search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உறவுகள் கொண்டாடி மகிழும் காணும் பொங்கல்
    X

    உறவுகள் கொண்டாடி மகிழும் காணும் பொங்கல்

    • கலைகள் எல்லாமே ஒரு சமூகத்தின் பண்பாட்டை குறிப்பதாகவே இருந்திருக்கின்றன.
    • காணும் பொங்கலன்று உற்ற உறவுகளை போற்றி மகிழ்கிறோம். அவர்களை கண்டு அன்பை பகிர்ந்துகொள்கிறோம்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நாம் களிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தோம். தமிழர்களின் பாரம்பரியமான

    போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் திருநாளை காலங்காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். இன்று உறவுகளை கொண்டாடி மகிழும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் பெருமையும் மேன்மையும் அது கொண்டிருக்கும் நீண்ட நெடிய பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் அது போற்றும் கலைகளை வைத்தே அளவீடு செய்யப்படுகிறது. வெறும் பொருளாதார கூறுகளை வைத்து மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அதனை மீறியும் அந்நாடு கொண்டிருக்கும் நம்பிக்கைகள், கொண்டாடும் விழுமியங்கள், அதன் தொலைநோக்கு பார்வை, இலக்குகள் போன்றவை மறைமுக ஆனால் சக்திவாய்ந்த காரணிகளாக திகழ்கின்றன. இவை எல்லாமே அந்நாடு பின்பற்றும் பண்பாட்டு நெறியை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் அதன் உயரம் அளக்கப்படுவதும் இதை வைத்து தான்.

    அத்தகைய கலைகள் மற்றும் பண்பாடு பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதனாலேயே கலை மற்றும் பண்பாட்டை போற்றி காக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் மாநில, தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் நிறுவப்பட்டிருக்கிறது.

    ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினம். அன்றைய தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நாம் இளைஞர் தினமாக கடைபிடிக்கிறோம். அதனை முன்னிட்டு மத்திய இளைஞர் விவகாரங்கள் துறை சார்பாக பிரம்மாண்டமான ஒரு நிகழ்வு புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

    நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3000 இளைஞர்களிடையே பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கும் ஆளுமைகள் கலந்துரையாடினார்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி எடுக்க வேண்டிய மிக முக்கியமான முன்னெடுப்புகள் குறித்து அவர்கள் பேசினார்கள்.

    அவற்றுள் பிரபல மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா பேசிய "பணி நேரம்" தொடர்பான சில கருத்துக்கள் ஊடகங்களில் விவாத பொருளாக வலம் வருகின்றன. அதற்கு அப்பாற்பட்டு அவர் கூறிய சில கருத்துகள் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியவை.

    நம் கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதல் தான் ஒருவருக்கு ஆழமான, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது என்று அவர் கூறினார். அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முழுமையான சிந்தனை தேவைப்படுகிறது. சிந்தனை எப்போது முழுமை அடைகிறது? அறிவை தெளிவாக்கி, சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்வது எது? பல்வேறு தரப்பட்ட ஆதாரங்களை திரட்டியும், உலக நடையை உணர்ந்தும், தன் சுற்றத்தை கூர்ந்து கவனித்தும், அன்றாடம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் ஒருவரால் சிந்திக்க முடிகிறது என்றால் அதுவே முழுமையான சிந்தனை. இப்படி நம்மை சிந்திக்கப் வைப்பதற்கு தான் நம் கலைகளும் பண்பாடும் தேவையான உந்துதலை தருகின்றன. அப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்களால் தான் முன்னேற்றத்தை நோக்கி தானும் பயணித்து, நாட்டையும் அவ்வழியே செலுத்த முடியும்.

    இதற்கு எடுத்துக்காட்டாக அவர் சார்ந்த வாகன உற்பத்தி துறையையே மேற்கோள் காட்டுகிறார்.

    ஒரு வாடிக்கையாளர் எத்தகைய வாகனத்தில் பயணம் செய்ய விரும்புகிறார், என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கிறார் என்பதை அறிய வேண்டுமானால் வெளி உலகத்திலிருந்து தரவுகளை சேகரிக்க முழுமையாய் தயாராக வேண்டும். தன் குடும்பத்துடனோ, பிற குடும்பங்களுடனோ பழகி புரிந்து கொள்ளாமல், இவற்றையெல்லாம் அலுவலகத்திலேயே இருந்து கொண்டு எப்படி கற்று கொள்ள முடியும்?

    நம் பாரம்பரியத்தின் சிறப்புகள், அது சொல்லும் நெறிகள் இவற்றையெல்லாம் நாம் அறிய முற்பட்டால் மட்டுமே நம்மால் நம் சமூகத்தை அறிந்து கொள்ள முடியும்.

    போற்றுதலுக்குரிய நம் பண்டைய வரலாற்றை மறந்துவிட்டு வளர்ச்சியடைந்த இந்தியா - 2047 என்ற கனவை எப்படி நிஜமாக்க போகிறோம்?

    கலைகள் எல்லாமே ஒரு சமூகத்தின் பண்பாட்டை குறிப்பதாகவே இருந்திருக்கின்றன. குகைகளில் வரையப்பெற்ற ஓவியங்களும், பாறைகளிலும் கோவில்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கட்டிடகலைகளின் பிரமாண்டங்களும் ஒரு படைப்பாளியின் பார்வையில் பார்வையாளர்களை பார்க்கச் செய்கிறது. சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே இலக்கியத்தை சொல்வதுண்டு. கலைகளும் அவ்வாறானவையே. கலை மற்றும் பண்பாடுகளே நம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக விளங்குகிறது.

    இது போன்று கலைகளை பற்றி அறிந்து கொள்ளும்போது நாம் நம் மண்ணை தெரிந்து கொள்கிறோம். நம் முன்னோர்கள் போற்றிய நெறிகளை புரிந்து கொள்கிறோம். அவற்றின் பெருமைகளை உணர்ந்து கொள்கிறோம்.

    இவ்வாறு நம்மை நாமே தெரிந்து கொள்ளும்போது தான் சமூகத்தில் பரஸ்பர புரிதல் ஏற்படுகிறது, ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றவும், தொடர்பு கொள்ளவும் வழிகளை ஏற்படுத்துகிறது. தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் ஆரோக்கியமான உறவுகளை இதுவே நிர்ணயிக்கின்றது.

    மனித வாழ்வின் விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் கருத்தியலை அவர்கள் போற்றி வளர்க்கும் கலைகளே உலகிற்கு உரக்கச் சொல்லி விடுகின்றன. பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படும் கலைகள் ஒரு சமூகம் கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட தடைகள் அதனை மக்கள் ஏற்றுக்கொண்ட, எதிர்த்த முறைகள் என்பன போன்ற பல்வேறு தகவல்களை ஒரு கண்ணாடியை போல் காட்டுகிறது.

    இசை, நடனம், கிராமிய கலைகள், ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, இலக்கியம், பண்டிகைகள், கலாச்சாரங்கள் என்று வெவ்வேறு வடிவங்களில் கலைகள் காலத்தின் ஓட்டத்தை பதியவைத்துக் கொண்டே தான் செல்கிறது. தமிழர்களின் பன்னெடுங்கால பண்பாட்டு அடையாளமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. அதனை கோலாகலமாக கொண்டாடி வரும் இவ்வேளையில் தமிழினத்தின் நன்றிமறவாத நன்னெறியை போற்றி மகிழ்வோம்.

    மாற்றத்தை வரவேற்கும் ஒரு மேம்பட்ட சமூகம் என்பதை காட்டுவதே போகி பண்டிகை. ஒரு முற்போக்கான சமூகம் புதிய மாற்றங்களை வரவேற்க தயாராவது போல. நம்மில் படிந்த அல்லவைகளை களைந்து, புதுமையை வரவேற்க கொண்டாடப்படுவது போகி.

    தைப்பொங்கல் இயற்கையை நன்றியோடு நினைவு கூறவே. விவசாயத்தை போற்றி வாழ்ந்த நாம் அதற்கு காரணமான சூரியனையும், உதவிய கால்நடைகளையும் கொண்டாட ஏற்றுக்கொண்ட நாள் தான் இது.

    மாட்டு பொங்கலன்று மாடுகளை கௌரவப்படுத்தும் ஒரு உன்னதமான பாரம்பரியத்தை நாம் கொண்டிருக்கிறோம். "பிற உயிர்களிடத்தில் அன்பும் கருணையும்" என்று எல்லா மதங்களும் போற்றும் மிக உயர்ந்த நெறியை மாடுகளை அழகுப்படுத்தி, கொண்டாடும் இந்த நாளிலே நிரம்பச் செய்திருக்கின்றோம்.

    காணும் பொங்கலன்று உற்ற உறவுகளை போற்றி மகிழ்கிறோம். அவர்களை கண்டு அன்பை பகிர்ந்துகொள்கிறோம். தான் என்ற சுயநலத்தோடு மட்டுமல்லாமல் தன்னை சார்ந்த உறவுகளையும் உடன் இணைத்து கைகோர்கிறோம். இந்திய மண்ணின் பண்டைய நாகரீகமானாலும் சரி, கிரேக்க ரோமானிய நாகரீகங்கள் என்றாலும் சரி குழுவாய் ஒன்று கூடி வாழ்ந்த கூட்டமே தழைத்திருக்கின்றன. விவசாயம், ஆட்சி அதிகாரம், வணிகம், வளர்ச்சி என்றெல்லாம் வரும்போது ஒன்று கூடியே அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சொல்வதே இந்த காணும் பொங்கல் எனும் நன்னாள்.

    தீபிகா சதீஷ்

    இப்படியாக நாம் தொன்றுதொட்டு கொண்டாடிவரும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் அறநெறியையும், வீரத்தையும், நன்றிமறவா பண்பையும் எடுத்து கூறுகிறது. இன்றைய உலகின் புவியியல் சார்ந்த சவால்களுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலே தீர்வாக பரிந்துரைக்கப்படும்போது, தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடி இயற்கையை கொண்டாடவே ஒரு திருநாளை கொண்டிருக்கிறது என்றால் அது எத்தனை பெருமை வாய்ந்தது. புதுமைகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் எவ்வாறு போற்றப்படுகின்றனவோ அதை போலவே நம் மரபுகளையும் பண்பாட்டையும் போற்றுவது நம் தலையாய கடமை. நம் முன்னோர்கள் பெருமை கொண்ட நம் பண்பாட்டை இதுவரையிலும் கடத்திச் சென்றிருப்பது போல வரும் இளம் தலைமுறையும் போற்றும் வகையில் அதன் சிறப்புகளை எடுத்துக் கூறுவோம்.

    Next Story
    ×