என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மனிதக் கணினி... கணித மேதை... சகுந்தலா தேவி!
- பல பல்கலைக்கழகங்களில் சகுந்தலா தேவி நிகழ்ச்சிகள் நடக்கவே இங்கிலாந்து பத்திரிகைகள் அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்தன.
- சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார்.
இதோ சில கணிதப் புதிர்கள். விடைகளைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்:
1. ஒரு விசித்திரமான இரண்டு இலக்க எண் அது. அதனுடைய இலக்கங்களைக் கூட்டி வரும் எண்ணைப் போல மூன்று மடங்கு ஆகும் அந்த எண். அந்த எண் என்ன?
2. 1/81 – இதன் விடையை எழுதுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.
3. 1789. இந்த எண்ணை ரோமன் எழுத்துக்களில் எழுத முடியுமா?
4. 100 அடி நீளமுள்ள ரிப்பன் ஒன்று இருக்கிறது. இதில் ஒரு அடி வெட்ட ஒரு வினாடி ஆகும். இந்த ரிப்பனை ஒரு அடி துண்டுகளாக வெட்ட எவ்வளவு நேரம் ஆகும்?
5. ஒரு தவளை 30 அடி உயரமுள்ள சுவரில் ஏறுகிறது. ஒரு மணி நேரத்தில் அது மூன்று அடி ஏறுகிறது. ஆனால் மூன்று அடி ஏறினால் அது இரண்டு அடி வழுக்கி கீழே வருகிறது. சுவரின் மேலே செல்ல அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
6. தீபாவளி தினத்தன்று பரிசு கொடுப்பது அந்தக் குடும்பத்தின் பழக்கம். இரண்டு தந்தைமார் பரிசு கொடுக்க முனைந்தனர். ஒரு தந்தை தன் மகனுக்கு ரூ.150 கொடுக்க இன்னொருவர் தன் மகனுக்கு ரூ.100 கொடுத்தார். ஆனால் அந்த இரண்டு மகன்களும் தங்களிடையே ரூ.150 தான் பரிசாக வந்ததைக் கண்டனர். இதற்கான விளக்கம் என்ன?
விடை:
1. அந்த எண் 27.
27 ; 2+7 = 9 ; 9 x 3 = 27
2. 0123456789 (பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரை தொடர்ந்து எண்கள் வருவதைக் கவனிக்கவும்)
3. M D C C L X X X I X
4. 99 வினாடிகள். 99வது அடியை வெட்டிய பின் மீதி இருக்கும் ரிப்பனை வெட்ட வேண்டாமே!
5. மொத்தம் 30 மணி நேரம் ஆகும் என்று சொன்னால் அது தவறு. 27வது மணி முடியும்போது அது உச்சியிலிருந்து மூன்று அடி கீழே இருக்கும். மூன்று அடி ஏறினால் அது சுவரின் வெளியில் வந்து விடும், இல்லையா?
6. அந்தக் குடும்பத்தில் இரண்டு தந்தைமார், இரண்டு மகன்கள் என்று நினைத்தால் அது தவறு. தாத்தா, அவர் பிள்ளை, பேரன் என்று மூன்று பேர் தான் அவர்கள். தாத்தா தன் பிள்ளைக்கு ரூ.150 கொடுக்க அதிலிருந்து பிள்ளை தன் மகனுக்கு (அதாவது தாத்தாவின் பேரனுக்கு ரூ.100 கொடுத்தார். ஆக 100 + 50 = ரூ.150 தான் மொத்த பரிசுத் தொகையாக ஆனது)
இது போன்ற நூற்றுக்கணக்கான கணிதப் புதிர்களைச் சொல்லி அசத்துபவர் ஒரு கணித மேதை. அவர் யார் என்று பார்ப்போமா?
கம்ப்யூட்டரை விட வேகமாக கணக்கைப் போட முடியும் என்று நிரூபித்தவர் யார்? 3 வயதிலேயே தனது கணிதத் திறமையைக் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தவர் யார்? கின்னஸ் ரிகார்டில் தன் திறமையைப் பதிவு செய்தவர் யார்? இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக வரும் ஒரே பெயர் சகுந்தலா தேவி என்பது தான்.
பிறப்பும் இளமையும்: சகுந்தலா தேவி பங்களூரில் 1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் நாள் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சி வி. சுந்தரராஜ ராவ் சர்கஸில் ஒரு ட்ரபீஸிய வித்தை நிபுணராகவும் கயிற்றில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைப்பவராகவும் பணியாற்றி வந்தார். சகுந்தலாவிற்கு மூன்று வயது ஆகும்போது கார்ட் வித்தைகளை விளையாட்டாக அவருக்கு தந்தை காண்பிக்க அனைத்து எண்களையும் அபாரமாக அவர் சொல்வதைக் கண்டு அவர் வியந்தார். தனது மகளின் திறமையைக் கண்ட தந்தை சர்கசில் இருந்து விலகினார். தன் மகளுக்கு ஆறு வயதாகும்போது பல தெருக்களிலும் அவரது திறமையைக் காட்டும் நிகழ்ச்சிகளை நடத்தலானார்.
காலம் செல்லச் செல்ல அவரது திறமையை உலகம் நன்கு அறிந்து கொண்டு பிரமித்தது. மைசூர் பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் அவர் தனது திறமையைக் காட்டினார்.
பின்னர் 1944ம் ஆண்டு அவர் தனது தந்தையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு பல பல்கலைக்கழகங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடக்கவே இங்கிலாந்து பத்திரிகைகள் அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்தன. அவர் முதலில் ஆங்கிலம் கற்கவில்லை என்றாலும் நாளடைவில் அதைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
1950ம் ஆண்டு பிபிசி அவரைத் தனது நிகழ்ச்சிக்கு அழைத்தது. அங்கு லெஸ்லி மிட்சல் என்பவர் அவரைப் பேட்டி கண்டார். ஒரு சிக்கலான கணிதம் அவரிடம் கொடுக்கப்பட அதற்கான விடையை ஒரு சில விநாடிகளிலேயே சகுந்தலா கூறி விட்டார்.
ஆனால் விடைகள் மிட்செலின் விடைகளுடன் ஒத்துப்போகவில்லை.திருப்பி ஒரு முறை தனது விடையை மிட்செல் சரி பார்க்கும்போது சகுந்தலாவின் விடையே சரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி உலகளாவிய விதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதிலிருந்து அவருக்கு ஹ்யூமன் கம்ப்யூட்டர் (மனிதக் கணினி) என்ற பெயர் தரப்பட்டது. தொடர்ந்து பல நாடுகளிலும் அவரது கணித நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன.
1976ம் ஆண்டு நியூயார்க் நகரமே அவரது திறமையைக் கண்டு பிரமித்தது.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியரான ஆர்தர் ஜென்ஸன் அவரைத் தன் ஆய்வுக்காக அழைத்தார்.
616297875 என்ற எண்ணின் கனமூலம் என்னும் கியூப் ரூட்டையும் 170859375 என்ற எண்ணின் ஏழாம் மூலத்தையும் கண்டுபிடிக்குமாறு கூறினார்.
395, 15 என்று விடைகளை மனதிலேயே போட்டு அவர் கூற ஜென்ஸன் தான் இந்த எண்களை எழுதும் முன்னரேயே விடைகளை சகுந்தலா தேவி கூறியது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் என்றார்.
201 இலக்கமுள்ள ஒரு பெரிய எண்ணின் 23வது மூலத்தைப் போடுமாறு அவரைச் சொல்ல அவர் 50 விநாடிகளில் விடையை (விடை 546372891) அவர் சரியாகக் கூறினார். இந்தக் கணக்கின் தீர்வைக் கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் ஒரு தனி புரோகிராமையே எழுதி இதை சரிபார்க்க வேண்டி இருந்தது.
லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு 13 இலக்க எண்களைக் கொடுத்து அவற்றைப் பெருக்கி விடை தருமாறு கூற 28 விநாடிகளில் அதற்கான விடை 18, 947, 668, 177, 995, 426, 462, 773, 730 என்று கூறினார். இந்த நிகழ்வு கின்னஸ் புக் ஆப் ரிகார்ட்சில் பதிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தில் மேதையாகலாம் என்று அவர் கூறியதோடு அதற்கான திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் சொல்லித் தந்தார். தான் எப்படி மனதிலேயே இதை சாதிக்க முடிகிறது என்பதையும் அவர் விளக்கினார்.
மண வாழ்க்கை: ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் பரிதோஷ் பானர்ஜி என்பவரை அவர் மணம் புரிந்தார். அனுபமா பானர்ஜி என்ற ஒரு பெண் குழந்தை அவருக்கு உண்டு. ஆனால் 1979ல் தன் கணவரை அவர் விவாகரத்து செய்தார்.
அரசியல் ஈடுபாடு: அரசியலில் குதித்த அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் லோக் சபா உறுப்பினராக ஆந்திராவில் மேடக் தொகுதியில் இந்திரா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மும்பை தெற்குத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளராக நின்று அவர் தோல்வி அடைந்தார்.
நூல்கள்: சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார். 'பஸில் டு பஸில் யூ', 'தி வோர்ல்ட் ஆப் ஹோமோசெக்சுவல்ஸ்', 'மேதபிலிடி: அவேகன் தி மேத் ஜீனியஸ் இன் யுவர் சைல்ட்' போன்ற அவரது நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்களாகும்.
1977-ல் வெளியான ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அவரது நூல் தான் இதைப் பற்றி முழு ஆய்வு செய்யப்பட்ட நூலாக இருந்தது.
அவர் ஒரு ஜோதிட நிபுணரும் கூட. எண்களைப் பற்றிய மர்மங்கள் அனைத்தையும் அறிந்த பெரும் கணித நிபுணராக அவரை உலகம் அங்கீகரித்தது.
மறைவு: 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாசக் கோளாறுகளுக்காக பங்களூரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் இதயத்திலும் சிறுநீரகத்திலும் பாதிப்புகள் ஏற்பட அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி தனது 83ம் வயதில் மரணமடைந்தார்.
திரைப்படம்: சகுந்தலா தேவி பற்றிய திரைப்படம் ஒன்று 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.
சகுந்தலா தன் வாழ்க்கை மூலம் தெரிவிக்கும் ஒரு செய்தி இது தான். கடவுள் படைப்பில் - அல்லது இயற்கை என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் - அனைத்துமே எண்கள் தான் – கணிதம் தான்! "எல்லாமே எண்கள் தான்" என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன பிதகோரஸின் கூற்றை திடமாக, வலுவாக ஆமோதிக்கிறார் அவர்.
கணிதம் இல்லாத ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அவரது 'கணிதப் புதிர்களும் விடுகதைகளும் 'என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் விரிவாக இதைக் கூறுகிறார்.
"மனிதனும், மிருகங்களும் தங்கள் உள்ளுணர்வு மூலம் கணிதத்தை தங்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்றன. நத்தை தன் கூடை துல்லியமான கணித அடிப்படையில் உருவாக்குகிறது. சிலந்திகளின் கணித ஆற்றல் அதன் கூட்டை அமைக்கும்போது தெரிய வருகிறது. சோளம், சூரியகாந்திப் பூ ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவற்றில் கணித அமைப்பைக் காணலாம்." என்று அவர் கூறுகிறார்.
சகுந்தலா தேவியின் பொன்மொழிகளில் சில:
எண்கள் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு; அவை பேப்பரில் அடையாளங்களாக மட்டும் உள்ளன!
கணிதமில்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே எண்கள் தான்!
கல்வி என்பது பள்ளிக்குச் சென்று ஒரு பட்டத்தைப் பெறுவது அல்ல; அது உங்கள் அறிவைப் பெருக்கி வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உள்ளே இழுத்து உணர்வதாகும்.
உங்கள் உடலில் உள்ள எந்த ஒரு தசையையும் பயன்படுத்தாவிடில் அது சுருங்கி வறண்டு விடும். அதே போலத் தான் மூளையும். அதை அதிகமாக பயன்படுத்தப் பயன்படுத்த அது இன்னும் சிறப்பாக ஆகிவிடும்.
கணிதம் என்றாலேயே ஏன் குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றன? ஏனெனில் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாக அணுகுவதனால் தான் இது ஏற்படுகிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கணித மேதையாக விளங்கிய சகுந்தலா தேவியின் நூல்கள் நமது மூளை ஆற்றலை வளர்க்க உதவுபவை. அவற்றைப் பயன்படுத்துவோமாக.