search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சிந்தனையும் சிந்தித்தலும்
    X

    சிந்தனையும் சிந்தித்தலும்

    • “தாமாக ஏற்படுபவை அனைத்தும் சிந்தனைகள் (Thought) ஆகும். நாமாக சிந்திப்பவை அனைத்தும் சிந்தித்தல் Thinking ஆகும்...
    • “நீங்களாக சிந்திக்காமல் இருக்கும்பட்சத்தில், அலை அலையாக வந்த சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு விடும்.

    அவர் ஒரு வங்கியின் மேலாளர். அவரது பணிகளையெல்லாம் திறம்பட செய்து முடிக்கக்கூடியவர்.

    வங்கிகளின் மேலாளர்கள் அனைவருக்குமான ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

    அந்த மேலாளரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தலைமை அதிகாரி ஒருவர் தலைமை தாங்கி, உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    தலைமை அதிகாரி மிகவும் சீரியசாக உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், நமது வங்கி மேலாளரின் செல்போன் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

    அப்போது தான் அவருக்கு தனது செல்போனை சைலன்ஸில் போட மறந்து போனது தெரிய வந்தது.

    தலைமை அதிகாரி உட்பட அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது. அவர் பதறிப்போய் செல்போனை முழுவதுமாக அணைத்து வைத்து விட்டார்.

    ஆனாலும் கோபங்கொண்ட அந்தத் தலைமை அதிகாரி, "செல்போனை ஆப் செய்யாமல் எப்படி நீ கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்?" என்று கேட்டு அவருக்கு, தண்டனையாக பணி மாறுதல் உத்தரவு ஒன்றைப் போட்டுவிட்டார்.

    சக மேலாளர்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த அவமானமாகி விட்டது.

    "செல்போனை ஆஃப் செய்யாமல் இருந்தது ஒரு தவறு தான். இருந்தாலும் இந்த ஒரு அற்பமான தவறுக்காக எப்படி என்னை இப்படி ஓர் உத்தரவு போட்டு அவமானப்படுத்தலாம்? நான் எத்தனை ஊழியர்களுக்கு மேலதிகாரியாக இருக்கிறேன். அவர்களெல்லாம் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?"என்று பலவாறாக எண்ணி எண்ணி அந்த மேலாளர் நான்கு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்தார்.

    அந்நிலையில் தான் அவர் நம்மிடம் ஆலோசனைக்கு வந்தார். அவர் தனது பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

    "உங்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தும் உத்தரவு போடப்பட்டுவிட்டது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த நிலையில் அது சம்பந்தமான பல்வேறு சிந்தனைகளும் உங்களுக்கு ஏற்படுவது இயற்கையே...

    இந்த நிலையில் உங்கள் சிந்தனையின் இயக்கம் பற்றிய சில உண்மைகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிந்தனைகள் இரண்டு வகையானவை. உங்களை அறியாமல் உங்களுக்கு ஏற்படும் சிந்தனைகள் யாவும் முதலாவது வகையைச் சார்ந்தவை ஆகும். நீங்களாக சிந்திப்பது அனைத்தும் இரண்டாவது வகையைச் சார்ந்தவை ஆகும்...

    "தாமாக ஏற்படுபவை அனைத்தும் சிந்தனைகள் (Thought) ஆகும். நாமாக சிந்திப்பவை அனைத்தும் சிந்தித்தல் Thinking ஆகும்...

    "சிந்தனைகள் எவற்றுக்கும் நாம் பொறுப்பு கிடையாது. அவை தாமாகத் தோன்றி தாமாகவே மறைந்துவிடுகின்றன. அவை, அலை அலையாகத் தோன்றும் காரணத்தினால், அவை தொடர்ந்து இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகின்றன...

    "அவை அனைத்தும் இடி ஓசையைப் போன்றவையே. இடி மின்னல் பற்றி நமக்குத் தெரியும். இடி வேறு மின்னல் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்றுதான். மின்னல் ஏற்பட்டு மறைந்த சில விநாடிகள் கழித்தே இடியோசை நமக்கு கேட்கிறது. ஒளியின் வேகம் அதிகம். அதனால் அது வேகமாக நம்மை வந்து அடைகிறது. ஒலியின் வேகம் குறைவு. அதனால் அது நம்மை அடைவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

    உண்மையில் இடி என்பது மின்னலோடு முடிந்து மறைந்து விடுகிறது. இடியோசை கேட்கும்போது உண்மையில் இடி என்ற பெயரில் எதுவுமே அங்கு கிடையாது.

    சிந்தனைகள் அனைத்தும் இடியோசை போன்றவையே. அவை மறையும்போது தான் அவை வந்ததே நமக்குத் தெரிகின்றது...

    "அனைத்து சிந்தனைகளும் நம்மை அறியாமல் தான் நமக்குள் ஏற்படுகின்றன. Unconscious ஆக நமக்குள் ஏற்படுகின்றன. அவை அனைத்தும் மின்னலாகத் தோன்றி, மின்னலாகவே மறைகின்றன. அவை மறைந்திடும் நிலையில் தான் அவற்றை நாம் புரிந்து கொள்கிறோம்...

    அப்படி அவை மறைந்திடும் நிலையில், நாம் அவற்றின் மீது நாமாக ஏறி சவாரி செய்து விடுகிறோம்.

    இதனால் சிந்தனைகள் அனைத்தும் சிந்தித்தல் ஆக மாறிவிடுகிறது...

    "சிந்தனைகள் அனைத்தும் பலமற்றவை. ஆனால் சிந்தித்தல் என்பது அப்படியல்ல. அவை பலம் மிகுந்தவை. உங்களுக்கு நடந்துவிட்ட மோசமான சம்பவம் குறித்த சிந்தனைகள் வருவது இயற்கையே.

    அவை அப்படி தான் வரும். ஆனால் அப்படி வந்துவிட்ட சிந்தனைகள் மீது நீங்களாக ஏறி அமர்ந்து கொண்டு, "எப்படி இவ்வாறு உத்தரவு போடலாம்?" என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், பலமற்ற சிந்தனைகள் யாவும் பலமடைந்து விடும். இதனால் தேவையற்ற ஹார்மோன்கள் உங்களுக்குள் சுரந்து உங்களுடைய தூக்கத்தை யெல்லாம் கெடுத்து விடும்...

    "ஒரு வேளை நீங்கள் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பினால், நீங்கள் சிந்தித்து தான் ஆக வேண்டும். செயல்படுவதற்காக சிந்திக்கலாம். செயல்படுவதற்கு எதுவுமே இல்லாத நிலையில் சிந்தித்தல் மட்டுமே உங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாக ஆகிவிடும்...

    "சிந்தனைகள் அனைத்தும் உங்களையறியாமல் ஏற்பட்டவை. அவற்றை உங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் சிந்தித்தல் என்பது தாமாக ஏற்பட்டதல்ல. அது நீங்களாகக் கொண்டு வந்த ஒன்று. அதனால் அந்த சிந்தித்தலில் இருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்து விடலாம்...

    "நீங்களாக சிந்திக்காமல் இருக்கும்பட்சத்தில், அலை அலையாக வந்த சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு விடும். உங்களுக்கு அது சம்பந்தமாக எந்த வேலையுமே கிடையாது."

    இவ்வாறு அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    அவர் சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தனது பிரச்சனையில் இருந்து விடுபட்டார்.

    ஸ்ரீ பகவத்

    இதுபோல் ஒரு முறை கோவை சென்றிருந்தபோது ஓர் இளம்பெண் தனது பிரச்சனையைக் கூறி தீர்வு கேட்டாள்.

    இளைஞன் ஒருவன் அவளோடு நட்புடன் பழகியிருக்கிறான். இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்துள்ளனர்.

    ஆனால் அவனோ அவளை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்.

    அதிர்ச்சி அடைந்த அவள் மனம் உடைந்து போனாள். மன உளைச்சலில் இருந்து விடுபட்டு அவளால் வெளியே வர முடியவில்லை.

    அவளுக்கும் சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும்படிஎடுத்துக் கூறினோம்.

    "அம்மா உங்கள் நிலையில் யார் இருந்தாலும் மன வருத்தம் ஏற்படத்தான் செய்யும். அது சம்பந்தமான சிந்தனைகள் ஏற்படத்தான் செய்யும்...

    ஆனால், தாமாக ஏற்பட்ட அந்த சிந்தனைகளின் மீது நீங்களாக ஏறி உட்கார்ந்து சவாரி செய்து கொண்டு,

    'அவன் எப்படி இவ்வாறு ஏமாற்றலாம்? அவனை சும்மா விடக்கூடாது. அவனை ஏதாவது செய்ய வேண்டும் ' என்று நீங்களாகவே ஏதாவது சிந்திப்பது தான் உங்கள் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்குகின்றது...

    "நீங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகி இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே சட்டபூர்வமான உரிமைகள் எவையும் இல்லை. நீங்கள் இருவரும் எவரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்...

    உங்கள் இருவருக்கும் இடையே சட்டபூர்வமான உரிமைகள் எவையாவது இருந்திடும் பட்சத்தில், நீங்கள் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்...

    அப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது எடுத்திட நேர்ந்தால், அது சம்பந்தமாக நீங்கள் சிந்தித்து தான் ஆக வேண்டும். இங்கு அத்தகைய சூழ்நிலை எதுவும் இல்லை. அதனால் நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை...

    சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் சிந்தனைகளைத் தவிர்க்க முடியாது. உங்களை அறியாமல் அவை வந்து கொண்டே தான் இருக்கும்...

    அவற்றின் மீது ஏறி அவற்றை நீங்கள் சிந்தித்தல் ஆக மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும். தாமாக ஏற்பட்ட சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு மறைந்துவிடும்."

    நாம் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் திருப்தியான மனநிலையோடு அவள் விடைபெற்றுச் செல்லவில்லை.

    மறுநாள் காலையில் அவள் நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அவளுக்கு இன்னும் கொஞ்சம் ஆலோசனை தேவைப்படலாம் என்று தோன்றியது.

    "என்ன வேண்டும் அம்மா?" என்று கேட்கவும் அவள் பேசினாள்:

    "அய்யா எனது பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்று காலையில் எழுந்தது முதல் எனக்கு ஒரே பரவசமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது. பிரச்சனையில் எந்தத் தீர்வும் கிடைக்காமல் எனக்கு இந்த ஆனந்த உணர்வு மட்டும் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

    "நமக்கு ஏற்படும் சிந்தனைகளை சிந்தித்தல் ஆக மாற்றாத பட்சத்தில், நமது மன இறுக்கங்கள் தளர்வடைந்து ஒரு வித மனச்சமநிலை ஏற்படுவது அனைவருக்குமே சாத்தியம் தான்.

    ஆனால் இந்தப் பெண்ணைப் பொறுத்தவரையில், அவள் மிகவும் அதிகமான மன இறுக்கத்துடன் விட்டிருந்த காரணத்தினால், அவளுடைய மன இறுக்கங்கள் தற்போது தளர்ந்த நிலையானது, அவளுக்கு ஒருவித பரவச நிலையையே ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

    தொடர்புக்கு,

    sribagavathji@gmail.com

    Next Story
    ×