிருந்தான். சில நாட்கள் சென்றபின் திருப்பாற்கடலை தேவர்கள் கடையும்போது உதித்த அமுதத்துடன் லட்சுமி பிறந்தாள். அவள் திருமுகத்தை இந்திரன் தரிசிக்கவே சாபம் நீங்கப் பெற்றான். முருகன் கிருபையால் பொன்னுலகம் சென்று சகல சம்பிரமத்துடன் அரசு புரியலானான்.
இந்திரன் திருச்செந்தூரில் தவம் புரிந்தபோது வெள்ளை யானை தன் எஜமான் தன்னால் அல்லவா இச்சாபம் வாங்க நேர்ந்தது. ஆகையால் இப்பாவம் தீர கந்தன் பாதத்தை அர்ச்சனை புரியவேண்டுமென்றே ஆவலினால் நாரதரைப் பணிந்து சக்தி வேலேந்திய கந்தனைப் பூஜிப்பதற்கேற்ற மந்திரத்தை உபதேசிக்க வேண்டுமாறு கேட்டது.
நாரதரும் மிக்க மகிழ்ச்சியுடன் வெள்ளை யானையின் தீவிர பக்தியை மெச்சி சடாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.
சரவணபவ என்பது முருகனுக்குரிய சடாட்சர மந்திரம். சரவணபவ என்ற மந்திரத்தில் ஒரே அட்சரமான 'வ' இருமுறை வரக்கூடாது என்பது ஒரு தத்துவம் என்பதால் "சரஹணபவ" என்று முருகனுக்குரிய சடாட்சர மந்திரம் ஆனது.
இதை சொல்லும் விதத்தில் நன்மைகள் கிடைக்கும்.
1. 'சரஹணபவ' - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
2. 'ரஹணபவச' - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
3. 'ஹணபவசர' - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.
4. 'ணபவசரஹ' - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5. 'பவசர ஹண' - என தொடர்ந்து ஜெ பித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6. 'வசரஹணப' - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும். ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.
90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை, பாக்கு, திணை மாவு, பழங்கள் வைத்து வழிபட வேண்டும்.
மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம். கல்கண்டு கூட படைக்கலாம். ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம்) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் "றீங்'' என்று எழுதி ஜெபம் செய்து அந்த விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.
மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் "ஓம் றீங்"எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும் என்பது ஐதீகம்.
அம்மந்திர உபதேசத்தைப் பெற்று ஐராவதம் தன் கவலை நீங்கிற்று. ஆனந்தக் கண்ணீர் விட்டது. முருகக் கடவுளை வணங்கி திருச்செந்தூரையும் அதன் எல்லையையும் சந்தோஷத்துடன் பிரதட்சிணம் வந்தது. சண்முகமூர்த்தியின் பாதகமலங்களை அர்ச்சித்தது.
இவ்விதம் ஐந்து நாட்கள் இரவும், பகலும் பூசித்து குமாரக் கடவுளின் பெருங்கருணையால் பாவம் நீங்கி தேவேந்திரனிடம் சென்று இன்பமாக வாழ்ந்து வந்தது.
இந்திரனும், ஐராவதம் யானையும் திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு சாபம் நிவர்த்தி பெற்றதை வியாச முனிவர் தனது மகன் சுகமுனிவருக்கு தெரிவித்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
கந்தவேளின் கருணைக் கொண்(டு) இந்திரன் முந்து பக்கத்து மொய்ம்புடன் சென்றதே என்ற வரிகள் மூலம் திருச்செந்தூர் முருகனின் அற்புதம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் செய்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.