search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உழைப்பின் வியர்வை ருசிக்கும்!
    X

    உழைப்பின் வியர்வை ருசிக்கும்!

    • வியர்வை ஒரு மனிதனை ஆரோக்கிய மனிதனாக மாற்றுகிறது.
    • உடம்பும் மனதும் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லையெனில் அவை நோய்களின் கூடாரமாகிவிடும்.

    உப்புக் கரிக்கும் வியர்வையைக்கூடச் சுவைமிக்கதாக மாற்றிவிடும் உழைப்பின் மேன்மை அறியக் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    வாழப்பிறந்த ஒவ்வொருவரும் அன்றாடம் உழைக்க வேண்டும்; குறைந்தபட்சம் அவரவர் உணவுக்கேற்ற உழைப்பையாவது நல்க வேண்டும் என்று பேரறிஞர்கள் வலியுறுத்துவர். உழைப்பை 'உடல் உழைப்பு', 'மூளை உழைப்பு' என இரண்டு வகையாகப் பகுத்துக் கூறலாம். உடல் உழைப்பில், கை கால் மற்றும் உடல் அங்கங்களின் அசைவுகள் பெருகியதாகக் காணப்படும்; மிகுதியாக உடல் உழைப்புக் கூடினால், உடம்பில் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்; தசைகள் மற்றும் கை கால்களில் அசதி பெருகி, வலி உண்டாகும். ஆனால் மூளை உழைப்பில், அணிந்திருக்கும் ஆடையில்கூட அழுக்குப்படாமல், உடம்பில் ஒரு துளி வியர்வைகூட எட்டிப்பார்க்காமல், குளிர் காற்றாடி அறையில் சுகமாக உழைத்து விடலாம்; ஆனால் மூளை உழைப்பின் பக்கவிளைவுகளாக, பரபரப்பு, ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து உடம்பில் முகாமிட்டு விடக்கூடும்.

    உடல் உழைப்பைக் 'கடின உழைப்பு' என்றும் மூளை உழைப்பை 'நளின உழைப்பு' என்றும் வகைப்படுத்தி வன்மை மென்மை காணலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், மூளை உழைப்புப் பெருகி, உடல் உழைப்புக் குறைந்துவிட்டது. பொதுவாக உழைப்பு என்பதே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கின்ற கடின உழைப்பையே குறிக்கும். இன்றைய பெரும்பான்மையான உழைப்பு முறைகள் எந்திரச் சார்புடையவையாக மாறிவிட்டதால், கைகால்களில் மண்ணோ, சகதியோ, அழுக்கோ, தூசோ பட்டுவிடாமல் பணி முடித்துவிடுகிற வசதிகள் பெருகிவிட்டன. அதனால் வியர்வைக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளி மற்றும் தொழிற்சாலைகளிலும்கூட ஆள்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகிற கருவிகளின் வருகையே பெருத்துவிட்டது.

    மனிதர்கள் பணிக்குச் செல்வதற்குக்கூட நடை மற்றும் மிதிவண்டித் துணையின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன வசதிகளுக்குப் பழகி விட்டதால், துளியளவு வியர்வைக்குக்கூட உழைக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. உழைப்பு இப்போது சுகவாசிகளின் பொழுது போக்குப்போல ஆகிவிட்டது. ஆயினும் உடல் உழைப்பிற்கு வாய்ப்பின்றிப் போகிறவர்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நடைப்பயிற்சி மற்றும் மெல்லோட்டப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் வியர்வை சிந்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு மனிதருக்கும் உழைப்பு எவ்வளவு அவசியமானதோ, அதைவிட அவசியமானது அவர்கள் வியர்வை சிந்த வேண்டியதும் ஆகும். வியர்வை ஒரு மனிதனை ஆரோக்கிய மனிதனாக மாற்றுகிறது. உடல் உழைப்போ மூளை உழைப்போ எந்த உழைப்பாயினும் வியர்வை சிந்தப்படும்போது உடலுக்குள் பலவிதமான நன்மைகள் உருவாவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் உடல் உழைப்பிலோ அல்லது உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளில் ஈடுபடும்போதோ, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை இயல்பைவிட அதிகமாக இயங்கத் தொடங்குகின்றன; அதனால் நமது உடம்பின் இயல்பான வெப்பநிலை அதிகமாகிறது; அந்த அதிகமாகும் வெப்பநிலையைக் குளிர்வித்துச், சமப்படுத்துவதற்காக நமது உடம்பே வியர்வையைச் சுரக்கும் வேலையில் ஈடுபடுகிறது. தோலில் சுரக்கும் வியர்வை ஆவியாகும்போது உடம்பு குளிர்நிலையை உணர்கிறது. ஆக உழைப்பினால் உண்டாகும் வியர்வை நமது உடம்பைத், தட்ப வெப்பச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது; மேலும் உடம்பின் தோலில் பளபளப்பும் பெருகுகிறது.

    உடம்பில் படிகின்ற தூசுகள் மற்றும் நோய்க்கிருமிகள் தோல்களின் வழியே புகுந்து உடம்பைக் கெடுத்து விடாமலிருக்க வியர்வைச் சுரப்பிகள் உதவுகின்றன. தோலில் சுரக்கும் வியர்வை நமது தோல்களில் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கித், தோல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகத் திகழ்கிறது. உடம்பின் தோல்வழியே நச்சுக்கிருமிகள் வெளியேற்ற த்திற்கான சிறந்த செயலையும் வியர்வை ஆற்றுகிறது.

    வியர்வை தோன்ற உழைத்துவிட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு, சிறிதுநேர இளைப்பாறுதலில் ஈடுபடும்போது, மனம் அதீதப் புத்துணர்வு அடைவதை உணரலாம்; மனத்தில் அவ்வப்போது உண்டாகும் விரக்தி, மன அழுத்தம், தீரா ஆவல், சோம்பல்தன்மை ஆகிய அனைத்தும் வியர்வை வெளியேறியபின் இல்லாமல் போகும். அடுத்தடுத்த வேலைகள் பெரும் நெருக்கடிகளாக இருந்தாலும் அவற்றை விருப்பத்தோடு செய்வதற்கான புத்துணர்ச்சியும் புது நம்பிக்கையும் உண்டாகும். உடம்பில் தேவையற்ற பகுதிகளில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைத்து, எடையைக் குறைத்து, பொருத்தமான உருவப்பாங்கை நாம் பெறுவதற்கும் வியர்வை வெளியேற்றம் பெருமருந்தாக உதவுகிறது.

    வியர்வை என்றாலே நாற்றமடிப்பது மற்றும் உப்புக்கரிப்பது என்று நம்மில் பெரும்பாலோர் வியர்வையை வெறுக்கவும் விலக்கவும் செய்கிறோம். உண்மையில் வியர்வை என்பதே உடம்பின் கழிவுகள் மற்றும் நச்சுத்தன்மை வெளியேற்றம்தான். ஆனால் உடல் உழைப்போ உடற்பயிற்சியோ செய்யாமல், வியர்வை வெளியேற்றப்படாமல் இருந்தால்… நஷ்டம் நம் உடம்புக்குத் தானேயொழிய வேறு அடுத்தவருக்கில்லை. அதனால் அன்றாடம் நமது உடம்பில் இருந்து அவசியம் வியர்வை வெளியேற்றப்பட வேண்டும்; அதுவும் நமது சம்பாத்தியத்திற்கான உழைப்பின்மூலம் வியர்வை சிந்தப்பட்டால் அதைவிடச் சிறந்த காரியம் வேறு எதுவுமில்லை.

    ஒரு நகரில் ஒரு பெரும் செல்வந்தர். தன்னுடைய சொந்த உழைப்பின் மூலமாகவே உயந்த நிலைக்கு வந்தவர். அவருக்கு ஒரே ஒரு மகன். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லை. இளைஞன் ஆனதும் தொழில் கற்று வருவதற்காக அவனை நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு ஆறு மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார். செல்வந்தரின் மகன் அந்த நிறுவனத்தில் எந்தவித ஈடுபாடும் இல்லாமல், எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஆறு மாதங்களைக் கடத்திவிட்டு வீடு திரும்பினான். செல்வந்தரின் நண்பர், வேலை செய்யாவிட்டாலும் ஆறுமாதத்திற்கான கூலியாக ஒரு பவுன் தங்கக் காசைக் கொடுத்தனுப்பினார். வீட்டுக்கு வந்த மகன், தன் தந்தையிடம் அந்த ஒரு பவுன் தங்கக் காசைத் தந்தான்; மகனிடமிருந்து காசை வாங்கிய தந்தை அலட்சியமாக அதைக் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தார்; எந்தச் சலனமுமில்லாமல் மகன் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

    அடுத்து ஒரு வாரம் கழித்து, அந்தச் செல்வந்தர், தன்னுடைய இன்னொரு நண்பனின் நிறுவனத்திற்குத் தன் மகனை மூன்றுமாத வேலைக்கு அனுப்பி வைத்தார். செல்வந்தரின் மகனோ அங்கும் வழக்கம்போல எந்த வேலையும் செய்யாமல் மூன்றுமாதம் கழிந்தவுடன் வீடு திரும்பினான். இந்த முறை அவன் வேலை பார்த்ததற்குக் கூலியாக இரண்டு பவுன் தங்க நாணயங்களைப் பெற்று வந்தான். தந்தையிடம் மகன் அந்த நாணயங்களைக் கொடுக்கத், தந்தையும் வழக்கமான அலட்சியத்தோடு அவற்றை வாங்கிக் குப்பைத் தொட்டியிலேயே வீசியெறிந்தார். மகனும் எதிர்வினை எதுவுமின்றித் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

    அடுத்த ஒரு வாரத்தில், ஒரு மாதம் வேலைகற்று வருவதற்காக அறிமுகமில்லாத ஒரு நபர் நடத்தும் நிறுவனத்திற்கு மகனை அனுப்பி வைத்தார் செல்வந்தர். அங்கு மகனைப் பாடாய்ப்படுத்திக், கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினார் புதிய முதலாளி. இதுவரை இருந்த இரண்டு முதலாளிகளும் நண்பனின் மகன் என்பதால் வேலை வாங்காமல் கூலியைமட்டும் கொடுத்தனுப்பினர். ஆனால் இவரோ நன்றாக வேலையை வாங்கிக் கொண்டு, அரைப் பவுன் தங்க நாணயத்தைக் கூலியாகக் கொடுத்தனுப்பினார். வீட்டுக்கு வந்த மகன், தன் தந்தையிடம் தான் பெற்றுவந்த கூலி அரைப் பவுன் தங்க நாணயத்தை ஆவலாகக் கொடுத்தான். அதை அலட்சியமாகப் பெற்றுக்கொண்ட தந்தை வழக்கம் போலக் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்தார்.

    இதைப் பார்த்தவுடன் மகனுக்கு வந்ததே பாருங்கள் கோபம்! அதை எந்த அளவைக் கருவியையும் வைத்து அளந்துவிட முடியாது. "உழைப்பின் அருமை உங்களுக்குத் தெரியுமா?. இந்த அரைப் பவுனைச் சம்பாதிப்பதற்காக இந்த ஒரு மாதகாலம் நான் எப்படி உழைத்தேன் தெரியுமா?, உங்களுக்கு எங்கே தெரியும்!. தெரிந்திருந்தால் அந்தக் காசை வீசியெறிந்து என் உழைப்பை உதாசீனப் படுத்தியிருப்பீர்களா?" என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டான். மகன் திட்டத் திட்டத் தந்தைக்கு மகிழ்ச்சிப் பிரவாகம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடியது.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    குப்பையில் வீசிய அரைப் பவுனை, மரியாதையோடு தேடியெடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, " மகனே! இதற்குமுன் நீ ஒரு பவுன், இரண்டு பவுன் என்று மதிப்பில் கூடிய தங்க நாணயங்களைக் கூலியாகப் பெற்றுவந்து இரண்டுமுறை என்னிடம் தந்தபோது அவற்றை அலட்சியமாக வீசியெறிந்தேன்; அப்போதெல்லாம் நீ கோபப்படவில்லை. இப்போது இந்த அரைப் பவுனுக்கு மட்டும் ஏன் இத்தனை கோபம்?" கேட்டார் தந்தை. "அந்தக் காசுகளெல்லாம் நான் உழைக்காமல் பெற்று வந்தவை; ஆனால் இந்த அரைப் பவுனோ நான் உழைத்துச் சம்பாதித்தது. இந்த நாணயம் தங்கத்தால் உருவானது அல்ல; எனது உழைப்பின் வியர்வையினால் வார்த்தெடுக்கப்பட்டது" என்றான் மகன்." மகனே! நம்மிடம் உள்ள செல்வம் நம் உழைப்பால் உருவாக்கப்பட்டிருந்தால்தான் அதன் உண்மை மதிப்பையும் மரியாதையையும் நாம் உள்ளபூர்வமாக உணர்ந்திருப்போம்!. அதற்காக நான் நடத்திய சிறு தேர்வுதான் இந்த உதாசீன நாடகம்" என்றார் தந்தை.

    உலோகங்களில் இரும்பு வலிமையானது தான் என்றாலும் அது பயன்படுத்தப்படாதபோது துருப்பிடித்து அழிந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதைப்போல உடம்பும் மனதும் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லையெனில் அவை நோய்களின் கூடாரமாகிவிடும். மெய் வருந்த உழைப்பதற்கு எப்போதும் கூலி உண்டு; அது பொருள்களாக, செல்வமாக, காசு பணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சம்பளத்தோடு உடல் உழைப்பின் பரிசாக நமக்குக் கிடைக்கும் அரிய அமிர்தம் வியர்வையே ஆகும். வியர்வை உப்புக்கரிக்கும் என்றாலும் அது தரும் நலமான உதவிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அயராத உழைப்பினால் நிறை செல்வம் ஈட்டலாம்!

    ஆனால் வியர்வை சொட்டச் சொட்ட உழைப்பதனால் நீளாயுள் கைகூடும்!

    தொடர்புக்கு,

    94431 90098

    Next Story
    ×