search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    யாருக்குப் பிறந்தநாள்?
    X

    யாருக்குப் பிறந்தநாள்?

    • மெழுகுவர்த்தியின் ஆயுள் எதுவரை? அதன் திரி எரிந்து, மெழுகு உருகி வழிந்து முடியும் வரை!
    • மதிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், மரியாதைக்கு உரியவர்களாகவே வாழ்கிறார்கள்.

    'வாழ்க்கை ஒரு வாய்ப்பு. அதிலிருந்து பயனடையுங்கள். வாழ்க்கை ஓர் அழகு. அதைப் போற்றுங்கள். வாழ்க்கை ஒரு கனவு. அதைப் புரிந்து கொள்ளுங்கள்'.

    - அன்னை தெரசா

    காலத்தின் வேகத்தை நாம் உணர்வதில்லை. புதிய மாதம், புதிய வருடம் எனக் கொண்டாடுகிறோமே தவிர, ஒவ்வொரு நாளும் வாழ்வின் நீளம் குறுகிக் கொண்டிருப்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை.

    அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும் ஆபத்து. அப்படிச் சிலர், தங்கள் வாழ்வை ரசித்து அனுபவிக்க முடியாமலேயே கடத்திவிடுகின்றனர். காலத்தை அறிகிற ஞானம் வேண்டும்; தெளிவான பார்வை வேண்டும்; கலக்கம் தேவையில்லை.

    நாம் கவனிக்கின்றோமோ இல்லையோ, காலம் தன் காரியங்களை நடத்திக்கொண்டே இருக்கும். புதிய வெள்ளம் வருகின்றது; அலைகளுடன் ஆர்ப்பரித்து நடைபோடுகிறது. அதுவும் கடந்து செல்கிறது.

    கால வெளியில் அன்றாடம் புதிய புதிய ஜனனங்கள்; பலப்பல மரணங்கள். காலத்தின் கணக்கு நமக்குப் புரிவதில்லை. யாரை விட்டுச் செல்லும், யாரை எப்போது இழுத்துச் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அதுதான் மிகப்பெரிய ரகசியம்.

    குடும்ப உறவுகள், நண்பர்கள், ஆத்மார்த்தமானவர்கள் எனப் பலரோடு ஒவ்வொருவர் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. ரெயில் பெட்டிகள்போல் உள்ளங்கள் ஒவ்வொன்றும் இணைந்தே பயணிக்கின்றன. எனினும், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு புள்ளியில், காலம் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது.

    பார்க்கின்றோம், பழகுகின்றோம், சிரிக்கின்றோம், ரசிக்கின்றோம், கொண்டாடுகின்றோம் - வாழ்க்கை இனியதுதான்.

    ஓடி ஓடித் திரிகின்றோம். நிழல்கண்ட இடங்களில் கொஞ்ச நேர ஆசுவாசம். மீண்டும் ஓட்டம் தொடர்கின்றது. பணத்திற்காக ஓடுவதும், பொருள் தேடுவதும், உறவுகளை நாடுவதும் மனித வாழ்வின் நியதிகள். பரபரப்பான இந்த வாழ்வில், ஆத்மார்த்தமாய் ஒருசிலர் நம் வாழ்வோடு கலந்துவிடுகின்றனர். அந்த ஆத்மார்த்த நினைவுகள், நம் அடிமனதில் எப்போதும் உலவிக்கொண்டே இருக்கும். சில நினைவுகள் பாதி உறக்கத்தில் இருக்கும்; ஆனால், ஒருதுளிச் சாரலில் சிலிர்த்துவிடும். அப்படி உறங்கிப்போன நினைவுகளை, சில சமயங்களில் முகநூல் தட்டி எழுப்பிவிடுகின்றது.

    வழக்கம்போல் முகநூல் பதிவுகளை மேலோட்டமாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அதில் வந்திருந்த ஒரு தகவல் என்னை ஒரு உலுக்கு உலுக்கியது.

    என் ஆத்மார்த்த நண்பர் ஒருவரின் நிழற்படத்துடன், அவரின் பெயர் மற்றும் வயதைக் குறிப்பிட்டு, 'இன்று இவருக்குப் பிறந்தநாள், வாழ்த்துங்கள்' என்று அறிவித்திருந்தது. அதன் கீழே, வாழ்த்துச் செய்தி அனுப்புவதற்கான பகுதியும் இருந்தது.

    அதைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின. அவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    அவர் என் ஆத்மார்த்த நண்பர். மிகச்சிறந்த மனிதர். பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பழகின மாத்திரத்திலேயே என் மனதுக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.

    முதன்முறையாக அவரைச் சந்திக்க அலுவலகத்திற்குச் சென்றிருந்த தினத்தில், அவர் விடுப்பில் இருந்தார். எனவே, என் கவிதை நூல் ஒன்றை அவர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு நான் சென்றுவிட்டேன்.

    மறுநாள் அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது.

    'கவிதைகளைப் படிச்சி ரசிச்சேன். நம்ம பத்திரிகைக்கு எழுதலாமே' என்றார்.

    எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடனடியாக ஐந்து கவிதைகளை எழுதி, மறுநாளே அவரின் அலுவலகத்திற்குச் சென்றேன். பேட்டி எடுக்கிற விஷயமாக அவர் வெளியே சென்றிருந்தபடியால், அன்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. எனவே, கவிதைகளைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

    ஓரிரு மணிநேரம் கழித்து அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது.

    'கவிதைகள் சிறப்பா இருக்குது. எனக்கு ஒரு யோசனை...' என்றார்.

    'என்ன?' என்றேன்.

    'ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு கதை இருக்குது. அதனால, கவிதையோடு அந்தக் கவிதைக்கான கதையையும் எழுதிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப புதுமையா இருக்கும்' என்றார்.

    எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எனினும், சிறு தயக்கம். ஏனெனில், அப்போது நான் கவிதைகளும் கட்டுரைகளுமே அதிகமாக எழுதிக் கொண்டிருந்தேன். அவருடனான தொடர்புக்குச் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதை எழுதி, அது பத்திரிகையில் வெளிவந்தது. அதன்பின் கதை எழுதவே இல்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படியொரு வாய்ப்பு.

    'கதை எனக்குக் கைவருமா...' என்று இழுத்தேன்.

    'உங்களால் முடியும், எழுதுங்கள்' என்றார்.

    அவரின் வார்த்தைகள் எனக்குள் அனல் மூட்டின. உறங்கிக் கிடந்த கதைகளுக்கான விதைகளைத் தட்டி எழுப்பின. விறுவிறு என்று எழுத ஆரம்பித்தேன். 25 கவிதைகளுடன் 25 கதைகள். அவை புதுமையான படைப்புகளாய் 25 வாரங்கள் பத்திரிகையில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன.

    என் நண்பர் என் எழுத்துகளை அதிகமாக நேசித்தார். நான் நிறைய எழுத வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் முழுக்கவனம் கொண்டிருந்த என்னை 'உங்களால் மிகச்சிறந்த கதைகளையும் தரமுடியும்' என்று சொல்லி என்னைக் கதைக்களத்திற்குள் கொண்டு வந்தவர் அவர்தான்.

    சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பது வழக்கம். இலக்கியம் பற்றி நிறைய பேசுவோம்; நிறைய விவாதிப்போம். எங்கள் சந்திப்புகள் ஒவ்வொன்றும் ஓர் அற்புதமான இலக்கியக் கூடலாக இருக்கும்.

    சங்க இலக்கியம் தொட்டு, தற்கால இலக்கியம் வரை அவரிடம் பேசுவேன். கேட்டு ரசிப்பார். நான் கதை சொல்ல ஆரம்பித்தால் ஆர்வத்துடன் கேட்பார். சில சமயங்களில் சத்தம் போட்டுச் சிரிப்பார். முதல் தொடரைத் தொடர்ந்து, நான்கு தொடர்கள். ஆக, 90 சிறுகதைகள். அவை யாவும் பல தொகுதிகளாக வெளிவந்து பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

    எங்கள் நட்பு செழித்தோங்கியது. அப்போது தான், திடீரென கொரோனா உலகெங்கும் படையெடுக்கத் தொடங்கியது. எல்லோரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றிய காலம் அது. அவரும் அப்படித்தான் பத்திரிகைப் பணிகளைக் கவனித்தார்.

    அச்சமயம், வாசகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வாழ்வியல் படைப்புகளை என்னிடம் வாங்கி பத்திரிகையில் வெளியிட்டார். கொரோனா பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். இடையில் ஒரு வாரம், தம் தாயாரைப் பார்த்துவர சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். அந்த வாரம் மட்டும்தான் நான் அவருடன் போனில் பேசவில்லை.

    மறுவாரத்தின் முதல்நாளின் காலைப் பொழுதில், என் மற்றொரு நண்பரிடமிருந்து வந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. என் உயிர் உருகி, என் நகக்கண்களில் வழிவதுபோல் இருந்தது. ஐயகோ! என் அன்பு நண்பர் போய்விட்டாரே!

    தேக்குமரத் தேகம் கொண்ட என் ஆத்மார்த்த நண்பர். தாயைப் பார்க்க ஊருக்குச் சென்றிருந்தவரின் உயிரை கொரோனா திருடிச் சென்றுவிட்டது.

    ஒரு வாரத்திற்குள்ளாகவா இப்படி ஒரு கொடுமை! என் இனிய நண்பரை இனி எங்கே பார்ப்பேன்! உள்ளத்திற்குள் ஏங்கினேன். அன்றாடக் கடமைகளிலும், புதிய புதிய விஷயங்களிலும் அந்த வலியை மறந்தது மனம். ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.

    அவர் விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் கடந்தாயிற்று. இப்போது அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்படி முகநூல் கூறுகிறதே. எப்படி அனுப்புவது? நினைவுகள் நிழலாடின. என் அன்புக்குரிய ஆத்மார்த்த நண்பருக்கு உள்ளத்தால் வாழ்த்து மலர்களை அனுப்பினேன்.

    தினந்தோறும் அரங்கேறுகின்ற நிகழ்வுதான் மரணம். சாலையில் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கின்றபோது, எந்த பிரக்ஞையும் இன்றிக் கடந்து செல்கின்றோம். ஆனால், நம் மனதுக்கு நெருக்கமானவர்களின் மரணம், ரணத்தை மட்டுமன்றி ஆழமான உண்மைகளையும் நமக்கு அறியத் தருகின்றது.

    மெழுகுவர்த்தியின் ஆயுள் எதுவரை? அதன் திரி எரிந்து, மெழுகு உருகி வழிந்து முடியும் வரை! ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படும்போதே அதன் மெழுகு, திரி ஆகியவற்றின் தரம், அது எரியும் கால அளவு, கண்மூடும் நேரம் - அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன. அது தன் ஒளியிலேயே தன்னை உருகி வழியச் செய்து விடைபெறுகிறது.

    மெழுகுவர்த்திபோல் இறுதி வரையில் ஒளிகொடுத்து நிறைவு பெறுவதுதான் மகோன்னத வாழ்க்கை. ஏற்றப்படாத விளக்கு, எரிக்கப்படாத விறகு, எழுதப்படாத சாசனம் யாருக்கும் பயன்படாது.

    நம்மை இழுத்துச் செல்லும் காலத்தின் வேகம், நம் வாழ்வைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நீர்க்குமிழிக்குள் கோட்டை கட்டுகிறோம். சங்குக்குள் தேரோட்டுகிறோம். விண்மீன் கூட்டம்போல் விழிகளில் எத்தனை எத்தனைக் கனவுகள்! அவற்றை நனவாக்கிப் பார்க்க சக்கரம்போல் சுழல்கின்றோம். ஓர் எல்லைக் கோட்டில் இயக்கங்கள் நின்றுவிடும்.

    ஆயினும், நாம் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் நமது உடல், உயிர் ஆகியவற்றின் இருப்பைக் கடந்தும் நீடிக்கக்கூடும். நம் குடும்ப உறவுகள், சொந்தபந்தங்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு நாம் வழங்கியிருக்கும் பங்களிப்பின் மூலம், நம் பெயர் நம் காலத்திற்குப் பின்னரும் நினைவுகூரப்படும்; பேசப்படும்.

    நம் வாழ்க்கை ஒரு தங்கச் சுரங்கம். மாபெரும் கொடை. இதை நாம் வெறும் மண்மேடாக்கிவிடக் கூடாது.

    இன்று பெரும்பாலான மக்கள் சுயநலத்தையே சுவாசிக்கின்றனர். அடுத்திருப்பவனுக்குப் போடப்படும் இலையையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்பவர்கள், பிறரின் பசியை உணர்வதில்லை.

    தெருவில் திரிகின்ற அப்பாவி நாய்கள் மீது கல்லெடுத்து எறிகின்றவன், தன்னை வீரனாக எண்ணிக் கொள்கின்றான். ஓட்டலில் உணவு பரிமாறும் எளியவன் மீது ஆத்திரப்படுபவன், தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள நினைக்கின்றான்.

    கவிஞர் தியாரூ, 9940056332

    ஆணவத்தில் சிலருக்குத் தலை வீங்கிவிடுகிறது. மிதமிஞ்சிய கொழுப்பில் தலை கனத்து, பின்னர் நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள். எனினும், திருந்துவதே இல்லை. அப்படியே வாழ்கிறார்கள்; அப்படியே போகிறார்கள்.

    மானுட வாழ்வின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வாழ்வின் மதிப்பு என்பது, நாம் வாழ்கின்ற விதத்தில் இருக்கின்றது. மதிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், மரியாதைக்கு உரியவர்களாகவே வாழ்கிறார்கள். அத்தகையோரின் மாண்புமிகு வாழ்க்கைதான், அவர்களின் காலத்திற்குப் பின்னும் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்படுகின்றது.

    எந்த நோக்கமும் இல்லாமல், சிலர் தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருக்கும்போதும் அறியப்படுவதில்லை; இறந்த பின்னும் எண்ணப்படுவதில்லை.

    ஒரு மனிதனிடம் நிறைய செல்வம் இருந்தது. எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஊருக்குள் அவனுக்குப் பெரிய மரியாதை ஒன்றும் இல்லை. வீதியில் நடந்தால்கூட யாரும் அவனைக் கண்டுகொள்வது இல்லை. அவனுக்கு மிகுந்த வருத்தம். ஒரு ஞானியைச் சந்தித்தான்.

    'ஐயா, என்னிடம் செல்வம் இருக்கிறது. ஆனால், ஊரில் எனக்கு மரியாதை இல்லை. அதை எப்படி வாங்குவது, சொல்லுங்கள்' என்றான்.

    'அதை வாங்க முடியாது. நீ கொடுத்துப்பார். வாங்க நினைத்தது தானாக வந்து சேரும்' என்றார்.

    நாம் வாழ்கின்ற காலத்தில் நல்லவற்றைச் செய்வோம். நம் சந்ததிக்கு நல்லவற்றை விட்டுச் செல்வோம். போன பின்னும் நம் பெயர் வாழ்ந்திருக்கும்.

    Next Story
    ×