search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நகைச்சுவை நண்பனுக்கு என்னாச்சு?
    X

    நகைச்சுவை நண்பனுக்கு என்னாச்சு?

    • ஒழுக்கம். கடன் வாங்காமல் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துவதும் ஒழுக்கம்தான்.
    • நண்பனின் சிரிப்பு, பேச்சு, மேனரிசம் எல்லாம் அலையலையாய் என் நெஞ்சில் மோதி அடித்தன.

    'ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான், இன்பம் என்னும் மாளிகை அமைக்கப்பட வேண்டும்'.

    -செஸ்டர் பீல்ட்

    எந்தத் தீய பழக்கத்தையும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை அவ்வளவு எளிதாக விட முடியாது. ஏனெனில், அது நம் மனதை வெகு சுலபமாக அடிமைப்படுத்திவிடும்.

    தீய பழக்கங்கள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன! எனினும், அவற்றைப் பழகிப் பார்க்க மனம் ஆசைப்படுகின்றது.

    காரணம், அவற்றின் கவர்ச்சி. மறைக்கப்படுவது எதுவோ, தடுக்கப்படுவது எதுவோ, அதன் மீதுதான் ஆசை அதிகமாகிறது. ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கே அங்கு இடமில்லை. எதையும் அனுபவித்தறிவதில் ஏற்படுகின்ற ஆர்வம் அலாதியானது.

    தெரியாததைத் தெரிந்து கொள்ளும்போது தான் அறிவு விருத்தியாகும். சைக்கிள் ஓட்டிப் பழகும்போது, அதுதான் மிகப்பெரிய ஞானக்கலையாகத் தெரிகிறது. பார்க்கின்ற சைக்கிளை எல்லாம் ஓட்டிப் பார்க்க ஆசை எழுகிறது.

    பாடங்களை அன்றன்று படித்து முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவன், ஒருபோதும் அதை விடுவதில்லை. அந்தப் பழக்கம் தேர்வுகளை அவனுக்குச் சுலபமாக்குவது மட்டுமன்றி, அவனுக்குள் ஓர் ஒழுங்குமுறையையும் உருவாக்கிவிடுகிறது. அது அவனை உயர்த்துகிறது.

    குறித்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பது ஒருவகை ஒழுக்கம். லஞ்சம் வாங்காமல் தன் கடமைகளைச் செய்வது மிகச்சிறந்த ஒழுக்கம். கடன் வாங்காமல் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துவதும் ஒழுக்கம்தான். இவை அனைத்தும் பழக்கத்தில் வருபவை. நல்லவற்றைச் செய்வதற்கு ஒருவன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும்; நல்லவனாய் இருப்பதைப் பற்றி அவன் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை.

    சிலர் இருக்கிறார்கள். தினந்தோறும் அலுவலகத்திற்கு அரைமணி நேரம் பிந்திதான் செல்வார்கள். அங்கே போய் மேலாளரிடம் தலையைச் சொரிந்து கொண்டு நிற்பார்கள். சிலருக்கு, லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய முடியாது. இப்படி ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு. ஒன்றைப் பழகிக் கொண்டபின், அது வழக்கமாகிவிடுகிறது.

    நல்லவை, தீயவை - இவையே மனித வாழ்வின் இருவேறு நிலைகளைத் தீர்மானிக்கின்றன. நல்ல பழக்க வழக்கங்கள் நமக்கு நற்பெயரைத் தருகின்றன; ஆரோக்கியத்தையும் தருகின்றன. நல்லவற்றின் மூலம்தான் வாழ்க்கை உயர்வு பெறுகின்றது.

    தவறான தொடர்புகளும் தாறுமாறான செயற்பாடுகளும் ஒரு மனிதனின் வாழ்வைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிடும். அதனால்தான், ஆரோக்கியத்திலும் வாழ்வின் நகர்விலும் பின்தங்கிக் கொண்டிருப்பவனைப் பார்ப்பவர்கள், 'அவனுடைய பழக்க வழக்கம் சரியில்ல' என்கிறார்கள். அது உண்மையும்கூட!

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இலக்கிய நண்பன் எனக்குக் கிடைத்தான். நாங்கள் இருவரும் வெவ்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். எனினும், இலக்கிய ஆர்வம் எங்களை இணைத்தது.

    அந்த நண்பனின் வீட்டு மொட்டை மாடியில், கலைக்குடில் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். தென்னங்கீற்றுகளால் கூரை வேய்ந்த குளிர்ச்சியான ஓர் அறை. பெரும்பாலான மாலைப் பொழுதுகள் அங்குதான் செலவிடுவோம். என் இலக்கிய நண்பனுக்கு நன்கு பழக்கமான மற்றொரு நண்பனும் அங்கு அவ்வப்போது வருவான். அவன் வேறொரு கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தான்.

    அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவனை 'நகைச்சுவை நண்பா' என்றுதான் நான் அழைப்பேன். வரும்போது கடுகடுப்பாக 'உம்' என்று வருவான். வந்து உட்கார்ந்து, ஒரு சிகரெட்டை முழுவதுமாக இழுத்து முடித்ததும், கலகல என்று பேசத் தொடங்குவான். நகைச்சுவை ததும்பத் ததும்பப் பேசுவான். வெடிச்சிரிப்பாய்ச் சிரிப்பான். சில நிமிடங்களில் பட்டென்று அமைதியாகிவிடுவான். பின்னர் கிளம்பிவிடுவான்.

    அவனுடைய நடவடிக்கைகள் வேடிக்கையாகவும், சில சமயங்களில் விநோதமாகவும் இருக்கும். அவனைப் பற்றி என் இலக்கிய நண்பனிடம் விசாரித்தேன்.

    'அவன் ஸ்மோக் பண்றது சாதாரண சிகரெட் இல்ல. அதில் வேறொரு விஷயம் இருக்கு. அதைப்பற்றி அவனிடமே கேள்' என்றான்.

    அதன்பின் நான்கைந்து நாட்கள் நான் அங்கு செல்லவில்லை. பின்னொரு மாலைப் பொழுதில் கலைக்குடிலுக்குச் சென்றேன். அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' (லீவ்ஸ் ஆப் கிராஸ்) என்ற நூல் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த நகைச்சுவை நண்பன் விறுவிறு என்று வந்தான்.

    மோடாவில் உட்கார்ந்ததும், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சின்னஞ்சிறு பொட்டலத்தை எடுத்து, அதிலிருந்த ஏதோ ஒன்றைத் தனது இடது உள்ளங்கையில் கொட்டி, வலது கையினால் நன்றாகக் கசக்கினான். பின்னர், அதில் விலக்க வேண்டியவற்றைப் பொறுக்கினான். அதன்பின், சிகரெட்டிலுள்ள புகையிலையை வெளியே தள்ளிவிட்டு, உள்ளங்கையிலிருந்த துகள்களை வெகு லாவகமாக சிகரெட்டிற்குள் ஏற்றினான். ரசித்துப் புகைக்கத் தொடங்கினான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அரட்டை அமர்க்களம் ஆரம்பமானது.

    எனக்குப் புரிந்துவிட்டது. எனினும், அவனிடம் கேட்டேன். 'இது என்னது?' 'கஞ்சா' என்றான்.

    'இந்தப் பழக்கம் உனக்கு எப்படி...?'

    'ஆராய்ச்சி எதுக்கு... எப்படியோ பழகிட்டேன். இந்த சுகமே தனி. இது ஒரு தேவமூலிகை' என்றான்.

    'இது ரொம்ப ஆபத்தானதுன்னு சொல்றாங்களே'.

    'அளவுக்கு அதிகமானா எதுவும் ஆபத்துதான். காபி, டீ, சர்க்கரை, சோறு எல்லாமே கேடுதான். ஆனா ஒரு புதுமையான சுகத்தை இதுமூலம் நான் அனுபவிக்கிறேன்' என்று சொல்லி, புகையை ரசித்து உள்ளிழுத்தான். முழுவதுமாக இழுத்து தீர்த்தபின், சற்று நேரத்தில் எழுந்து சென்றுவிட்டான்.நாட்கள் நகர்ந்தன.

    கவிஞர் தியாரூ, 9940056332

    கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், ஊரிலிருந்து நான் சென்னை வந்துவிட்டேன். மாதங்கள் வருடங்கள் எனக் காலம் ஓடியது. திருமணமாகி சென்னையில் செட்டில் ஆனபின், வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடும்பத்துடன் ஊருக்குச் சென்று வருவேன். ஆனால், பழைய நண்பர்களைச் சந்திக்கச் செல்வது அரிதாகிப் போனது.

    அப்படி ஒருமுறை ஊருக்குச் சென்றிருந்தபோது, என் இலக்கிய நண்பனைக் காணச் சென்றேன். வருடங்கள் கழித்துப் பார்த்த நெகிழ்ச்சியில், என்னை ஆரத்தழுவிக் கொண்டான். கடந்த காலத்தின் நினைவுகளைப் பேசிப் பேசிக் களித்தோம். நகைச்சுவை நண்பனைப் பற்றிய நினைவு வர, ஆவலுடன் விசாரித்தேன். இலக்கிய நண்பனின் முகத்தில் வருத்தம் படர்ந்தது.

    'உடம்புக்கு முடியல. படுத்த படுக்கையா இருக்கிறான்' என்றான். என் மனம் கவலையில் ஆழ்ந்தது.

    'என்னாச்சு' என்றேன் பதற்றத்துடன்.

    'முழுக்க முழுக்க கஞ்சா, பெத்தடின் ஊசி மருந்து, போதை மாத்திரைக்கு அடிமை ஆயிட்டான். யார் சொல்லியும் கேட்கல. இப்ப பல ஹெல்த் இஷ்யூஸ். எப்ப என்ன ஆகும்னு சொல்ல முடியாது' என்றான்.

    'பார்க்க வேண்டும்' என்றேன். அழைத்துச் சென்றான்.

    அந்த வீட்டின் ஒரு சிறிய அறையில், ஒடுக்கமான கட்டிலில் முடங்கிக் கிடந்தான் அவன். தேகம் துரும்புபோல் இளைத்திருந்தது. முகம் மொத் மொத்தென்று விகாரமாக இருந்தது. வீங்கியிருந்த கால்களின் வெடிப்புகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

    பக்கத்தில் போய் அமர்ந்தேன். அவனால் பேச முடியவில்லை. கைகளைத் தொட்டேன். அவை ஜீவனற்றுக் கிடந்தன. எனக்கு மனது தாங்கவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அந்த அறையை விட்டெழுந்து ஹாலுக்கு வந்தேன். அவனுடைய அப்பா, கண்களை மூடிக்கொண்டு ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நான் அருகில் செல்ல, கண்களை மெல்லத் திறந்தார்.

    'ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணலாமே' என்றேன்.

    'வேஸ்ட். எந்தப் பிரயோஜனமும் இல்ல. பெத்து வளர்த்தவங்களுக்குக் கண்ணீர்தான் மிச்சம். அவன் போகப் போறான்' என்று சொல்லிவிட்டு, விரக்தியுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

    நானும் என் இலக்கிய நண்பனும் கனத்த இதயத்தோடு வெளியே வந்தோம். அந்த நண்பனின் சிரிப்பு, பேச்சு, மேனரிசம் எல்லாம் அலையலையாய் என் நெஞ்சில் மோதி அடித்தன.

    கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் போன்ற கொடிய போதைப்பொருட்கள் இன்று பரவலாகப் புழக்கத்தில் உள்ளன என்னும் செய்தி, பேரதிர்ச்சியையும் பெருங்கவலையையும் நமக்கு ஏற்படுத்துகின்றன. மனித சமூகத்தின் வேர் அறுபடாமல் பாதுகாக்கப்படுவதற்கு, இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    போதைப் பொருட்கள் மாயாஜால வித்தைகளை மனதுக்குள் நிகழ்த்துகின்றன. நிஜத்தில் சாத்தியமில்லாத மாய உலகில் மிதக்கச் செய்கின்றன.

    விபரீத சிந்தனைகளைத் தூண்டுகின்றன. தன்னைத் தானே மறக்கின்ற அளவிற்கு ஒருவித பரவச நிலையில் மனதை ஆழ்த்துகின்றன. முடிவில், அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்றன.

    போதைப் பொருட்களுக்கு எதிரான எத்தனையோ சட்ட திட்டங்கள் நாட்டில் உள்ளன. ஆனால், சட்ட திட்டங்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு குடும்பமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

    பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனதில் நல்ல நல்ல விஷயங்களை ஒவ்வொரு நாளும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். போதைப் பொருட்களின் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிட வேண்டும். ஆணோ பெண்ணோ, இருபாலர்க்கும் ஒழுக்கம் அவசியம். எனவே, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    பிள்ளைகளிடம் அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அவர்களைக் கனிவுடன் கண்காணிப்பதும் மிக முக்கியம். குறிப்பாக, தீய நட்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரான வளர்ப்புதான் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும்.

    எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியமான வாழ்வின் அழகையும், அது தருகின்ற உன்னதமான இன்பங்களையும் பிள்ளைகளின் மனதில் பதியச் செய்ய வேண்டும். வாழ்க்கை ஓர் நெடிய பயணம். இந்தப் பயணம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமெனில், பாதை செம்மையானதாக இருக்க வேண்டும்.

    Next Story
    ×