என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சிறப்புக் கட்டுரைகள்
![வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கலாமா? வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கலாமா?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9263189-vitamin1.webp)
வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கலாமா?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது.
வைட்டமின்கள் நம் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றங்களுக்கு மிகவும் வேண்டிய ஒன்றுதான். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வைட்டமின்களின் தேவை என்ன என்பது பற்றியும், பலர் சத்து மாத்திரைகளை வருடக்கணக்கில் சாப்பிடுகிறார்கள், இது சரிதானா? என்பது பற்றியும் பார்ப்போம்.
உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்:
இதை இரு பிரிவுகளாகக் வகைப்படுத்தலாம்.
1. நீரில் கரைவன - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள் மற்றும் வைட்டமின் சி
2. கொழுப்பில் கரைவன- ஏ, டி, ஈ, கே
வைட்டமின்களின் பயன்களும், குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களும்: வைட்டமின் "ஏ" -
இது அதிக அளவில் கேரட், பால், கடல் உணவுகள், கீரை வகைகள், முட்டை ஆகியவற்றில் அதிகம் உள்ளது. இதன் குறைபாட்டால் மாலைக் கண்நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, கடல் உணவுகள், கீரை மற்றும் பட்டாணி.
வைட்டமின் "இ" - இதன் குறைபாட்டால் மூளை, நரம்பு, சருமம், தசைகள் வலுவிழப்பது, குழந்தைப் பேற்றில் சிக்கல்கள், நோயெதிர்ப்புச் சக்தி குறைவது, செரிமானம் மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – தாவர எண்ணெய் வகைகளில் சூரியகாந்தி, பருத்திவிதை, ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் அடங்கும். பாதாம், சிவப்புக் குடைமிளகாய், கிவி பழம், பப்பாளி, புரக்கோலி, அடங்கும் ஆகியவை ஆகும்.
வைட்டமின் "கே" - ரத்தம் உறைதலில் ஏற்படும் குறைபாடு சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, எலும்பு வலுவிழந்து இருப்பது, தோலில் சருமத்தில் தடிப்புகள், விரைவான இதயத்துடிப்பு இவையாவும் வைட்டமின் "கே" குறைபாட்டின் அறிகுறிகள். ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்லீரல் நோய், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது, நோய்த் தொற்று, ரத்த உறைவுத் தடுப்புக்குக் கொடுக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் "கே" குறைபாட்டை உண்டாகக் காரணமாகின்றன. நாளும் தேவையான அளவில் ஆண்களுக்கு 120 மைக்ரோ கிராமும், பெண்களுக்கு 90 மைக்ரோ கிராமும் தேவை.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள்:- கீரை, புரக்கோலி உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள், தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்திப்பழங்கள், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சைத் தேயிலை தேநீர் (கிரீன் டீ).
மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
வைட்டமின் "பி1" - (தையமின்)
நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பசியின்மை, எடைக்குறைவு, மனக்குழப்பம், நினைவுமறதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தசைகளில் பலவீனம், கண் தொடர்புள்ள நோய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் இடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - தானியங்கள், அசைவ உணவுகள், பீன்ஸ், உலர்ந்த கொட்டைகள்.
வைட்டமின் "பி2" - (ரைபோபிளேவின்)
நமக்கு நாளும் தேவைப்படும் வைட்டமின்களில் முதன்மையானது. இதை உடல் சேமித்து வைத்து கொள்ளமுடியாது. நாளும் உணவில் இதை எடுத்து கொள்ளத்தான் வேண்டும். இவை தாம் ஆற்றல் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால் மிகவேண்டிய ஊட்டச்சத்தில் இதன் பங்கு இன்றியமையாதது. உடலில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவதில் ரைபோபிளேவின் சிறந்த பங்கு வகிக்கிறது. உடலில் புரதங்கள் உருவாக்குவதோடு தொடர்பு கொண்டவை என்பதால் உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டையும் சீர்செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு இது உதவுகிறது. உடலில்தோல், திசு, கண்கள், சவ்வு, நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்புமண்டலம் போன்றவற்றின் திசு வளர்ச்சியை உறுதி செய்ய உதவுகிறது. நலமான சருமத்துக்கும், நகங்களின் வலுவுக்கும், வலுவான கூந்தலுக்கும் கூட உதவுகிறது. காயங்களை மீட்டுத் தோலைப் பாதுகாப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கிறது. கண்புரை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டை, மீன், காளான்
வைட்டமின் "பி3" - (நியாசின்)
தோல் பாதிப்புகளில் இருந்தும், செரிமான கோளாறுகளிலிருந்தும் காக்கிறது. நாளும் நமக்கு 14-17 மிகி போதுமானது. அளவிற்கு அதிகமாக எடுக்கும்போது கல்லீரலில் இடர் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் குறைபாட்டால் பெல்லங்ரா (Pellegra) - வயிற்றுப் போக்கு, நினைவுமறதி, தோல் ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - அசைவ உணவுகள், மீன், முட்டை மற்றும் காய்கறிகள்.
வைட்டமின் "பி6" - (பைரிடாக்சமைட்)
இது இதயம், தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஹார்மோன்கள் சீராக செயல்பட வைக்கிறது. மற்றும் அறிவாற்றலை அதிகரிக்கிறது. இதன் குறைபாடு இருக்கும் போது உடல் சோர்வு, பசியின்மை, வறண்ட சருமத்தின் தோற்றம், முடிஉதிர்தல், உதடுகளைச் சுற்றி விரிசல், தூக்கமின்மை, வாய் மற்றும் நாக்குப் பகுதியில் வீக்கம் உண்டாகலாம். அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – முழு தானியங்கள், பருப்புவகை, முட்டை, மீன், இறைச்சி, வாழைப்பழங்கள், காலிபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், கேரட் மற்றும் கீரைகள்.
வைட்டமின் "பி12" - (சயனோகோபாலமைன்)
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாவதற்கும், செயல்படுவதற்கும் மற்றும் செயல்பாட்டிற்கும், மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்பிற்கும் தயாரிப்பதற்கும், ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும், நம் அணுக்களில் உள்ள டிஎன்ஏ-வின் உருவாக்கத்திற்கும், ஞாபக மறதி நோய் வராமல் தடுப்பதற்கும், ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கும், மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கும், பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கவும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கவும், இதய நலனுக்கும், நகம், தோல், கண்களின் நலனிற்கும், எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும், மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கும், இவை யாவற்றிற்கும்அனைத்திற்கும் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இவ்வளவு நன்மைகளைத் தரும் வைட்டமின் "பி12"-ஐப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
வைட்டமின் "பி9" (போலிக் ஆசிட்)
ரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமான வைட்டமின். இதன் குறைபாட்டால் ரத்தச் சோகை, பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடு, வாய்ப்புண், தலைவலி, பசியின்மை, அதிகக் கோபம், மனக்கட்டுப்பாடின்மை ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலால் இதைச் சேமித்து வைக்க முடியாது. நாளும் உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - புரக்கோலி, விதைகள் மற்றும் கொட்டைகள், அசைவ உணவு, அவகேடோ, சோயா, வாழைப்பழம், தக்காளி, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், காலிிபளவர், பீட்ரூட், கேரட், கீரைகள்
வைட்டமின் "சி" - (அஸ்கார்பிக் அமிலம்)
இது உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. புரதத்துடன் இணைந்து நம் உடலின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமித் தொற்றுகளிடமிருந்து காக்கிறது. உணவிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகளுக்குச் சென்றடையவும் இது வேண்டும். ஸ்கர்வி என்னும் நோய் இதன் குறைபாட்டால் வருகிறது. இதனால் எலும்புகளும் தசைகளும் வலுவிழந்துவிடும். அதிகமுள்ள உணவுப் பொருட்கள் – நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், கீரைகள், ப்ரக்கோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், அன்னாசிப்பழம், கிவி பழம், மாம்பழம், கொய்யாப்பழம்.
நெல்லிக்காயின் மகத்துவம்:
மேற்கூறிய பழங்களில் வைட்டமின் "சி" இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது. மேலும் இதில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால் வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளின் உறுதிக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலுக்குத் தேவை, அதிகமாக எடுத்துக் கொள்வதும் கேடுதரும் என்பதை ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வருடக்கணக்கில் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.