search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உறவுகளை இணைக்கும் பொங்கல் படி!
    X

    உறவுகளை இணைக்கும் பொங்கல் படி!

    • திருமணமான முதல் மூன்று ஆண்டுகள் பொங்கப்படி வெகு விமர்சையாக வரும்.
    • பெற்றோர் காலத்துக்கு பின்னர் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்களின் இறுதி காலம் வரை கொடுப்பார்கள்.

    பண்டிகைகளில் பொங்கல் சிறப்பான பண்டிகை ஆகும். மற்ற பண்டிகைகள் ஏதேனும் கடவுள் அவதரித்த நாட்களாக இருக்கும் அல்லது கடவுள் கையால் அசுரன் அழிக்கப்பட்ட நாளாக இருக்கும். ஆனால் பொங்கல் என்பது மக்கள் வாழ்வியலோடு இணைந்த பண்டிகை ஆகும்.

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கூற்றின்படி உலகோர்க்கு உணவளிக்கும் விவசாயத்தை கொண்டாடும் நிகழ்வே பொங்கல் பண்டிகை எனலாம்.

    கரும்போடு ஒட்டிப் பிறந்து கிளை விரிப்பதை கணு என அழைப்பார்கள்.

    தன்னோடு பிறந்த உறவுகளோடு நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு கரும்போடு ஒட்டிப்பிறந்த கணுவின் நினைவாக கணுப் பொங்கல் என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாளை கொண்டாடுகின்றனர்.

    விவசாயத்தில் தன்னோடு இணைந்து உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனர்.

    மற்றைய பண்டிகைகள் பண்டிகை தினத்தில் மட்டுமே பரபரப்பாக இருக்கும்.

    பொங்கல் பண்டிகையோ துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே சீர் வரிசை கொடுப்பது, வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவது என களை கட்டத் துவங்கி விடும்.

    தன்னோடு உடன் பிறந்த சகோதரிகளுக்கு தான் விளைவித்த விவசாயப் பொருட்களோடு வேறு சில பொருட்களையும் பொங்கல் விழாவைக் கொண்டாட விவசாயி சீராகக் கொடுப்பதே பொங்கல் சீர்வரிசை என்பார்கள்.

    பொங்கல் வைப்பதற்காக பச்சரிசி, மண்ட வெல்லம், சிறுபயறு, புத்தாடை, மஞ்சள்கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, வாழைக்குலை, காய்கறிகள், புழுங்கல் அரிசி, தேங்காய், படியாக கொடுப்பதற்கு பணம் போன்றவற்றை தான் பொங்கல் சீர் என அழைப்பார்கள்.

    தென் மாவட்டங்களில் பொங்கல் சீர்வரிசை வழங்குவதை பொங்கப்படி கொடுப்பது என அழைப்பார்கள். வடமாவட்டங்களில் இதனை பொங்கல் சீர் என்றழைக்கிறார்கள்.

    மரக்கன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடும்போது அதனுடைய பிறந்த இடத்து மண்ணோடு சேர்த்து எடுத்து வைத்தால் தான் செழிப்பாக வளரும்.

    பெண்களும் அது போலத்தான்...

    மணமாகி புகுந்த வீடு சென்று வருடங்கள் பல ஆனாலும் பிறந்த வீட்டு நினைப்பை மறவாமல் மனதிற்குள் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

    பொங்கல் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பே பொங்கப்படி கொடுப்பது களை கட்டத் துவங்கும்.

    கிராமங்களில் அம்பாசிடர், டிரக்கர், ஆட்டோவின் மேற்புறம் கரும்புத் தோகையோடு கட்டப்பட்டு நுழைந்தாலே அது பொங்கப்படி கொண்டு செல்லும் வண்டி என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

    பொங்கப்படி வரும் தோரணையை வைத்தே எத்தனையாவது பொங்கப்படி என்று கிராமங்களில் பெரியவர்கள் கணித்துச் சொல்வார்கள்.

    திருமணமான முதல் மூன்று ஆண்டுகள் பொங்கப்படி வெகு விமர்சையாக வரும்.

    முதல் வருட பொங்கல் படியை தலைப் பொங்கல் படி என அழைப்பார்கள்.

    இந்த தலைப் பொங்கல் படியை கிராமங்களில் முந்தைய தலைமுறை காலத்தில் மகேந்திரா வேனில் புதிய பித்தளை அல்லது செம்பு பானை, ஒரு கட்டு கரும்பு, மஞ்சள் குலை, 25 கிலோ அரிசி, புதுத்துணி, எல்லா வகை காய்கறிகளிலும் ஒரு கிலோ, பனங்கிழங்கு, இனிப்பு சகிதம் பெண்ணைக் கட்டிக் கொடுத்த பெற்றோர்கள் உறவினர்கள் சூழ தங்கள் மருமகன் வீட்டிற்கு தலைப்பொங்கல் படியைக் கொண்டு செல்வார்கள்.

    இரண்டாம் வருட பொங்கல் படியை அம்பாசிடர் காரில் உறவினர்கள் இல்லாமல் பெற்றோர்கள் மட்டும் அரைக்கட்டு கரும்பு, பத்து கிலோ அரிசி, வெல்லம், பயறு என முந்தைய வருடத்தை விட குறைவான பொருட்களை பொங்கப்படியாக பெண் வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

    மூன்றாம் வருட பொங்கல் படியை பெண்ணின் பெற்றோர்களில் யாராவது ஒருவர் அல்லது அண்ணன் தம்பியில் ஒருவர் ஆட்டோவில் அல்லது பைக்கில் 5 கிலோ அரிசி, மூன்றாக வெட்டிய முழுக்கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ பயறு, ஒரு கிலோ வெல்லம் என்ற அளவில் பொங்கப் படியை கொண்டு செல்வார்கள்.

    மூன்று வருடங்கள் தாண்டிய பின் பொங்கலிட தேவையான அளவு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.

    பெற்றோர் காலத்துக்கு பின்னர் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்களின் இறுதி காலம் வரை கொடுப்பார்கள்.

    சில வீடுகளில் பையனைப் பெற்ற அம்மாக்காரி தலைப் பொங்கலுக்கு இன்னென்ன பொருட்கள் வேண்டும் என்று மருமகளிடம் லிஸ்ட் கொடுத்து விடுவார்.

    இதில் ஏதாவது குறைவாக பொங்கல் படியாக வந்தால் பொங்கப் படிக் கொடுக்கக் கூட வக்கத்த வூட்டுல போய் பொண்ணை கட்டிட்டு வந்துட்டான் பொசக்கெட்டப் பய என மகனை திட்டுவது மாதிரி மருமகள் வீட்டை ஜாடையாக மாமியார் சொல்வதுண்டு.

    மாமியார் இந்த டைப் என்றால் சில மணம் முடித்த பெண்கள் வேறு ரகமாக இருப்பார்கள்.

    தன் கணவனின் தம்பி அதாவது தனது கொழுந்தன் மனைவியை விட தனக்கு பொங்கல் படி அதிகமாக வந்திருக்கின்றது என்று புகுந்த வீட்டில் தனது பிறந்த வீட்டுப் பெருமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக பொங்கப்படி பட்டியலை தானே பட்டியல் போட்டு தகப்பனார் வீட்டிற்கு அனுப்பி விடுவாள்.

    தான் அனுப்பிய பட்டியல் பொருட்களை குறைவாக வாங்கி கொண்டு வந்து விடுவார்களோ!! தனது ஓரகத்தியிடம் தனது வீட்டு பொங்கப்படி பவுசை காட்ட முடியாதோ!! என எண்ணி போனை டயல் செய்து தனது அம்மாவிடம்...

    யம்மோவ்!! நான் அனுப்பிவிட்ட பொருள்களில் ஒரு பொருளாவது குறைவா வந்துச்சுன்னா என்னோட மாமியார் குத்தல் குத்தலா நம்ம வீட்ட பத்தி குறைச்சு பேசுவாவ!!...

    என எதையும் பேசாத நல்ல மாமியாரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நல்ல மாமியாரை பொல்லாத மாமியாராக தனது தாய் வீட்டில் சொல்லும் மகள்களும் உண்டு.

    தன்னுடைய அம்மாவின் மீது வீண் பழியை சுமத்தி மனைவி அவளுடைய தாய் வீட்டில் இப்படி பட்டியல் போட்டு பொங்கப் படி வாங்குவதை கணவன் அறிந்து மனைவியிடம்...

    என் மீதும் என்னுடைய அம்மா மீதும் வீணாக பழி சுமத்தி இப்படி அதிகமாக பொங்கப்படி வாங்குகிறாயே!!

    உங்களது வீட்டில் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என மனைவியிடம் கேட்டால்...

    ந்நேருங்க! உங்க வேலைய பாத்துட்டு இருங்க!! உங்களுக்கு ஒன்னும் தெரியாது !!! இப்படிக் கேட்டாத்தான் பொங்கப்படி எங்க வீட்டுல இருந்து வரும் எனக் கணவன் வாயை அடைத்து விடும் பெண்களும் உண்டு.

    எல்லோர் வீட்டுக்கும் பொங்க படி வந்து விட்டதே!! அப்பா கொண்டு வருவார்களா!!! மாட்டார்களா!! என ஏக்கத்தோடு வாசலையும் தெருவையும் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் தனது வீட்டில் இருந்து வரும் பொங்கப்படியை கொண்டு வரும் தாய், தந்தையைப் பார்த்ததும் அவர்கள் மனதில் ஏற்படும் சந்தோஷ உணர்வுகளை அவர்களால் மட்டுமே விவரிக்க முடியும்.

    புகுந்த வீட்டில் எல்லா வசதிகளும் இருந்து, மாமனார் வீட்டில் இருந்து பொங்கல் படி வருவதைப் பற்றி எதிர்பார்க்காத மருமகன் கணவனாக கிடைத்தும்..

    இந்தா மக்களேய்!!! பொங்கப்படியா இதை வைச்சிக்க எனச் சொல்லி திருமணம் முடித்து பதினைந்து ஆண்டு கழிந்த பின்பும் அஞ்சு கிலோ அரிசிப் பையோடு ஐநூறு ரூபாயை கையில் திணித்துச் செல்லும் தனது தந்தை சென்ற பின்...

    நமக்குப் பின் திருமணம் முடித்த உங்களது தங்கைக்கு உங்களது வீட்டில் இருந்து நீங்க பொங்கப் படி கொண்டு போகவில்லை.

    எங்க அப்பாவ பாத்தியாளா!! மொவளை மறக்காம பொங்கப் படி தந்துட்டு போறாவ!! என கர்வத்தோடு கணவனோடு சொல்லும் பொழுது அந்தப் பெண்ணிடம் தெரிவது நிச்சயமாக பிறந்த வீட்டு பெருமையை பேசும் குணம் அல்ல!! மாறாக தன் மீது தன் தகப்பன் வைத்திருக்கும் பாசத்தை பெருமையோடு சொல்வது ஆகும்.

    பொங்கப்படி என்பது சின்ன வெங்கல பானையும், பச்சரிசியும், கரும்பு துண்டுகளையும் சேர்த்து ஏதோ ஆயிரம் ரூபாய் மதிப்பான பொருட்கள் தானே!! இதற்காகவா இத்தனை பில்டப் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும்.

    அதை கொண்டு வரும் அப்பா, அண்ணணின் பாசத்தை மகளால், தங்கையால் மட்டுமே உணர முடியும்.

    பொங்கப்படி அது உறவுகளை இணைக்கும் உறவுப்படி...

    முன்பெல்லாம் சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடை அணிந்து வீட்டு முற்றத்தில் விறகு அடுப்பில் தென்னம் பாளை, பனை ஓலையைப் பயன்படுத்தி சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படைத்து கடவுளை வணங்குவார்கள்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்கும் நாங்கள் விறகு அடுப்புக்கு எங்கே போவது!!! மார்பிள், கிரானைட் போட்ட தளத்தில் விறகு அடுப்பை பயன்படுத்த முடியுமா என எதிர் கேள்வி கேட்டு...

    இரவு நேர உடையை அணிந்து கொண்டு சமையலறை கேஸ் அடுப்பில் சின்ன எவர் சில்வர் பானையில் வேக வைத்த பச்சரிசி வெந்ததும் சிறு கிண்ணத்தில் எடுத்து ஹேப்பி பொங்கல் என்று கணவனுக்கு மனைவி கொடுக்கும் அவசர வாழ்வியல் சூழலில் பெரும்பாலானோர் இருக்கின்றோம்.

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    நகரங்களில் இருக்கும் அத்தனை பேரும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தானே.

    எனவே பொங்கல் விடுமுறைக்கு அவரவர் சொந்தக் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய முறைப்படி தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுவோம்.

    பண்டிகைகளும் பாரம்பரியங்களும் இன்றளவும் கிராமங்களில் உயிர்ப்போடு தான் இருக்கின்றன!

    தொடர்புக்கு:

    isuresh669@gmail.com

    Next Story
    ×