search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நிகரற்ற சக்தியளிக்கும் நீராகாரம்!
    X

    நிகரற்ற சக்தியளிக்கும் நீராகாரம்!

    • சரியான அரிசியில் சரியான முறையில் நொதிக்க வைக்கப்பட்ட நீராகாரம் உடலுக்கு அளப்பரிய ஆற்றலை வழங்க வல்லது.
    • செரிமானத்திற்கு உதவிகரமான நுண்ணுயிரிகள் நீராகாரத்தில் மிகுதியாக உள்ளன.

    இளவேனிற் காலம் இது. காலை வெயிலே உரத்து அடிக்கத் தொடங்கி விட்டது. நமது வாழ்க்கைத் தேவைக்கு உரிய அன்றாடப் பணிகளைக் கூட துவங்குவதற்குள் ஆயாசமாகி விடுகிறது. அடிக்கிற வெயிலையும், சாலை நெரிசலையும் முண்டி மோதிக் கடந்து, வேலையில் கை வைப்பதற்குள் "இப்பவே கண்ணக் கட்டுதே" என்றாகி விடுகிறது. காரணம் என்ன?

    வெளியேறும் வியர்வையால் உடலின் நீர் வற்றி விடுகிறது. உண்ட உணவும் சூடான இட்லி, தோசை, பூரி அல்லது காலையில் வடித்த சுடுசோறு. ஆக உள்ளுக்குள் போன உணவும் உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. போக புறச்சூழலும் வெப்பதைக் கொடுக்கிறது. எனவே சோர்வு தட்டுகிறது. சோர்வை நீக்க என்ன செய்யலாம். "சூடா ஒரு டீ போடுப்பா" அதானே நாமெல்லோரும் பரவலாகச் செய்வது.

    டீயைக் குடித்தால் என்ன நடக்கும்? காய்ச்சிய பால், காய்ச்சிய நீரில் வடித்த தேநீர், சர்க்கரை ஆகிய அனைத்தும் நம் ரத்தத்தில் ஏறி ரத்தவோட்டத்தை விரைவுபடுத்தும். சுறுசுறுப்பு அடைவதென்னவோ உண்மை தான். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை நம்மில் பலரும் உணர்வது இல்லை. தற்காலிக சுறுசுறுப்பிற்குப் பின்னர் மந்தத்தன்மை உண்டாகும்.

    நமக்கு குறிப்பாக மித வெப்பமண்டல வாசிகளாகிய நமக்கு வேண்டியது உடலில் மேலும் மேலும் வெப்பமூட்டும் உணவல்ல. மாறாக ஆற்றல் தரக்கூடிய குளிர்ச்சியான உணவு. இதனை முன்னோர்கள் அறிவுப்பூர்வமாக அல்லாது உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள். உணர்ந்ததையே காலங்காலமாகப் பின்பற்றி வந்தார்கள். ஆம் அந்த வகையில் நமது உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக அமைந்தவற்றில் மிகவும் முதன்மையான உணவு நீராகாரம்.

    நீர் எப்படி ஆகாரமாகும் என்ற கேள்வி நம்மில் சிலருக்கு எழலாம். அது வெறும் நீர் மட்டுமேயல்ல. சோற்றின் சாரத்தைச் சுமந்த நீர். அதனால் தான் நீர் கூட்டல் ஆகாரம், நீராகாரம் என்றனர்.

    புதிய நுகர்வு உற்பத்தி சார்ந்த வாழ்க்கை முறையில் இன்றைய இளம் தலைமுறையினர் நீராகாரத்தை அறிந்திருப்பது அரிதுதான். அவர்களுக்காகச் சிறு விளக்கம். முன்னாள் மாலை (இரவல்ல) சோற்றை வடித்து எடுத்த நீரினை ஆறிய சோற்றில் ஊற்றி வைத்தால் காலையில் சோறும் வடி நீரும் இணைந்து வினைபுரிந்து நொதித்து வேறுவொரு தன்மையை அடைகிறது. அது நீர் வடிக்கப்பட்ட சோற்றின் சத்துக்கூறுகளையும் கொண்டிருக்காது, சோற்றில் இருந்து வடிக்கப்பட்ட வடிநீரின் தன்மையையும் கொண்டிருக்காது. இரண்டிற்கும் மாறாக ஒன்றுக்கொன்று இயைந்து நுண்ணுயிரிகள் (நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்) பல்கிப் பெருகி புதிய ஆற்றலை, அதாவது செரிமான மண்டலம் முழுமைக்கும் உடலில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளாமல் அதேநேரத்தில் வேறெந்த உணவும் அளிக்காத, அளிக்க முடியாத ஊக்கத்தைச் சட்டென்று அளிக்கும். அதுவே நீராகாரத்தின் சிறப்பு.

    அதாவது சோறுண்ணும்போது அரிசியின் அடிப்படைச் சுவையான இனிப்பும், துவர்ப்பும் கலந்த எரிமச் சத்தாகிய கார்போஹைடிரேட்டினை அளிக்கிறது. அதேநேரத்தில் அரிசியின் மாவுப்பண்பு இரவு முழுதும் ஊறிப் புளித்திருப்பதால், தசைநார்களுக்கு ஊட்டம் அளிக்கும் புரதச் சத்தையும் அளிக்கிறது. அரிசியின் மேலோடு ஊறலில் பிரிந்து நார்ச்சத்தும் (மென்காரம்) இழையோடி உள்ளது. ஆக இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய ஆதாரச் சத்துக்கள் உடனடியாக ரத்தத்தில் ஏற்றப்படுகிறது.

    நீராகாரம் நீர்த்த தன்மையில் இருப்பதால் வழக்கமான செரிமான முறைப்படி இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பல்வேறு கட்டங்களாக சத்துக்கள் பிரிக்கப்பட்டு ரத்தத்தில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. மாறாக முதல் மிடறு நீராகாரத்தை வாயில் வைத்த நிமிடத்திலேயே ரத்தத்தின் செல்கள் (உயிரணுக்கள்) மட்டுமல்லாது சத்துக்கள் தேவைப்படும் உடலின் செல்கள் அனைத்தும் வீரியமிகுந்த நீராகாரத்தின் சத்துக்களை உள்வாங்கிக் கொள்கின்றன.

    அதிலும் ஆறின சோற்றையும், சோற்றின் வடிநீரையும் மண்பாத்திரத்தில் கலந்து வைத்தால் வினையாதலின் போது அதற்குத் தேவையான காற்றினை மண்பாண்டத்தின் நுண்துளைகள் வாயிலாக ஈர்த்துக் கொள்ளும். நொதித்த நீராகாரத்தில் காற்றுக்குமிழ்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் குமிழ்கள் வினைபுரிதலின் போது மண் ஓட்டின் வாயிலாக நீர் ஈர்த்துக் கொண்ட காற்றின் வெளிப்பாடே ஆகும்.

    நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களின் கனிமச் சத்துக்கள் சமைத்த உணவில் ஊடுறுவுவது தவிர்க்க முடியாததே. அந்த வகையில் அவ்வுலோகத்தின் பண்பு உணவோடு சேர்ந்து நமது உடலில் மிகுந்து அதுவே உடலியக்கத்திற்கு மைக்ரான் அளவிலேனும் தீங்கு விளைவிக்கும். ஆனால் மண்பாண்டம் பயன்படுத்தும்போது அத்தீவிளைவுகள் ஏற்படாது.

    சரியான அரிசியில் சரியான முறையில் நொதிக்க வைக்கப்பட்ட நீராகாரம் உடலுக்கு அளப்பரிய ஆற்றலை வழங்க வல்லது. முப்பது வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு நிலத்தையும், வேளாண்மையையும் சார்ந்திருந்தனர். இன்றளவிற்கு இயந்திரப் பயன்பாடு அதிகமில்லாத அக்காலத்தில் உடலுழைப்பே முதன்மையான ஆதார ஆற்றல் ஆகும். மாட்டுக்கு நிகராக மனிதர்கள் கலப்பையை அழுத்தி நிலத்தை உழுது பயிரிட்டார்கள். காலையில் எழுந்து காபியோ டீயோ குடித்து விட்டு உழச் சென்றால் காட்டினைச் சென்றடையும் முன்னரே சோர்ந்து போயிருப்பார்கள். இன்று அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்த உடனே டீயும் பிஸ்கோத்தும் கொண்டு வந்து வைப்பது போல அன்றைக்கு யார் காட்டில் அவற்றைக் கொண்டு வந்து பரிமாறினார்கள்.

    உழவர் காலையில் எழுந்து வாய் கொப்புளித்ததும் மாட்டைப் பூட்டினால் கலயத்தின் அடியாழத்தில் நான்கைந்து கைப்பிடி பழஞ்சோறு பருக்கைகளாகக் கிடக்கும். முக்கால் கலயத்திற்கு உப்புச்சுவை கூடிய நீராகாரம் தளும்பிக் கொண்டிருக்கும். அதில் உரித்த சின்ன வெங்காயங்கள் ஐந்தாறு சங்கரா மீன் குட்டிகளைப் போல நீந்திக் கொண்டிருக்கும். துண்டினை சும்மாடாகச் சுருட்டி கலயத்தைத் தலையில் ஏற்றினால் ஒருமைலோ இரண்டு மைலோ நடந்து, கரகாட்டக்கார ராமராஜனை விட சாதுர்யமாக நளினமாக கலயத்தைக் காட்டில் கொண்டு வந்து சேர்ப்பார் உழவர்.

    வேலையில் கால் பதிக்காமல் உணவில் கை வைப்பது இயற்கை அறத்திற்கு எதிரான ஒன்று என்ற எண்ணம், அவரது மரபணுவோடு கலந்தவொன்று. எனவே ஏரைப் பூட்டி ஆறுசால்கள் ஓட்டிய பின்னர், கதிரொளி கண்களைக் கூசச்செய்யும் காலை ஒன்பது மணிசுமாருக்கு கலயத்தைத் தூக்கி வாயில் அருவி போல நீரைச் சரிப்பார். நீரின் குளுமை உடலெங்கும் பரவிய பின்னர் சோற்றுருண்டையை நையப் பிசைந்து சோறும் நீருமாக வாயில் வைத்து வெங்காயத்தைக் கடிப்பார். இப்படி ஒரு நான்கு வாய் போதும், உடலும், மனசும், உயிரும் நிறைவு கொள்ளும். அதே வேகத்தில் எழுந்து உச்சிப் பொழுது சரியத் துவங்கும் வேளையில் மீண்டும் மீதமுள்ள சோற்றையும் நீரையும் பருகி, உச்சியைத் தைக்கும்படிக்கு வெங்காயத்தைக் கடித்துண்ண மாடுகள் இளைப்பாறி இருக்கும். மீண்டும் மேழியைப் பிடித்தால் அந்திக்குச் சற்று முன் கலப்பை நுகத்தடியில் ஏறும். அதற்குள் இரண்டு மாடுகளும், ஒரு மனிதரும் சுமார் கால் ஏக்கரையாவது உழுது மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்திற்குப் புத்துயிர் கூட்டி இருப்பார்கள்.

    போப்பு, 96293 45938

    நிலத்தை உழுது போடுவதற்காக சக்தியைக் கொடுத்தது எது என்றால் நான்கு லிட்டர் பெட்ரோலோ, மின் சக்தியோ, அவற்றிற்கு நிகரான மின் இயந்திர விசையோ அல்ல. மாறாக ஒரு கலய நீராகாரமும் ஐந்தாறு சின்ன வெங்காயங்களுமே ஆகும். அவ்வுழவரினுடையது அடுத்த தலைமுறையினரின் கற்பனைக்கும் எட்டாத உழைப்பு ஆகும்.

    உழைப்பதற்காக ஆற்றல் இன்றைய தலைமுறைக்கு இல்லாதது மட்டுமல்ல, வழக்கமாக உண்ணும் உணவை செரிக்கும் தன்மையையும் முற்றாக இழந்து விட்டிருக்கின்றனர்.

    நாம் உண்ணும் உணவில் உடலுக்கு மிகையான கூறுகளை உள்வாங்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், மிகைப்புளிப்பினை (அசிடிடி) முறிக்கச் செய்யவுமான நுண்ணுயிரிகள் நமது உடலில் இயற்கையாகவே இருக்கும். குறிப்பாகத் தாயின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தை வெளியேறும் பொழுது தோலில் மேற்பூச்சாக பூசப்படும். பசைத் தன்மையுடைய இப்பூச்சு உலர தோலின் வழியாகப் பாக்டீரியாக்கள் உள்ளீர்க்கப்பட்டு இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய செரிமானப் பகுதிகளில் நிலைபெற்றிருக்கும். அறுவைச் சிகிச்சையில் பிறந்த குழந்தைகளுக்கு இயல்பில் கிடைப்பது குறைவாகவே இருக்கும்.

    தவறான வறள் தன்மையுடை அல்லது அதீத ரசாயனக் கலப்பு உணவுகளை நாம் உட்கொள்ளும்போது இந்த நுண்ணுயிரிகள் அவற்றை உள்வாங்கி இறந்து விடும். பின் மலத்தின் வழியாக வெளியேறி விடும். இவ்வாறு வெளியான பாக்டீரியாக்களை உள்ளே இருக்கும் பாக்டீரியாக்கள் உடனடியாகப் பல்கிப் பெருகி ஈடுசெய்து கொள்ளும். இந்தப் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் கோடி என்கிறார்கள் உடலியளார்கள். ஆனால் தவறான உணவுப்பழக்கமே ஒருவரிடம் தொடர்ந்து இருக்குமானால் இப்பாக்டீரியாக்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்வது கடினமாகி விடும்.

    இரவு தூக்கம் கெடுக்கிறவர்கள், கடும் உழைப்பிற்கு உள்ளாக்கிக் கொள்வோர், மருந்து, மதுபானம் எடுத்துக் கொள்வோர்க்கு இந்த எண்ணிக்கை குறையும். அப்பொழுது மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை, வயிறு உப்புதல், நெஞ்செரிச்சல், உமட்டுதல் போன்ற உபாதைகள் நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கும்.

    செரிமானத்திற்கு உதவிகரமான நுண்ணுயிரிகள் நீராகாரத்தில் மிகுதியாக உள்ளன. காலையில் காபி, டீ போன்ற ஊக்க பானங்கள் அருந்துவதை விட, நீராகாரம் குடிப்பது நமது உடல்நலனுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக பித்தப்பைக் கல், சிறுநீரகக்கல் போன்றவை மிக இளம் வயதிலேயே தோன்றுகிறது. இதற்குக் காரணம் தற்கால உணவுமுறையே ஆகும். இதனைத் தவிர்க்க நீராகாரம் அருந்துதல் மிகவும் நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிறுகுடலில் மிகுந்திருப்பதைப் பொறுத்தே உடலின் நோய் எதிர்ப்புத் திறன் நிலைத்துள்ளது.

    பிரசர் குக்கரில் அவிக்கும் சோறு, நீராகாரம் தயாரிக்க ஏற்றதல்ல. சன்னமான அரைவேக்காட்டு வெள்ளை அரிசிச் சோற்றில் நீரூற்றி வைத்தால் அது ஈளை ஈளையாகவே வரும். முழுப் புழுங்கலரிசி, நல்ல பழுப்பு நிறத்திலான கொட்டை அரிசி, அரசு வழங்கும் பருமனான அரிசியை மாலை நேரத்தில் நிதானமாக வேக விட்டு வடித்து சோற்றினை ஆற விட வேண்டும். வடித்த சோற்றுடன் வடித்த நீரையும் போட்டு சிறிதளவு கல் உப்புப் போட்டுத் (காற்றுப்புக) துணியால் மூடிவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும். கையைச் சோப்புப் போடாமல் கழுவி விட்டு பழைய சோற்றினுள் கையை விட்டு நன்றாகப் பிசைந்து விட வேண்டும். கையில் உள்ள நுண்ணுயிரிகள் கலவையுடன் சேர நொதித்தல் முன்னிலும் விரைவாக நடக்கும். ஒருமணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை பிசைந்தால் கிட்டத்தட்ட கூழ் பதத்தில் இருக்கும். இப்பொழுது இந்த நீரை நிதானமாகப் பருக வேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் வயிற்றில் தேக்கமுற்ற மலமும் சரி, வெப்ப மிகுதியால், சிறுநீரகத்தின் வடிப்பானின் திறன் குறைவால் சரிவர வெளியேறாத சிறுநீரும் சரி வேகமாகப் பிரிவதை நன்கு உணர முடியும்.

    இதற்குப் பின்னான பசி ஆழமாக, உடலுக்கு உகந்த விதத்தில் இருக்கும். அகவெப்பம் தணிந்திருக்க நீராகாரக் குளுமையால் உடல் தன்னியல்பாகவே குளிர்வுச் சூழலில் (ஏசியில்) இருப்பது போல இருக்கும்.

    Next Story
    ×