என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
நக்கீரரை மீட்ட வேல்!
- சங்க காலத்தில் ஆற்றுப்படை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வழக்கத்தில் இருந்தது.
- முருகனின் வேல் சிறை கதவை உடைத்து ஆயிரம் பேரையும் மீட்டது.
சங்ககால புலவர்களில் நக்கீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழ் வளர்த்த மதுரையில் தோன்றிய முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மூன்றும் மிக மிக முக்கியமானது. இதில் கடை தமிழ் சங்கத்தில் 49 புலவர்கள் இருந்தனர்.
அந்த 49 புலவர்களில் தலைவராக இருந்தவர் நக்கீரர். இவர் சிவனை தவிர வேறு யாரையும் வணங்காதவர். ஒரு சமயம் தருமி ஏழை புலவனுக்காக சிவபெருமானே இவருடன் நேரில் தோன்றி வாதாடும் அளவுக்கும் சிறப்பை பெற்றிருந்தார்.
சிவபெருமான் எழுதி கொடுத்த பாடலை குற்றம் என்று சொன்ன போது சிவபெருமான் தனது நெற்றி கண்ணை திறந்து காட்டி மிரட்டினார். அப்போதும், "நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று வாதாடி சிவபெருமானின் அருளாசி பெற்றவர்.
புலமை மிகுந்து இருந்தாலும் சிவனும், முருகனும் ஒன்றே என்பதை இவர் ஏற்க மறுத்தார். சிவனை தவிர வேறு யாரையும் பாடவும் மறுத்து வந்தார். ஆனால் தமிழ்க் கடவுள் முருகன் அவரை விடவில்லை. நக்கீரரின் தமிழ் தன்னையும் அலங்கரிக்க வேண்டும் என்று முருகப்பெருமான் விரும்பினார்.
இதனால் பல்வேறு திருவிளையாடல்கள் நடத்தி நக்கீரரை தனது பக்தனாகவே மாற்றினார். முருகன் மேல் கொண்ட பக்தி காரணமாக "திருமுருகாற்றுப்படை" எனும் அற்புதமான நூலை நக்கீரர் பாடி கொடுத்தார். சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.
பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் திருமுருகாற்றுப்படை முருகனை எப்படி வழிபட வேண்டும் என்று பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் ஆற்றுப்படை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வழக்கத்தில் இருந்தது.
அதாவது வள்ளல்களாக விளங்கும் அரசர்களை தேடிச் சென்று பரிசு பெற்று திரும்பும் புலவர்கள் தங்களது சக புலவர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் நீங்களும் என்னை போல பரிசு பெற வேண்டுமானால் இந்த பாதையில் செல்லுங்கள் என்று சொல்வதுதான் ஆற்றுப்படையாகும். இதற்கு ஆற்றுப்படுத்துதல் அல்லது வழிகாட்டுதல் என்று அர்த்தம் உண்டு.
அந்த அடிப்படையில் முருகப்பெருமானிடம் அருள் பெற்ற நக்கீரர் தமிழர்கள் ஒவ்வொரு வரும் முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் வகையில் பாடியதுதான் திருமுருகாற்றுப் படை. முருகன் மீது பாடப்பெற்ற முதல் ஆற்றுப்படை நூல் இதுதான். இந்த நூல் உருவாவதற்கு முருகன் நடத்திய திருவிளையாடலும் காரணமாகும்.
இதுபற்றி ஒரு கதையும் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் "கற்கி முகி" என்ற பூதம் 999 பேரை பிடித்து ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது. 1000-வது நபரை பிடித்ததும் அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது அந்த பூதத்தின் திட்டமாகும்.
ஆயிரமாவது நபருக்காக "கற்கி முகி" பூதம் காத்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நீராடி சிவனையும், முருகனையும் வழிபடுவதற்காக நக்கீரர் சென்றார். சரவண பொய்கை கரையில் பூஜை செய்வதற்காக அமர்ந்தார்.
இதை "கற்கி முகி" பூதம் பார்த்தது. ஆயிரமாவது நபராக நக்கீரரை இழுத்து சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டது. நக்கீரர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி பூஜையை தொடங்கியபோது கற்கி முகி பூதம் அருகில் உள்ள அரச மரத்தில் இருந்து ஒரு இலையை கீழே விழச் செய்தது.
அந்த இலை சரவணப் பொய்கை குளத்தின் கரையில் விழுந்தது. இலையின் பாதி பகுதி தண்ணீரும், பாதி பகுதி தரையிலுமாக விழுந்து இருந்தது. தண்ணீரில் விழுந்த இலை பகுதி மீனாக மாறி சரவணப் பொய்கைக்குள் செல்ல முயற்சி செய்தது. ஆனால் தரையில் விழுந்த இலையின் மற்றொரு பகுதி பறவையாக மாறி பறந்து செல்ல முயற்சி செய்தது.
இரண்டும் ஒன்றை ஒன்று இழுத்தப்படி இருந்தன. இந்த காட்சியை கண்டதும் நக்கீரர் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றார். பூஜையை மறந்து அந்த காட்சியை கண்டார். இதனால் சிவபூஜையில் நிந்தனை ஏற்பட்டு குற்றம் நிகழ்ந்தது.
இதை காரணம் காட்டி கற்கி முகி பூதம் நக்கீரரை பிடித்துக் கொண்டு போய் குகைக்குள் இருந்த சிறையில் ஆயிரமாவது நபராக தள்ளியது. ஆயிரம் பேரையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடிவு செய்த அந்த பூதம் எல்லோரும் தயாராக இருங்கள். குளித்து விட்டு வருகிறேன் என்று சென்றது.
குகை சிறையில் இருந்த 999 பேரும் புலவர் நக்கீரரை திட்டி தீர்த்தனர். நீங்கள் பூதத்திடம் பிடிபடாமல் இருந்திருந்தால் நாங்கள் உயிர் தப்பி இருப்போம். இப்போது நாங்கள் பூதத்துக்கு இரையாகப் போகிறோம் என்று புலம்பினார்கள்.
இதை கேட்டதும் நக்கீரர் அவர்களை ஆறுதல்படுத்தினார். குகை சிறையில் உள்ள அனைவரையும் மீட்க முருகனை அழைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் மனமுருகி பாடினார். அந்த பாடல்களின் தொகுப்புதான் திருமுருகாற்றுப்படையாகும்.
திருமுருகாற்றுப்படைபாடி முடித்த பிறகும் நீண்ட நேரமாக முருகப்பெருமான் வரவில்லை. உடனே நக்கீரர் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து கண்களை மூடி தியானம் செய்தார். "படை வீடுகளில் முதன்மை பெற்ற திருச்செந்தூர் முருகா எங்களை காப்பாற்ற வா" என்று அழைத்தார்.
உடனடியாக திருச்செந்தூர் முருகன் அங்கு தனது வேலோடு தோன்றினார். குகை சிறையை உடைத்து நக்கீரர் உள்பட 1000 பேரையும் மீட்கும்படி வேலை அனுப்பினார். முருகனின் அந்த வேல் சிறை கதவை உடைத்து ஆயிரம் பேரையும் மீட்டது.
அப்போது நக்கீரர் முருகப்பெருமானிடம், "என்னை மீட்க தாமதமாக வந்தது ஏன்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான், "நக்கீரா.... நீவீர் பாடிய திருமுருகாற்றுப்படையில் கடைசியில் பழமுதிர்சோலை மலை கிழவனே என்று பாடியிருக்கிறாய். கிழவன் எப்படி வேகமாக வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதை கேட்ட நக்கீரர் தமிழ் கடவுள் முருகனை இளைஞனாகவும் பாடினார். இதனால் திருச்செந்தூர் முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த திருவிளையாடலை திருச்செந்தூர் முருகன் நடத்தினார் என்பதை திருச்செந்தூர் பிள்ளைத் தமிழின் 13-ம் பாடலில் விளக்கமாக சொல்லப்பட்டு உள்ளது.
திருமுருகாற்றுப்படை சிறந்த பக்தி நூலாக மட்டுமின்றி சிறந்த இலக்கிய நூலாகவும் விளங்குகிறது. இந்த நூலில் முருகப் பெருமானின் புகழையும், பெருமைகளையும் நக்கீரர் விளக்கமாக எடுத்துச் சொல்லி உள்ளார். முருகனின் அழகை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு சொல்லி உள்ளார்.
முருகப்பெருமானிடம் செல்லுங்கள் உங்களது குறைகள் அனைத்தும் தீரும் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வழிகாட்டி உள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் முக்தி அடைய விரும்புபவர்களை, முருகனிடம் முக்தி பெற்ற ஒருவன் ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவது போல திருமுருகாற்றுப்படை நூல் அமைந்துள்ளது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுகிறார்... "செந்தில் வீற்றிருக்கும் வேலவனின் திருநாமத்தை நான் சொல்லும் கணக்கில் உச்சரித்தால் நான் சந்திக்கும் அனைத்து சோதனைகளும் கரைந்து விடும். நான் திருச்செந்தூர் ஆண்டவரின் திருநாமத்தை உச்சரிக்கும் கணக்கில் எனக்கு வந்த மற்றும் எனக்கு வரப்போகும் எனது கர்மவினைகளால் ஏற்படும் தீய விளைவுகளும் மறைந்து விடும்.
புனித சாம்பலை (விபூதி) பூசி, இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பவர்களுக்கு எந்தப் பக்கத்தில் இருந்தும் பயம் இருக்காது. (வந்த வினையும் வருகிற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்குமே). நக்கீரர் திருச்செந்தூருக்கு 'திருச்சீரல்வாய்" என்று மற்றொரு பெயரை சொல்கிறார்.
திருமுருகாற்றுப்படையில்தான் முதல் முதலாக நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் சிறப்பு தலங்களை பட்டியலிட்டு வகைப்படுத்தினார். அவர் காட்டிய பாதை காரணமாகவே தமிழகத்தில் முருகப்பெருமா னுக்கு அறுபடை வீடு என்ற பெயரில் முருகனின் 6 தலங்கள் முதன்மை சிறப்பைப் பெற்றன. அவற்றை பக்தர்கள் கடைபிடிக்கத் தொடங்கியதும் முருகனின் அறுபடை வீடு யாத்திரை உருவானது.
தமிழகத்தில் எந்த ஒரு கடவுளுக்கும் அதற்கு முன்பு இப்படி சிறப்பு தலங்கள் வகைப்படுத்தப்படவில்லை. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உருவான பிறகுதான் மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தலங்கள் உருவானது. அந்த வகையில் முருகப்பெருமானால் உருவான திருமுருகாற்றுப்படை தனி சிறப்பு பெற்றிருக்கிறது.
முருகனின் தோற்றத்தையும், பெருமையையும் சொல்லும் இந்த நூல் மூலம் திருச்செந்தூர் முருகன் தனது சிறப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நக்கீரர் காட்டிய வழியில் நாமும் முருகப்பெருமானை வழிபட்டால் நக்கீரருக்கு கிடைத்தது போல நிலையான இன்பம் நிச்சயம் நமக்கும் கிடைக்கும்.
நக்கீரரை ஆட்கொண்டது போல திருச்செந்தூர் முருகன் நடத்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.