என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
நோபல் பரிசுப் பெற்ற முதல் இந்தியர் தாகூர்!
- தாகூர் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
- தாகூர் இயற்றிய ஜன கண மன அதி நாயக ஜயஹே என்ற பாடல் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலில் பெற்ற இந்தியரும் பெரும் கவிஞரும் சிந்தனையாளரும், கல்வியாளருமான ரவீந்திரநாத் தாகூரைத் தெரியாத இந்தியக் குடிமகன் இருக்க முடியாது!
தேசிய விழா ஒவ்வொன்றிலும் ஜனகண மன அதி நாயக ஜெயஹே என்ற தேசிய கீதத்தைப் பாடும் ஒவ்வொருவரும் மறக்க முடியாத பெயர் ரவீந்திரநாத் தாகூர்!
பிறப்பும் இளமையும்: 1861ம் ஆண்டு மே மாதம் 7ம் நாளன்று கல்கத்தாவில் தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதா தேவியாருக்கும் மகனாகப் பிறந்தார் ரவீந்திரநாத் தாகூர். இளமையிலேயே தாயார் மறைந்ததால் பணியாளர்களே அவரை வளர்த்து வந்தனர். வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து அவருக்குக் கல்வியைக் கற்பித்தனர். அடிக்கடி தந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாகூர் நன்கு உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டார்.
வானியல், சம்ஸ்கிருதம், அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார்.
இயல்பாகவே கவிதையில் நாட்டம் இருந்ததால் தனது எட்டாம் வயதிலேயே கவிதை இயற்றவும் ஆரம்பித்தார். பானுசிங்கோ என்ற புனைபெயரில் அவர் அவற்றை வெளியிட்டார்.
திருமணம்: 1883ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி, மிருணாளினி தேவியாரை அவர் மணந்தார். ஐந்து குழந்தைகள் பிறக்க அவற்றில் இரு பிள்ளைகள் இறந்து விட்டன.
வழக்கறிஞராக விரும்பி லண்டனில் கல்லூரியில் சேர்ந்த அவர் அதில் நாட்டமின்றி வங்கத்திற்கே திரும்பி வந்து தனது படைப்புகளைப் படைக்கத் தொடங்கினார்.
சாந்திநிகேதன்: கல்கத்தாவிற்கு வடக்கே 153 கிலோமீட்டர் தொலைவில் போல்பூர் அருகே ரவீந்திரநாதரின் தந்தையார் தேவேந்திரநாத் தாகூர் 20 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதில் ஒரு விருந்தினர் மாளிகையை அமைத்து அதற்கு சாந்தி நிகேதன் என்ற பெயரைச் சூட்டினார். ரவீந்திரநாத் தாகூர் 1901-ம் ஆண்டு அங்கு சென்று அந்த இடத்தில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அது பாரம்பரிய முறையிலான புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விஸ்வ பாரதி என்ற பெயரில் பின்னர் பல்கலைக்கழகமாக பின்னர் ஆனது.
சுதந்திரப் போராட்ட வீரர்: 1905ம் ஆண்டு கர்ஸான் பிரபு வங்கத்தைப் பிரிக்க முடிவு செய்ய அது இந்தியாவையே கொந்தளிக்க வைத்தது. தாகூரும் அதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1915ம் ஆண்டு இவருக்கு ஆங்கில அரசு சர் பட்டத்தைத் தந்து கௌரவித்தது. ஆனால் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையில் பலநூறு பேர் கொலையுண்டதால் தான் பெற்ற சர் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார் அவர்.
தாகூரும் கீதாஞ்சலியும்: தாகூர் இயல்பாகவே ஒரு கவிஞராகத் திகழ்ந்தார். வங்காள மொழியில் அவர் இயற்றிய 157 பாடல்கள் கொண்ட கீதாஞ்சலி என்ற அவரது கவிதைத் தொகுப்பு 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1912ம் ஆண்டு இந்தியன் சொஸைடி ஆஃப் லண்டன் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
கீதாஞ்சலியிலிருந்து 53 பாடல்களையும் இதர நூல்களிலிருந்து 50 பாடல்களையும் தொகுத்து மொத்தம் 103 பாடல்களை இந்த நூல் கொண்டிருந்தது. 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த நூலுக்கு அளிக்கப்பட்டது. இந்தியர் ஒருவர் இலக்கிய நோபல் பரிசு பெற்றது இதுவே முதல் தடவை என்ற பெருமை தாகூருக்குக் கிடைத்தது.
உலகெலாம் பரவிப் புகழ் பெற்ற ஒரு பாடல் அனைவருக்கும் விழிப்புணர்ச்சியை ஊட்டியது.
பிரிட்டிஷாருக்கு அடிமைப் பட்டிருந்த காலத்தில் எழுந்த இந்தப் பாடல் புத்துணர்ச்சியை இந்திய மக்களுக்குத் தந்தது.
கீதாஞ்சலியில் 35வது பாடலாக அமைந்த அந்தப் பாடல் இதோ;
"எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ
எங்கே தலை தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கே உலகமானது குறுகிய உள்விவகாரச் சுவர்களால் துண்டுகளாகச் சிதறாமல் இருக்கிறதோ
சத்தியத்தின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ
களைப்புறாத முயற்சி, தனது கரங்களை பரிபூரணத்தை நோக்கி எங்கே விரிக்கிறதோ
எங்கே பகுத்தறிவின் தெளிந்த நீரோடை தனது வழியை இறந்தொழிந்த மந்தமான பாலைவன மணலில் தொலைக்காமல் இருக்கிறதோ எப்போதும் விரியும் சிந்தனை, செயலுடன் உன்னை மனம் எங்கே வழி நடத்துகிறதோ விடுதலையின் அந்தச் சொர்க்கத்துக்குள், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்."
நோபல் பரிசுக்காகக் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் விஸ்வ பாரதி என்ற பல்கலைக்கழகத்தை சாந்திநிகேதனில் நிறுவினார்.
தாகூரும் கவிஞர் ஈட்ஸும்: புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் தாகூரின் கவிதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது கவிதையை ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்த்த தாகூர் அவரிடம் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்குமாறு கூறினார். ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சுட்டிக்காட்டிய ஈட்ஸ், இதை மாற்ற வேண்டுமோ என்று கேட்டார். பின்னர் மீண்டும் கவிதையைப் படிக்க அந்த வார்த்தையே மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டு வியந்து தாகூரைப் பெரிதும் பாராட்டினார். அதற்கு முன்னுரையையும் வழங்கினார்.
தாகூரும் ஓவியமும்: தாகூர் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரது பல ஓவியங்கள் ஐரோப்பாவில் கண்காட்சியில் வைக்கப்பட்டன. ஆனால் உண்மையில் அவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்கள் தெரியாத பார்வைக் குறைவு இருந்தது பலருக்கும் தெரியாது. இந்தக் குறையையும் மீறி அவரது படைப்புகள் பாராட்டைப் பெற்றன.
தாகூரும் விவேகானந்தரும்: விவேகானந்தர் இளமைப் பருவத்தில் நரேந்திரனாக இருந்த சமயம் தாகூர் அவருக்கு தான் இயற்றிய பாடலுக்கு மெட்டமைத்து அதை அவருக்குக் கற்பித்தார். அவரது பாடல்கள் பலவற்றை விவேகானந்தர் பாடியுள்ளார்.
தாகூரும் காந்திஜியும்: ஒரு முறை சாந்தி நிகேதனுக்கு மகாத்மா காந்திஜி விஜயம் செய்தார். ரவீந்திரநாத் தாகூருடன் நெடு நேரம் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார் காந்திஜி. பின்னர் ஓய்வெடுக்கத் திரும்பினார். அப்போது சாந்தி நிகேதனில் தங்கி இருப்போரில் சிலர் காந்திஜியிடம் வந்தனர்.
அவர்கள் மகாத்மாவை நோக்கி, "உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறோம்" என்றனர். "என்ன விஷயம்?" என்று கேட்டார் மகாத்மா.
"தாகூர் ஓய்வே எடுக்க மாட்டேன் என்கிறார். கடுமையாகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார். சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். ஆகவே தான் உங்களிடம் வந்தோம். மதிய உணவுக்குப் பிறகு உடனே வேலை பார்க்கச் சென்று விடுகிறார். நீங்கள் அவரிடம் மதியம் சிறிது நேரமாவது ஓய்வெடுப்பது அவசியம் என்று சொல்லுங்கள்" என்றனர் அவர்கள்.
"என்னிடம் ஏன் இதைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் மகாத்மா.
"நீங்கள் சொன்னால் அவர் தட்ட மாட்டார். அதனால் தான் உங்களிடம் வந்தோம்" என்றார்கள் அவர்கள் அனைவரும்.
மகாத்மா சிறிது நேரம் கழித்து தாகூரின் அறைக்கு வந்தார். அவரை ஆச்சரியத்துடன் பார்த்த தாகூர், "என்ன ஓய்வெடுக்கவில்லையா?" என்று கேட்டார்.
"ஓ! அதை சொல்லத்தான் வந்தேன். மதியம் உணவுக்குப் பின் நீங்களும் சற்று ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்படுகிறென்" என்றார் மகாத்மா."
"அதை எப்படி என்னால் செய்ய முடியும்? உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனக்கு பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பகல் நேரத்தில் ஒரு நாளும் ஓய்வெடுக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இதுவரை அதைக் காப்பாற்றி வந்துள்ளேன். இன்னும் எத்தனை வருடம் நான் இருக்கப்போகிறேன்? அந்த உறுதிமொழியை நானே ஏன் மீற வேண்டும், சொல்லுங்கள்" என்றார் தாகூர். அவரது பதிலால் மகாத்மா மிகவும் நெகிழ்ந்து விட்டார்.
தேசீய கீதம்: தாகூர் இயற்றிய ஜன கண மன அதி நாயக ஜயஹே என்ற பாடல் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல அமர் சோனார் பங்களா என்ற அவரது கீதத்தை வங்காள தேசம் தனது நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. இலங்கையின் தேசிய கீதம் அமையவும் அவர் உத்வேகம் அளித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தாகூரும் ஐன்ஸ்டீனும்: 1930ம் ஆண்டு தாகூர் உலகின் பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை அவரது இல்லத்தில் சந்தித்தார். விதி, மதி பற்றிய அவருடனான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்ற உரையாடலாகத் திகழ்ந்தது உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இது பல்லாயிரக்கணக்கானோரால் இன்றும் படிக்கப்படுகிறது. இதையடுத்து ஐன்ஸ்டீன் தாகூரை அவர் இல்லத்தில் மீண்டும் சந்தித்தார்.
தாகூரும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும்: பிரபல கணித மேதையான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒரு பகுத்தறிவுவாதி. அவருடன் தாகூர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். தாகூரின் பேச்சுத் திறமையையும் ஒருவரை அவர் எளிதில் தன் கருத்துக்கு இசைய வைப்பதையும் ரஸ்ஸல் நன்கு அறிவார். ஒரு சமயம் இருவரும் கேம்பிரிட்ஜில் பேசியவாறே நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில் கிங்ஸ் காலேஜ் அருகில் தேவாலயம் ஒன்று இருந்தது. அங்கு மாணவர்கள் அற்புதமான ஒரு கூட்டு பிரார்த்தனையை இசைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த தாகூர் ரஸ்ஸலிடம், 'அங்கே போகலாமே; உள்ளே போய் கேட்போமே" என்றார்.
"அது தான் நடக்காது! இந்த இசையும் ஊதுபத்தி மணமும் ஜன்னல் வழியே வரும் வண்ணமயமான ஒளிக்கதிர்களும் என் மீது செல்வாக்கு செலுத்தி என் பகுத்தறிவு எதைச் சந்தேகிக்கிறதோ அதை விட்டுவிட ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்' என்றார் நாத்திகவாதியான ரஸ்ஸல்! தாகூர் விழுந்து விழுந்து சிரித்தார். எங்கே தான் அவரை மாற்றி விடுவோமா என்ற ரஸ்ஸலின் பயத்தை அவரால் உணர முடிந்தது.
மறைவு: உடல் நலக்குறைவு காரணமாக தாகூர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாளன்று காலமானார்.
அருங்காட்சியகம்: தாகூரின் நினைவைப் போற்றும் வகையில் கல்கத்தாவில் தாகூர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
அவரது பொன்மொழிகள்: உங்கள் வாழ்விலிருந்து சூரிய ஒளி அகன்று விட்டதென்று நீங்கள் அழ ஆரம்பித்தால், உங்களது கண்ணீர்த் துளிகள் உங்களை நட்சத்திரங்களைப் பார்க்க விடாது தடுக்கும்.
நான் தூங்கி கனவு கண்டு, வாழ்க்கை சந்தோஷமான ஒன்று என்றே நினைத்தேன். ஆனால் தூங்கி எழுந்த பின்னர் வாழ்க்கையே சேவை தான் என்பதைப் பார்த்தேன். அதன்படி நடந்தேன். சேவையே தான் சந்தோஷம்.