என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
வரலாறு பேசும் காதல் கதை - என் மன வானில்...
- நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும்.
- தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது.
வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும், ஒரு நல்ல குறிக்கோளுடன், ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கவும் முயல்வதே நிலையான நிம்மதிக்கான வழி.
இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்ந்த ஆதிமனிதன், வீடு, வாசல், சொத்து, பணம், காசு என எதுவுமின்றி கவலையில்லாமல் வாழ்ந்தான். கூட்டுக் குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் சோதனைகளை நேருக்குநேர் எதிர்கொண்டவர்கள்.
இயற்கையை பஞ்ச பூதங்களென பகுத்துவைத்து தங்கள் ஐம்புலன்களின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து சாதனை புரிய கற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள்!
ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை என்றெல்லாம் சிந்தித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்.
வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உணர்ச்சி, அறிவு என்னும் இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை. இது எல்லாக் காலத்தும் பொருந்தும்.
சங்க காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை மனிதர்களின் மனம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் மன நிலையிலும் பல்வேறு வேறுபாடுகளும், மாற்றங்களும் நிரந்தரம் என்பதும் உண்மை.
முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதான் என்பதற்கான ஆதாரங்களாக வரலாற்று சம்பவங்களும் இருக்கின்றன.
நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும். இந்த நல்லிணக்கம் என்பது இனம் சார்ந்து, உறவு சார்ந்து, நாடு சார்ந்து மட்டுமே வருவதில்லை. இவை அனைத்தையும் கடந்து காதல் என்ற ஒன்று தலைகாட்ட ஆரம்பிக்கும்போது அது எத்தகையத் தடைகளையும் உடைத்துக்கொண்டு நல்லிணக்கத்தையும், தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்கும் உத்தரவாதமாகிவிடுகிறது. இயற்கையே இதற்கு முற்றிலுமாக துணையாக நிற்கின்றது.
அத்தகைய சக்தி வாய்ந்த காதல் ஒரு நாட்டையே உருவாக்குவதோடு, இந்த உலகிற்கே ஒரு முன்னுதாரணமாகி விடுவதும் கண்கூடு. இது இன்று நேற்று அல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இந்த புதினமே ஆதாரம்.
வரலாறு பேசும் இந்த காதல் கதை உலகில் பலரும் ஆவலுடன் அலசி ஆராயும் ஒரு ஆவணமாகிக் கொண்டிருக்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 48-ல், ஒரு 16 வயது இளம்பெண், அகண்ட தமிழகத்திலிருந்து தம் காதலனைத் தேடி கடல் கடந்து வெகு தொலைவு, கயா எனும் கொரிய நாட்டிற்குச் சென்றாள். 157 வயது வரை வாழ்ந்து அந்த நாட்டையே பொருளாதாரத்தில் மிக உயர்வான நிலைக்கு இட்டுச் சென்றதோடு தாம் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய நன்றியை அதிகமாகவேச் செலுத்தியுள்ளார் செம்பவளம் என்ற அந்தப் பெண்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றை திரை போட்டு மறைக்கவோ அல்லது முற்றிலும் அழிக்கவோ முடியாது. அதற்கான ஆதாரம்தான் இன்று புற்றீசல் போல கிளம்பியிருக்கும் இந்த வரலாற்று ஆதாரங்கள். இந்த வரலாறு சார்ந்து ஏற்கனவே ஒரு சில நூல்கள் எழுதியுள்ள நிலையில் இதையே ஒரு புதினம் வடிவில் எழுதி மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
ஆரம்ப கால கடல் வணிகத்திற்கு முக்கியம் வாய்ந்த, சுவையான திருப்பங்கள் நிறைந்த இந்த வரலாற்று புதினம் உறுதியாக அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் காதலுக்காக
கதாநாயகிகளும் கதாநாயகர்களும்
தலைவர்களும் தலைவிகளும்!
உன் தலை சாய்ந்திருந்ததோ
இயற்கையின் மடியில்,
விழித்தெழு நாட்டை ஆள்வதற்கான
இனிமையான ஈர்ப்புச் சக்தியோடு..
சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே தங்கி விவசாயம் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நதிக்கரைகளில் தங்கிவிட்டன. அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்கு தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினார்கள்.
கற்காலத்தின் முடிவில் மனித நாகரிகம் அடுத்தக் கட்டமாக உலோகக் கால நாகரிகத்தில் (Iron Age Civilization) அடியெடுத்து வைத்த ஆதி மனிதர்கள் நாகரிக மனிதர்களாக பிரகாசமடைகிறார்கள்.
கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் கற்களால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் பின் நேரடியாக இரும்புக் காலத்திற்கு வந்தவர்கள் அகண்ட தமிழகத்தின் நாயகர்கள். ஆனால் உலகின் ஏனைய மக்கள் பொற்காலம், செம்புக்காலம் என்று கடந்தபின்னரே இரும்புக்கால நாகரிகத்தில் நுழைந்ததையும் வரலாறு விளக்குகின்றது. இதையே, கி.மு. 10,000- – கி.மு. 4,000 வரையான புதிய கற்காலம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் அகண்ட தமிழகத்தின் வாழ்வியலில் இரும்பு என்ற ஒரு உலோகம் அறிமுகமாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திய ஒரு காலம் என்றால் அது கி.மு. 500 என்ற அளவில் இருக்கலாம் என்பதை நம் தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. சங்க இலக்கியங்களின் உறுதுணை இதற்கு வளமான சான்றாகி நிற்கின்றன.
இரும்பைக் கண்டறிந்த ஆதி தமிழர்கள் அதனை வைத்து உலைக்களம் அமைத்து கருவிகளும், ஆயுதங்களும் செய்யும் கலையைக் கற்றனர். தொழில் வளம் பெருக ஆரம்பித்தவுடன் வெளி நாட்டவர்களின் கவனமும் பெற்றனர். அவற்றில் பண்டைய ரோம், எகிப்தியம் நாடுகள் கவர்ந்தி ழுக்கப்பட்டதன் முடிவாக இரும்பும், எக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் பெறுகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயருகிறது. பண்டமாற்று முறையில் பல்வேறு பொருட்களையும் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதற்கு தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களே சான்றாதாரங்கள்.
இரும்பைத் தொடர்ந்து பொன், மணிக்கற்கள், வைடூரியங்கள் என இயற்கை வளங்களிலும் திளைத்திருந்திருக்கிறோம் என்பதையும் அறிய முடிகின்றது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அகண்ட தமிழகத்தின் ஆய் நாட்டின் வணிகர்கள் சூதுபவள வணிகத்துக்கான கடல் பாதையைத் தென்கொரியாவின் கயா நாடு வரை விரிவுபடுத்தினர்.
தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலைப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும், மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. அகத்திய முனிவர் வாழ்ந்த, அந்தப் பொதிகை மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சி செய்த மலை.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் புகுத்தப்பட்ட இரும்பின் தொழில்நுட்பம் மனித வளர்ச்சியின் முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரியாவின் இரும்புக் கனிமத்தைக் கொண்டு கொரியர்கள் இரும்பை உருவாக்கவும் இரும்புக் கருவிகள் செய்யவும் தேவையான திறனையும் வல்லமையையும் தமிழகத்தை சேர்ந்த ஆய்கொங்கு வணிகர்கள் கயாவில் உருவாக்கினர்.
நேர்மையும் அறநெறி பிறழாக் கொள்கையும் கொண்ட குறுநில இளவரசனைத் தேர்வு செய்து அரசனாக்கி அவர்களின் இளவரசியை அம்மன்னனுக்கு மணமுடித்து ஒரு புதிய அரசாட்சி அமைய உதவினர்.
ஆதிக்குடிகளாக வாழ்ந்த பல்வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்தி ஒரு சிற்றரசை உருவாக்கினர். தங்களின் வாழ்வியலையும் தமிழ் புத்த சிந்தனையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
அந்த வகையில் கயா எனும் அந்நாட்டில் கிடைத்த இரும்புக் கனிமத்தை இரும்பாக்கும் செயல்முறையைக் கற்றுக் கொடுத்து ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழ் புத்தம் கயா நாட்டின் முதல் அரசியால் போற்றி வளர்க்கப்பட்டு கயா ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஒப்பற்ற சமுதாயமாக உருவாகி அந்த அரசியின் ஆட்சி கொரியாவை முற்போக்குச் சிந்தனை மிக்க நாடாக மாற்றியது.
பொற்கால ஆட்சி நடந்த கயாவின் வாழ்வியல் தென்கொரியாவில் இருந்த பல குறுநில அரசுகளுக்கும் பரவியது. சில்லாவின் படையெடுப்பு, பிற நாடுகளின் ஆதிக்கம் அழுத்தம் உலகப் போரின் தாக்கம் எனப் பல்வேறு காரணங்களால் ஏழ்மையில் சிக்கித் தவித்த அந்நாடு மீண்டும் சிலிர்த்தெழுந்து செல்வ வளம் கொழிக்கும் நாடாக மாறிய நிலையில் தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்கான முதல் வித்தை விதைத்தவர் அயலகத்திலிருந்து வந்த ஒரு பெண் என்று பெருமையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒருகாலத்தில் பன்னாட்டுக் கடல் வணிகத்தில் தடம் பதித்துத் தங்கள் முத்திரையை பதித்துப் பிற்காலத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு முன்னேற்றப் பாதையில் பயணிக்க ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக இந்த இளவரசியின் வரலாறு விளங்கும் என்பது திண்ணம்..!
(தொடரும்)