என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் நாளை ஒன்றாக வரும் சிறப்பு தினம்

- கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும் என சிவபெருமானே அருளியுள்ளார்.
- மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.
மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது தமிழ்க்கடவுள் முருகனான ஞானக்குமரனுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், குமரனின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை பிரார்த்தனை செய்தால், கேட்டதையெல்லாம் தந்தருள்வான் முத்துக்குமரன். சஷ்டி என்பது முருக வழிபாட்டுக்கான, முருக விரதத்துக்கான, முருக தரிசனத்துக்கான அற்புதமான நாள்.
இதேபோல், 27 நட்சத்திரங்களில் முருகக் கடவுளுக்கான உன்னதமான நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் போற்றப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால், கிருத்திகை நட்சத்திரத்துக்கும் முருகப்பெருமானுக்கும் தொடர்பு உண்டு என்கிறது புராணம். அதேபோல், கந்தபெருமானுக்கு கார்த்திகேயன் என்றும் திருநாமம் அமைந்தது.
ஆகவே, கார்த்திகை நட்சத்திர நன்னாளில், மறக்காமல் தரிசனம் செய்து, முருகப்பெருமானை, சுப்ரமணியரை மனம் குளிரத் தரிசித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள் பக்தர்கள். கிருத்திகை விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்களும் உண்டு.
முருகப்பெருமானுக்கு உகந்த திதி சஷ்டி. முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம். இந்த இரண்டும் இணைந்து வருவது இன்னும் மகத்துவம் மிக்க பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
நாளைய தினம் (புதன் கிழமை) சஷ்டி திதியும் கிருத்திகையும் இணைந்துள்ள அற்புதமான நாள். நாளைய தினம், முருகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று செவ்வரளி மாலை வழங்கி தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகக் கடவுளுக்கு மாலை சார்த்தி, எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாராயணம் செய்யுங்கள்.
சக்திவேல் குமரனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தோஷங்கள் நிவர்த்தியாகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களை எல்லாம் நடத்தித் தந்து காத்தருள்வான் அழகு வேலவன்.
கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும் என சிவபெருமானே அருளியுள்ளார்.
கிருத்திகையன்று முருகப் பெருமானுக்கு ஆறு வகையான நைவேத்தியம் படைத்து, ஆறு வகையான மலர்களால் அர்ச்சனை செய்து, ஆறு வகையான பூஜைகள் செய்ய வேண்டும். முடியாதவர்கள் சர்க்கரை பொங்கல் மட்டும் நைவேத்தியமாக படைத்து, வழிபடலாம்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி விட்டு, முழு நம்பிக்கையுடன் கிருத்திகை விரதத்தை துவங்க வேண்டும். வேல் இருந்தால் வேல் வைத்து வழிபட்டு கிருத்திகையன்று விரதத்தை துவங்கலாம்.
முருகன் படத்திற்கு மலர்கள் சாத்தி, விளக்கேற்றி, முருகனுக்குரிய பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம், கஞ்சி ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
கிருத்திகையன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, முருகனுக்குரிய நைவேத்தியங்கள் படைத்து, பூஜை, அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும்.
கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, நிலம், வீடு, சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சகோதர பிரச்சினைகள் தீரும், சகல விதமான பிரச்சினைகள் தீரும், உயர் பதவி கிடைக்கும், செல்வம் பெருகும், நினைத்தது நிறைவேறும்.
நாரத மகரிஷி பன்னிரண்டு ஆண்டுகள் கிருத்திகை விரதத்தை கடைபிடித்தே தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து தானம் செய்பவர்களுக்கு அளவற்ற நன்மைகள் கிடைக்கும்.
கிருத்திகை விரதத்தின் போது உப்பு இல்லாத உணவு உட்கொள்வது சிறந்தது.
கிருத்திகை அன்று முருகப் பெருமானை சில குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகன் வேறு, வேல் வேறு கிடையாது என்பதால் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்பானது.
முருகனின் அருள் பெறுவதற்காக கிருத்திகை விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும்.
மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.
கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கும்.
வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முகக்கவசம், முருகனின் மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பார்கள்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகிவிடும்.
சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளை பெற வாழ்வில் அனைத்து செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.
வேல் வழிபாடு செய்பவர்கள் பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு சிவப்பு பட்டு துணி விரித்து அதில் வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் பச்சரிசி நிரப்பி வேலை அதில் சொருகி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வேல் பூஜை செய்யும் பொழுதும் காய்ச்சாத பசும் பால், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து, பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
வேல் விருத்தம் பாடலை பாடிக்கொண்டு பூஜை செய்வது இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். வேல் விருத்தம் முருகன் கையில் வைத்திருக்கும் வேலை பற்றி புகழ்ந்து பாடுவது ஆகும். அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் முதல் தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலை பாடி வேலுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி அபிஷேகம் செய்து, அவல், பொரி, கற்கண்டு நைவேத்தியம் வைத்து முருக மந்திரங்களை உச்சரித்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கிருத்திகை நட்சத்திரத்தன்று மாலையில் முருகனுக்கு 6 தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியதாக அமையும்.
கிருத்திகையும், சஷ்டியும் சேர்ந்து வரும் நாளைய தினம் முருகனை மனதார வழிபட்டு முருகனின் அருளை பெறுவோம்..